1. பின் இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் ஏலிமை விட்டுப் பயணமாகி, எகிப்து நாட்டினின்று புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஏலிமுக்கும் சீனாயிக்கும் நடுவிலிருக்கும் சின் என்னும் பாலைவனம் வந்து சேர்ந்தனர்.
2. அந்தப் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களின் கூட்டத்தார் எல்லாரும் மோயீசனையும் ஆரோனையும் பகைத்து முறுமுறுத்துப் பேசினர். இஸ்ராயேல் மக்கள் அவர்களை நோக்கி,
3. நாங்கள் எகிப்து நாட்டிலேயே ஆண்டவருடைய கையாலே செத்துப் போயிருப்போமாயின் தாவிளை. அவ்விடத்திலே நாங்கள் இறைச்சி நிறைந்த பாத்திரங்களைண்டை உட்கார்ந்து, வயிறார அப்பம் சாப்பிட்டு வருவோம். இந்த மக்களெல்லாரையும் பட்டினிபோட்டுக் கொல்லவேண்டுமென்று அல்லவோ நீங்கள் எங்களை ஆள் நடமாட்டமில்லாத இந்த இடத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று சொன்னார்கள்.
4. ஆண்டவர் (அதனைக்) கேட்டு மோயீசனை நோக்கி: இதோ நாம் உங்களுக்கு வானத்தினின்று அப்பங்கள் பொழிவிப்போம். மக்கள் வெளியே போய், ஒவ்வொரு நாளும் அந்நாளுக்குப் போதுமானதை மட்டும் சேகரிக்கட்டும். அதன்மூலம் அவர்கள் நமது நியாயச்சட்டப்படி நடப்பார்களோ அல்லவோ என்று அவர்களைச் சோதித்துப் பார்ப்போம்.
5. ஆறாம் நாளில், அவர்கள் நாள்தோறும் சேகரிப்பதைப் போல் இரண்டு மடங்கு அதிகமாய்ச் சேகரித்து, அதனை ஆயத்தப்படுத்தி வைக்கக் கடவார்கள் என்றார்.
6. இவ்வாறு மோயீசனும் ஆரோனும் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி: ஆண்டவரே எகிப்து நாட்டினின்று உங்களை விடுவித்தார் என்று இன்று மாலை அறிந்து கொள்வீர்கள்.
7. மேலும், நாளை விடியற்காலை ஆண்டவருடைய மாட்சியைக் காண்பீர்கள். உண்மையிலேயே அவருக்கு விரோதமாய் நீங்கள் காட்டிய முறுமுறுப்புக்களை ஆண்டவர் கேட்டிருக்கின்றார். நீங்கள் எங்கள் மேல் முறுமுறுத்துப் பேச நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
8. மீண்டும் மோயீசன்: மாலையில் நீங்கள் உண்பதற்கென்று ஆண்டவர் உங்களுக்கு இறைச்சிகளையும், நாளை விடியற்காலை நீங்கள் (உண்டு) திருப்தி அடைவதற்கென்று அப்பங்களையும் கொடுப்பார். நீங்கள் முறுமுறுத்து அவருக்கு விரோதமாய்ச் சொன்ன குறையெல்லாம் அவர் செவிக்கு எட்டிற்று. நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறைப்பாடு, எங்களுக்கு அல்ல, ஆண்டவருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
9. மேலும், மோயீசன் ஆரோனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து: நீங்கள் ஆண்டவருடைய சந்நிதிக்கு வாருங்கள்: உங்கள் முறுமுறுப்புக்களை அவர் கேட்பார் என்று சொல்லுவாய் என்றார்.
10. ஆரோன் இஸ்ராயேல் மக்கள் அனைவரோடும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலைவனப் பக்கம் திரும்பிப் பார்த்தனர். அந்நிமிடமே ஆண்டவருடைய மாட்சி மேகத்திலே காணப்பட்டது.
11. ஆண்டவர் மோயீசனை நோக்கி:
12. நாம் இஸ்ராயேல் மக்களின் முறுமுறுப்புக்களைக் கேட்டுக்கொண்டோம். நீ அவர்களை நோக்கி, மாலையில் இறைச்சிகளை உண்பீர்கள்; விடியற்காலையில் அப்பங்களைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13. அவ்வாறே மாலையில் காடைகள் வந்து விழுந்து பாளையத்தை மூடிக்கொண்டன. விடியற்காலையில் பாளையத்தைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது. பூமியை மூடிக்கொண்டபின்னர்,
14. பாலைவனத்தில் உரலிலே குத்தப்பட்டதும் உறைந்த பனிக்கட்டியைப் போன்றதுமான ஒரு பொருள் காணப்பட்டது.
15. இஸ்ராயேல் மக்கள் அதைக் கண்டு, அது இன்னதென்று அறியாமையால் ஒருவரை ஒருவர் நோக்கி: மன்னு?-- அதாவது, இது யாதோ?- என்று சொன்னார்கள். அப்பொழுது மோயீசன் அவர்களைப் பார்த்து: இது ஆண்டவர் உங்களுக்கு உண்ணத் தந்தருளிய அப்பம்.
16. ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறது என்னவென்றால்: அவரவர் உண்ணும் அளவுக்குத் தக்கபடி அவரவர் எடுத்துச் சேர்த்துக் கொள்ளக்கடவர். உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் குடியிருக்கிறார்களோ (அத்தனை) ஆளுக்கு ஒவ்வொரு கொமோர் எடுத்து, அத்தனையும் சேர்த்து வருவீர்கள் என்றார்.
