1. பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ பாரவோனிடம் போ. ஏனென்றால், நாம் அவன்பால் நமது வலிமையின் அடையாளங்களைச் செய்துகாட்டத் தக்கதாகவும்,
2. நாம் இத்தனை முறை எகிப்தியரை நொறுங்க அடித்து அவர்கள் நடுவே நமது அற்புதங்களைச் செய்த வரலாற்றை நீ உன் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் விவரித்துச் சொல்லத் தக்கதாகவும், நீங்கள் நம்மை ஆண்டவரென்று கண்டுகொள்ளத் தக்கதாகவுமே நாம் பாரவோனுடைய மனத்தையும் அவன் ஊழியர்களின் இதயத்தையும் கடினப்படுத்தினோம் என்றருளினார்.
3. ஆகையால், மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய், அவனை நோக்கி: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: நீ எதுவரை நமக்குக் கீழ்ப்படிய மாட்டாய்? நமக்குப் பலியிடும்படி நம் மக்களைப் போகவிடு.
4. நீ முரண்கொண்டு: மக்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், இதோ, நாம் நாளை உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச் செய்வோம்.
5. தரையே தெரியாதபடி அவை பூமியின் முகத்தை மூடி, ஆலங்கட்டி மழைக்குத் தப்பினவற்றையெல்லாம் தின்றுவிடும். உண்மையில், அவை வெளியே தளிர் காட்டும் மரங்களையெல்லாம் தின்று விடும்.
6. அன்றியும், உன் வீடுகளும் உன் ஊழியரின் வீடுகளும் எகிப்தியரின் எல்லா வீடுகளுமே அவற்றால் நிரம்பும். உன் மூதாதையரும் முன்னோர்களும் பூமியில் தோன்றின நாள் முதல் இந்நாள் வரை அப்படிப்பட்டவற்றைக் கண்டதில்லை என்று கூறினர். பின் மோயீசன் திரும்பிப் பாரவோனை விட்டுப் புறப்பட்டார்.
7. அப்பொழுது பாரவோனின் ஊழியர்கள் அவனை நோக்கி: நாம் எதுவரை இந்தத் தொந்தரவைச் சகிக்க வேண்டும்! தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிட அந்த மனிதர்களைப் போக விடும். எகிப்துநாடு அழிந்து போயிற்றென்று நீர் இன்னும் உணரவில்லையா என்றனர்.
8. பின் மோயீசனையும் ஆரோனையும் மீண்டும் பாரவோனிடம் அழைத்து வந்தனர். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுங்கள். ஆனால், போக இருக்கிறவர்கள் யார் யாரென்று சொல்லுங்கள் என்றான்.
9. அதற்கு மோயீசன்: எங்கள் இளைஞரோடும் முதியவரோடும் புதல்வர் புதல்வியரோடும் எங்கள் ஆடுமாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம். ஏனென்றால், நாங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு விழா கொண்டாட வேண்டும் என்றார்.
10. பாரவோன் அதற்கு மறுமொழியாக: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் போகவிட்டால்! ஆண்டவரும் உங்களோடு போவாராக! நீங்கள் மிகவும் கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பது பற்றி ஐயுறுவார் யார்?
11. அது நடக்காது. ஆனால், பெரிய மனிதராகிய நீங்கள் மட்டும் போய் ஆண்டவருக்குப் பலியிடுங்கள். நீங்கள் விரும்பிக் கேட்டது இதுதான் அன்றோ என்றான். அவர்கள் அந்நேரமே பாரவோன் முன்னிலையினின்று துரத்திவிடப்பட்டனர்.
12. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டின் மேல் வந்து, ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய எவ்வகைப் புல்லையும் பயிரையும் தின்னும் படி, நீ எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு என்றார்.
13. அப்படியே மோயீசன் எகிப்து நாட்டின்மீது தன் கோலை நீட்டினார். அப்பொழுது ஆண்டவர் அன்று பகலும் இரவும் மிக வெப்பமான காற்று அடிக்கச் செய்தார். அவ்விதக் காற்று விடியற் காலையில் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14. அவை எகிப்தியர் எல்லைகளுக்குள் எவ்விடத்திலும் ஏராளமாய் வந்திறங்கி, எகிப்து நாடெங்கும் பரவின. அவ்வளவு வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததும் இல்லை; இனிமேல் இருக்கப் போவதும் இல்லை.
15. அவை பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடி, எல்லாவற்றையும் அழித்து, புற்பூண்டு பயிர்களையும் ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய மரங்களின் கனிகளையும் தின்றன. எகிப்து நாடெங்குமுள்ள மரங்களிலோ நிலப் புற்பூண்டுகளிலோ ஒரு பச்சிலையும் மிஞ்சவில்லை.
16. இதன் பொருட்டு, பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் விரைவில் வரவழைத்து: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்.
17. ஆயினும், நீங்கள் இம்முறையும் என் குற்றத்தை மன்னித்து, இந்த மரண வேதனையினின்று என்னைக் காப்பாற்றும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுங்கள் என்றான்.
18. மோயீசன் பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு போய், ஆண்டவரை மன்றாடினார்.
19. அவர் மிக்க வேகமான மேற்காற்று வீசச் செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிச் செங்கடலில் தள்ளிவிட்டது. எகிப்தியரின் எல்லையுளெல்லாம் ஒன்றேனும் நிற்கவில்லை.
20. ஆயினும் ஆண்டவர் பாரவோனின் நெஞ்சைக் கடினப் படுத்தியமையால், அவன் இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிட்டானில்லை.
21. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: உன் கையை வானத்தை நோக்கி உயர்த்துவாயாக. அதனால், தொட்டுணரத் தக்க இருள் எகிப்து நாட்டிலே உண்டாகக் கடவது என்றருளினார்.
22. அவ்விதமே மோயீசன் வானத்தை நோக்கிக் கையை நீட்ட, எகிப்து நாடு முழுவதும் மூன்று நாளாய் அகோரமான காரிருள் உண்டாயிற்று.
23. ஒருவனும் தன் சகோதரனைக் காண முடியவில்லை. தான் இருந்த இடத்தினின்று எவனும் அசையவுமில்லை. ஆனால் இஸ்ராயேல் மக்கள் குடியிருந்த உறைவிடங்களிலெல்லாம் ஒளி இருந்தது.
24. அப்பொழுது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிடுங்கள். உங்கள் ஆடுமாடுகள் மட்டும் நிற்கட்டும். உங்கள் குழந்தைகளும் உங்களோடு போகலாம் என்று சொன்னான்.
25. மோயீசன்: நாங்கள் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிகளாகவும் தகனப்பலிகளாகவும் படைக்க வேண்டிய விலங்குகளையும் எங்களுக்கு நீர் தரவேண்டும்.
26. எல்லா மந்தைகளும் எங்களோடு கூடவே வரும். அவற்றில் ஒரு குளம்பு முதலாய்ப் பிறகாலே நிற்காது. அவை எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் ஆராதனைக்கு அவசியம். அன்றியும், நாங்கள் அவ்விடம் சேருமட்டும் இன்னதைப் பலியிட வேண்டுமென்று அறியோம் என்றார்.
27. ஆனால், ஆண்டவர் பாரவோன் நெஞ்சைக் கடினப் படுத்தியிருந்தமையால், அவன் அவர்களைப் போகவிட இசையவில்லை.
28. அப்போது பாரவோன் மோயீசனை நோக்கி: நீ என்னை விட்டு அகன்று போ. இனி என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாய். இரு. நீ என் கண்ணுக்குத் தென்படும் நாளிலேயே சாவாய் என்றான்.
29. மோயீசன்: நீர் சொன்னபடியே ஆகட்டும். இனி நான் உமது முகத்தைக் காண்பதில்லை என்றார்.