1. மூன்றாம் நாள் எஸ்தர் தன் அரச ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனை உள் முற்றத்திற்குள் நுழைந்து அரசன் இருந்த கொலுமண்டபத்தின் முன் நின்றாள். அரசனோ தன் அறை வாயிலுக்கு நேராகக் கொலுமண்டபத்தில் அரியணைமீது அமர்ந்திருந்தான்.
2. எஸ்தர் அரசி இவ்வாறு நிற்கக் கண்டவுடனே அரசன் அவள் மீது கருணை கூர்ந்து தன் கையிலிருந்த பொற்செங்கோலை அவள் பக்கமாய் நீட்டினான். அப்பொழுது எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியை முத்தமிட்டாள்.
3. அரசன் அவளை நோக்கி, "எஸ்தர், நீ வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? நீ என் அரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குத் தருகிறேன்" என்றான்.
4. அதற்கு எஸ்தர், "அரசர் விரும்பின் நான் தங்களுக்காகத் தயாரித்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் இன்று வருமாறு கோருகிறேன்" என்றாள்.
5. அப்பொழுது அரசன் தன் ஊழியரை நோக்கி, "எஸ்தர் விருப்பப்படியே செய்ய ஆமானை உடனே இங்கு அழைத்து வாருங்கள்" என்றான். பிறகு அரசனும் ஆமானும் அரசி தங்களுக்காகத் தயார் செய்திருந்த விருந்திற்கு வந்தனர்.
6. அரசன் மது அதிகம் அருந்திய பின் அவளை நோக்கி, "உன் விருப்பம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? என் அரசில் பாதியைக் கேட்டாலும் அதை நான் உனக்குத் தருவேன்" என்றான்.
7. எஸ்தர் அதற்கு மறுமொழியாக,
8. தாங்கள் என் மீது கருணைக் கண் வைத்து என் வேண்டுகோளுக்கு இணங்கினால், நான் அளிக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் நாளைக்கும் வரவேண்டும். அப்பொழுது என் எண்ணத்தை அரசருக்குத் தெரிவிப்பேன்" என்றாள்.
9. அன்று ஆமான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வெளியே போனான். வழியிலே அரண்மனை வாயில் அருகே மார்தொக்கே உட்கார்ந்திருந்தார். ஆமானைக் கண்ட அவர் எழுந்திருக்கவுமில்லை; கொஞ்சமும் அசையவுமில்லை. இதைக் கண்டு ஆமான் கடும் கோபம் கொண்டான்.
10. ஆயினும் அவன் அதை அப்போது அடக்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான். வீட்டிலே தன் நண்பர்களையும் தன் மனைவி ஜாரேசையும் அழைத்தான்.
11. தன் செல்வப் பெருமையையும் பிள்ளைகளின் நிறைவையும் அரசன் தன்னை மேன்மைப்படுத்தி எல்லாச் சிற்றரசர்களுக்கும் பணியாளர்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தியிருப்பதையும் அவர்களுக்கு விரிவாகக் கூறினான்.
12. மேலும், "எஸ்தர் அரசியும் தான் அளித்த விருந்திற்கு அரசரோடு என்னையன்றி வேறு எவரையும் அழைக்கவில்லை. நாளைக்கும் அரசரோடு மற்றொரு விருந்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
13. இவ்விதப் பெருமை எல்லாம் எனக்கு இருந்தும் அந்த யூதன் மார்தொக்கே அரண்மனை வாயிலிலே உட்கார்ந்திருக்க நான் காணுமட்டும், அவை எனக்குப் பொருளற்றவை" என்றான்.
14. அப்பொழுது அவன் மனைவி ஜாரேசும் ஏனைய நண்பர்களும் அவனை நோக்கி, "நீர் ஐம்பது முழ உயரமான ஒரு பெரிய தூக்கு மரத்தைத் தயார் செய்யுமாறு கட்டளையிட வேண்டும். அதிலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட நாளைக் காலையிலேயே அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்ட பின்னர் மகிழ்ச்சியோடு அரசரோடு விருந்திற்குப் போகவும்" என்றனர். இந்த யோசனை ஆமானுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அவன் உயர்ந்ததொரு தூக்கு மரத்தைத் தயார் செய்யக் கட்டளை இட்டான்.