17. இஸ்ராயேல் மக்கள் அவ்வாறு செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேகரித்த பின், அதைக் கொமோரால் அளந்தனர்.
18. மிகுதியாய்ச் சேகரித்தவனுக்கு அதிகம் இருந்ததும் இல்லை; கொஞ்சமாய்ச் சேகரித்தவனுக்குக் குறைவாய் இருந்ததும் இல்லை. ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.
19. பிறகு மோயீசன்: ஒருவனும் விடியற்காலை வரை அதிலே ஒன்றும் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது என்று சொன்னார்.
20. இருந்தும் மோயீசன் சொல்லைக் கேளாமல் சிலர் அதில் சிறிது விடியற்காலை வரை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் அது பூச்சி பிடித்தது. பிறகு மக்கிப் போயிற்று. மோயீசன் அவர்கள் மீது கோபம் கொண்டார்.
21. அவர்கள் அதை விடியற்காலை தோறும் அவரவர் உண்ணும் அளவுக்குத் தக்கதாய் அவரவர் சேகரிப்பர். வெயில் ஏறவே அது உருகிப் போகும்.
22. ஆறாம் நாளிலோ அவர்கள் ஆள் ஒன்றுக்கு இரண்டு கொமோர் வீதம் இருமடங்கு உணவு சேகரித்தனர். பின் சபையின் தலைவர் எல்லாரும் மோயீசனிடம் வந்து அதனை அறிவித்தனர்.
23. அவர் அவர்களை நோக்கி: நாளை ஆண்டவருக்குக் காணிக்கையான ஓய்வு நாளாம். செய்ய வேண்டியதை எல்லாம் இன்று செய்யுங்கள்; சமைக்க வேண்டியதையும் சமைத்துக் கொள்ளுங்கள்; பின் மீதியாய் இருப்பதையெல்லாம் நாளைக் காலைவரை வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் சொன்ன வாக்கு இதுவே என்றார்.
24. அவர்கள் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்ய, அது நாறவும் இல்லை; பூச்சி பிடிக்கவும் இல்லை.
25. அப்போது மோயீசன்: இன்று ஆண்டவருடைய சபாத்தாகையால், அதைச் சாப்பிடுங்கள். இன்று நீங்கள் அதனை வெளியிலே காணப் போகிறதில்லை.
26. ஆறு நாளும் அதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏழாம் நாள் ஆண்டவருடைய ஓய்வு நாளானதால் அன்று அது அகப்படாது (என்றார்).
27. ஏழாம் நாளில் மக்களுள் சிலர் அதைச் சேகரிக்கும்படி வெளியே சென்றார்கள். ஆனால் ஒன்றையும் காணவில்லை.
28. ஆண்டவர் மோயீசனை நோக்கி: நம்முடைய கட்டளைகளையும் சட்டங்களையும் அனுசரிக்க எதுவரையிலும் மனமில்லாமல் இருப்பீர்கள்?
29. பாருங்கள், ஆண்டவர் சபாத் நாளை உங்களுக்கு அருளினதனால் அல்லவோ ஆறாம் நாளிலே உங்களுக்கு இருமடங்கு உணவு தந்தருளினார்? ஏழாம் நாளிலே உங்களில் எவனும் தன் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருக்கவேண்டும் (என்றார்).
30. அவ்வாறே மக்கள் ஏழாம் நாளில் ஓய்வு கொண்டாடினர்.
31. அவ்வுணவிற்கு இஸ்ராயேல் மக்கள் மன்னா என்று பெயரிட்டனர். அது கொத்தமல்லி போல் வெண்ணிறம் உள்ளதாய் இருந்தது. மாவும் தேனும் கலந்தால் எவ்விதமான சுவை இருக்குமோ அவ்விதமான சுவையே அதற்கு இருந்தது.
32. அப்போது மோயீசன்: ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: உங்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்டு வந்த போது பாலைநிலத்திலே எவ்வித உணவு உங்களுக்கு அருளினோமென்று உங்கள் சந்ததியார் கண்டறியத்தக்கதாக, மன்னா என்னும் அவ்வுணவில் ஒரு கொமோர் எடுத்து அவர்களுக்காக அதைப் பாதுகாத்து வரவேண்டும் என்று சொன்னார் என்றார்.
33. பின் மோயீசன் ஆரோனை நோக்கி: நீ ஒரு கலயத்தை எடுத்து மன்னாவிலே ஒரு கொமோர் அதிலே போட்டு, உங்கள் தலைமுறைதோறும் காப்பாற்றுவதற்கு ஆண்டவர் திருமுன் வைக்கக்கடவாய் என்றார்.
34. இதுவே ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்த கட்டளையாகும். பின் ஆரோன் அந்தக் கலயத்தைப் பிற்காலத்துக்கென்று ஆண்டவர் சந்நிதியிருக்கும் கூடாரத்திலே வைத்தார்.
35. அதன் பின் இஸ்ராயேல் மக்கள் தாங்கள் குடியேற வேண்டிய நாட்டிற்கு வரும் வரை நாற்பது ஆண்டு அளவாய் மன்னாவை உண்டனர். அவர்கள் கானான் நாட்டு எல்லையில் காலெடுத்து வைக்குமட்டும் அந்த உணவை உண்டுவந்தனர்.
36. ஒரு கொமோர் என்பது ஏப்பியிலே பத்தில் ஒரு பங்கு.