1. ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களிடம் சென்று அவர்கள் திரும்பி மக்தலமுக்கும் கடலுக்கும் நடுவிலும், பேல்செப்போனுக்கு அண்மையிலும் உள்ள பிகாயிரோட்டுக்கு எதிரே பாளையம் இறங்கும்படி சொல்லுவாய். அதன் அருகே, கடலோரத்தில் பாளையம் இறங்குவீர்கள்.
3. ஏனென்றால், பாரவோன் இஸ்ராயேல் மக்களைக்குறித்து: இவர்கள் கரையாலே நெருக்கப்பட்டிருக்கிறார்களே; பாலைவனமும் இவர்களை அடைத்திருக்கிறதே என்று சொல்லுவான்.
4. நாமோ அவன் மனத்தைக் கடினப் படுத்துவோமாதலால், அவன் உங்களைப் பின்தொடர்வான். அப்பொழுது நாம் அவனாலும், அவனுடைய எல்லாப் படைகளாலும் மாட்சி அடைவோம். அதனால், நாமே ஆண்டவரென்று எகிப்தியர் அறிவர் என்று திருவுளம்பற்றினார். (இஸ்ராயேலரும்) அவ்விதமே செய்தார்கள்.
5. அப்படியிருக்க, மக்கள் ஓடிப் போய்விட்டார்களென்று பாரவோன் அரசன் அறியவந்தான். உடனே, அவர்களுக்கு விரோதமாய்ப் பாரவோனுக்கும் அவனுடைய ஊழியக்காரர்களுக்கும் மனம் மாறுபட்டுப் போயிற்று. அவர்கள்: நம் வேலைகளைக் செய்யாதபடி நாம் அவர்களைப் போகவிட்டது தவறல்லவா என்றார்கள்.
6. அவ்வாறு சொல்லி, தன் தேரைப் பூட்டி, தன் படைவீரர் எல்லாரையும் தன்னோடே கூட்டி, நல்ல முதல் தரமான அறுநூறு தேர்களையும்,
7. எகிப்திலிருந்த பலவித வண்டிகளையும் தயார்ப்படுத்தி, எல்லாப் படைத் தளபதிகளையும் சேர்த்துக் கொண்டான்.
8. அதன்பின் ஆண்டவர் எகிப்து மன்னனான பாரவோனின் மனத்தைக் கடினப்படுத்தியமையால், அவன் இஸ்ராயேல் மக்களைப் பின்தொடர்ந்தான். அவர்களோ மிக வலுவுள்ள கையால் ஆதரிக்கப்பட்டுப் புறப்பட்டிருந்தார்கள்.
9. எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து போய், அவர்கள் கடலோரமாய்ப் பாளையம் இறங்கினதைக் கண்டு கொண்டார்கள். பாரவோனின் குதிரைகளும் தேர்களும் படைகள் எல்லாமே பேல்செப்போனுக்கு எதிரேயுள்ள பிகாயிரோட்டிலே நின்று கொண்டன.
10. பாரவோன் அணுகி வரவே, இஸ்ராயேல் மக்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தங்களுக்குப் பிறகாலே எகிப்தியர் இருக்கக் கண்டு, மிகவும் பயந்து, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினர்.
11. பின் மோயீசனை நோக்கி: எகிப்தில் கல்லறைகள் இல்லாதிருந்ததனாலோ நீர் பாலைவனத்திலே சாகும்படி எங்களைக் கூட்டி வந்தீர்? என்ன செய்யக் கருதி எங்களை எகிப்தினின்று புறப்படச்செய்தீர்?
12. நாங்கள் எகிப்திலே உமக்குச் சொன்ன சொல் இதுவே அன்றோ? எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுப்போம் என்று சொன்னோம் அல்லவா? பாலைநிலத்தில் சாவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேலை செய்வது எங்களுக்கு நலமாய் இருக்குமே என்றார்கள்.
13. அப்போது மோயீசன் மக்களை நோக்கி: அஞ்ச வேண்டாம். நீங்கள் நின்று கொண்டே இன்று ஆண்டவர் செய்யப்போகிற மகத்துவங்களைப் பாருங்கள். உண்மையிலே நீங்கள் இப்போது காண்கிற இந்த எகிப்தியைரை இனி எந்தக் காலத்திலுமே காணப்போவதில்லை.
14. ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார். நீங்கள் பேசாதிருங்கள் (என்றுரைத்தார்).
15. பிறகு, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ நம்மிடம் முறையிடுகிற தென்ன? இஸ்ராயேல் மக்களைப் புறப்பட்டுப் போகச் சொல்.
