1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் இன்னும் ஒரு கொள்ளைநோயைப் பாரவோன் மேலும் எகிப்தின் மேலும் வரச் செய்வோம். பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போக விடுவதுமன்றி, உங்களைத் துரத்தியும் விடுவான்.
2. ஆகையால், நீ மக்களையெல்லாம் நோக்கி: ஆடவன் ஒவ்வொருவனும் தன்தன் நண்பனிடத்திலும், ஒவ்வொரு பெண்ணும் தன்தன் அண்டை வீட்டுக் காரியிடத்திலும், பொன் வெள்ளி உடமைகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளச் சொல் என்றார்.
3. அவ்விதமே எகிப்தியரின் கண்களிலே தயவு கிடைக்கும்படி ஆண்டவர் செய்தருளினார். உண்மையில் எகிப்து நாட்டில் பாரவோன் ஊழியர்களின் பார்வையிலும் எல்லா மக்களின் பார்வையிலும் மோயீசன் மிகமிகப் பெரிய மனிதனாக எண்ணப்பட்டிருந்தார்.
4. அப்பொழுது மோயீசன் (பாரவோனை நோக்கி): ஆண்டவர் சொல்லுவதேதென்றால்: நள்ளிரவில் நாம் எகிப்து நாட்டைச் சந்திக்க வருவோம்.
5. அப்பொழுது அரியணையில் அமர்ந்திருக்கும் பாரவோனின் தலைச்சன் பிள்ளைமுதல் எந்திரக் கல்லைச் சுழற்றும் அடிமைப் பெண்ணின் தலைப்பிள்ளை வரையிலும் எகிப்து நாட்டிலிருக்கும் முதற்பேறு அனைத்தும் மிருகங்களின் தலையீற்று அனைத்துமே சாகும்.
6. அதனால் எகிப்து நாடெங்கும் இதற்கு முன்னும் பின்னும் இருந்திராப் பெரும் கூக்குரல் உண்டாகும்.
7. ஆயினும், இஸ்ராயேல் மக்கள் அனைவரிடையேயும், மனிதர் முதல் மிருகங்கள் வரை யாரை நோக்கியும் ஒரு நாய் முதலாய்க் குரைப்பதில்லை. அவ்வித அதிசய அடையாளத்தின் மூலம், ஆண்டவர் எகிப்தியருக்கும் இஸ்ராயேலருக்குமிடையே வேறுபாடு காட்டுறாரென்று நீங்கள் அறிந்து கொள்வீகள்.
8. அப்போது உம்முடைய ஊழியராகிய இவர்கள் எல்லாரும் என்னிடம் வந்து பணிந்து: நீயும் உனக்குக் கீழ்ப்படிவோர் யாவரும் புறப்பட்டுப் போங்கள் என்று சொல்வார்கள். அதன் பிறகே நாங்கள் புறப்படுவோம் என்று சொல்லி, பொங்கிய சினத்தோடு மோயீசன் பாரவோனைவிட்டுப் புறப்பட்டார்.
9. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாட்டில் இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்படி அல்லவோ பாரவோன்: உங்கள் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்க மாட்டேன் என்றான் என்றார்.
10. எழுதப்பட்டுள்ள மேற்சொன்ன அதிசயங்களையெல்லாம் மோயீசனும் ஆரோனும் பாரவோன் முன்னிலையில் செய்தனர். ஆனால், ஆண்டவர் பாரவோன் மனத்தைக் கடினப்படுத்தினமையால், அவன், நாட்டைவிட்டுப் போகும்படி இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை.