1. மனிதனுடைய ஞானம் அவன் முகத்திலே ஒளிர்கின்றது. எல்லாம் வல்லவரே அவனுடைய முகத்தின் சாயலை மாற்றி வருகிறார்.
2. நான் அரசனின் வாயைக் கவனித்துப் பார்க்கிறேன்; கடவுள் ஆணையிட்டுக் கற்பித்த கட்டளைகளையும் கடைப்பிடித்து வருகிறேன்.
3. அவரது முகத்தை விட்டு விலகத் துரிதப்படாதே. பொல்லாத காரியத்திலே நிற்காதே. ஏனென்றால், அவர் தமக்கு விருப்பமான தெல்லாம் செய்யத்தக்கவர்.
4. அவருடைய வார்த்தை வல்லமை நிறைந்தது. ஏன் இபபடிச் செய்தீர் என்று அவரை வினவ எவனாலும் இயலாது.
5. அவருடைய கட்டளையைக் கைக்கொண்டு ஒழுகுகிறவனுக்கு எந்தத் தீங்கும் வராது. காலம், மறுமொழி ஆகியவற்றை ஞானிகள் கண்டறிவார்கள்.
6. எல்லாக் காரியத்துக்கும் காலமும் நேரமும் உண்டு. மனிதனுக்கு நேரிடும் இக்கட்டுகளோ பல உண்டு.
7. ஏனென்றால், முன்னே நிகழ்ந்த காரியங்களை அவன் அறியான்; இனி நடக்கப்போகும் காரியங்களையோ எந்த வானவனும் வந்து சொல்ல மாட்டான்.
8. தன் கடைசி மூச்சை நிறுத்த மனிதனுக்கு அதிகாரம் இல்லை; சாவின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லை. போர் நடக்கும்போது அவன் இளைப்பாறக் கூடாது. அக்கிரமம் அக்கிரமியை மீட்க மாட்டாது.
9. நான் இவையெல்லாம் ஆராய்ந்து, சூரியன் முகத்தே நடக்கிற எல்லாக் காரியங்கள்மீதும் மனமாரச் சிந்தித்தேன். சிலவேளை ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாகும் அளவுக்கு வேறோரு மனிதனை ஆள்கிறதும் உண்டு.
10. அடக்கம் செய்யப்பட்ட அக்கிரமிகளையும் கண்டேன். அவர்கள் உயிரோடிருக்கையில் பரிசுத்த இடத்தில் அலுவலாயிருந்தார்கள். நீதி ஒழுக்கம் உடையவர்களைப்போல் நகரத்தில் புகழப்பட்டார்கள். ஆனால், இதுவும் வீணே.
11. உள்ளபடி தீயவர்கள் விரைவில் அழிக்கப்படாமையால் மனுமக்கள் அச்சமில்லமால் பாவத்தில் விழுகிறார்கள்.
12. ஆனால், நூறுமுறை பாவம் செய்த பாவியைக் (கடவுள்) தண்டித்துக்கொண்டு வருகிற காரியத்திலே நான் கண்டுபிடித்தது என்னவென்றால்: அவருக்குப் பயந்து, அவருடைய திருமுகத்திற்கு அஞ்சி நடக்கிறவர்களே பேறுபெற்றவராய் இருப்பர்.
13. தீயவனோ பேறுபெற்றவனாய் இல்லாதிருப்பானாக. எவன் கடவுளுக்குப் பயப்படாமலும் அவருடைய திருமுகத்திற்கு அஞ்சாமலும் இருக்கிறானோ, அவன் நிழலைப்போல் கடந்து போகக் கடவானாக.
14. பூமியின்மேல் இன்னொரு வேறுபாடும் உண்டு. அதாவது: புண்ணியவான், தான் அக்கிரமம் செய்ததுபோல், அக்கிரமிக்கு வரும் வாதையை அனுபவிக்கிறான்; அக்கிரமியோ, தான் புண்ணியம் செய்தது போல், நீதிமானுக்கு இருக்கும் அமைதியான வாழ்வை அனுபவிக்கிறான். ஆனால், இது வெளித்தோற்றம் என்று கருதுகிறேன்.
15. அதைப்பற்றிச் சூரியன் முகத்தே உண்டு குடித்து இன்பமாய் இருப்பதைவிட, மனிதனுக்கு வேறு நன்மை இல்லையெனக் கொள்ளும் மகிழ்வை நான் புகழ்ந்தேன். உள்ளபடி சூரியனுக்குக் கீழே கடவுள் அவனுக்குக் கொடுத்த வாழ் நாட்களில் அவன் பட்டதொல்லையின் பயன் அதுவேயன்றி (இவ்வுலகத்தில்) வேறென்னதான் இருக்கிறது?
16. நான் ஞானத்தை அறியவும், மனிதர்கள் வருந்தி நாடும் கதி இன்னதென்று கண்டுபிடிக்கவும் நான் தீர்மானித்திருந்தேன். மனுமக்களிலே சிலர் இரவு பகல் தூக்கமில்லாது ஓயாமல் உழைத்துவருகிறார்கள்.
17. இறுதியாக, சூரியன் முகத்தே கடவுள் செய்து வருகிற செயல்களின் காரணங்களை மனிதன் கண்டுபிடித்தல் இயலாதென்றும், மனிதன் அதைக் கண்டுபிடிக்க எவ்வளவுக்கு முயல்வானோ அவ்வளவுக்குக் கண்டுபிடிக்கா திருக்கிறான் என்றும் கண்டேன். அது எனக்குத் தெரியும் என்று ஞானி சாதித்தாலும், அவனும் கண்டு பிடிக்க மாட்டானென்று கண்டேன்.