16. நீயோ உன் கோலை ஓங்கி, உன் கையைக் கடலின் மேல் நீட்டிக் கடலைப் பிரித்துவிடு. இஸ்ராயேல் மக்கள் அதன் நடுவிலே கால் நனையாமல் நடந்து போவார்கள்.
17. உங்களைப் பின் தொடரும்படி நாம் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவோம். அதனால், பாரவோனாலும், அவன் படைகளாலும், அவனது தேர், குதிரைகளினாலும் நாம் மாட்சி அடைவோம்.
18. இப்படி நாம் பாரவோனாலும், அவனுடைய தேர்களாலும், குதிரைகளினாலும் மாட்சி அடையும் போது, ஆண்டவர் நாமே என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றருளினார்.
19. அப்போது, இஸ்ராயேல் பாளையத்தின் முன் நடந்து கொண்டிருந்த கடவுளுடைய தூதர் பெயர்ந்து அவர்களுக்குப் பின் நடந்தார். அவரோடுகூட மேகத் தூணும் விலகி அவர்கள் பின்னால் காணப்பட்டது.
20. அது எகிப்தியரின் படைக்கும் இஸ்ராயேலரின் படைக்கும் இடையில் நின்று கொண்டது. அம்மேகம் இருளுள்ளதும், இரவிலே ஒளி வீசுகிறதுமாய் இருந்தமையால், இஸ்ராயேல் படையும் எகிப்தியர் படையும், இரவு முழுவதும் ஒன்று சேரக் கூடாமல் போயிற்று.
21. அப்போது, மோயீசன் கடலின்மேல் கையை நீட்டினார். நீட்டவே, ஆண்டவர் இரவு முழுவதும் மிகக் கொடிய வெப்பக்காற்று வீசச் செய்து, கடலை வாரிக் கட்டாந்தரையாக மாற்றினார். நீர் இரு பிரிவாகிவிட்டது.
22. இஸ்ராயேல் மக்களும் வறண்டுகிடந்த கடலின் நடுவே நடந்தனர். ஏனென்றால், அவர்களுக்கு வலப் புறத்திலும் இடப் புறத்திலும் நீர், மதிலைப் போல் நின்று கொண்டிருந்தது.
23. பின் தொடர்ந்து வந்த எகிப்தியர்களும், பாரவோனுடைய தேர்களோடு குதிரை வீரர்களும் அவர்களுக்குப் பின்னால் கடலின் நடுவே புகுந்தனர்.
24. காலை நேரத்திலே ஆண்டவர் நெருப்பும் மேகமுமான தூணுக்குள் இருந்து, எகிப்தியரின் படைகள் மீது நோக்கம் வைத்து, அவர்களுடைய படைகளை அழித்தொழித்தார்.
25. அதாவது, தேர்களின் உருளைகள் கழலவே, அவை கவிழ்ந்து மிக ஆழமான இடத்தினுள் அமிழ்ந்து போயின. அதனால் எகிப்தியர்: இஸ்ராயேலை விட்டு ஓடிப் போவோமாக: இதோ ஆண்டவர் நம்மை எதிர்த்து அவர்கள் சார்பாய் நின்று போராடுகின்றார் என்றார்கள். அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
26. கடலின் மேலே கையை நீட்டு. நீட்டினால், நீர்த்திரள் திரும்பி, எகிப்தியர் மேலும் அவர்களுடைய தேர்குதிரைகள் மேலும் வந்து விழும் என்றார்.
27. மோயீசன் கடல் மீது கையை நீட்டினார். நீட்டவே, விடியற் காலையில், கடல் வேகமாய்த் திரும்பி வந்தது. எகிப்தியர் ஓடிப் போகையில், நீர்த்திரள் அவர்களுக்கு எதிராக வந்தமையால், ஆண்டவர் அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார்.
28. இவ்வாறு நீர்த்திரள் திரும்பி வந்து, தொடர்ந்து கடலில் புகுந்திருந்த பாரவோனின் எல்லாப் படைகளையும் தேர்குதிரைகளையும் மூடிக்கொண்டது.
29. அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. இஸ்ராயேல் மக்களோ வறண்டுபோன கடலின் நடுவே நடந்து வரும்போது அவர்களுடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலும் நீர்த்திரள் மதில்போல் நின்று கொண்டிருந்தது.
30. இவ்வாறு ஆண்டவர் அன்று இஸ்ராயேலரை எகிப்தியருடைய கைகளினின்று காப்பாற்றினார்.
31. பின் அவர்கள் கடற்கரையில் எகிப்தியரின் சடலங்களைக் கண்டபோதும், ஆண்டவர் அவர்களைக் கண்டித்துக் காண்பித்த வல்லமையைக் கண்டுணர்ந்த போதும் ஆண்டவருக்குப் பயந்து, அவர்மீதும் அவருடைய ஊழியனான மோயீசன் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.