1. வா, பற்பல வித இன்பங்களை நாடி எல்லா நன்மைகளின் தேனையும் உண்டு களிப்போம் என்று என் உள்ளத்தில் தீர்மானித்தேன். ஆனால், அவைகளிலும் பயனில்லை என்று கண்டேன்.
2. சிரிப்பது தவறென்று உணர்ந்தேன். களிப்பைக் குறித்து: சீ! ஏமாந்துபோகிறாய் என்றேன்.
3. மனுமக்கள் உயிரோடிருக்கும் நாள்வரையிலும்பெற்று நுகரத்தக்கது இன்னதென்று நான் அறியுமட்டும், மதியீனத்தைவிட்டு விலகி ஞானத்திலே என் சிந்தையைச் செலுத்த வேண்டுமென்று, மதுபானங்களை விட்டு என் உடலை ஒறுக்கத் தீர்மானித்தேன்.
4. எனவே நான் மாபெரும் வேலைகளைச் செய்தேன். எனக்காக வீடுகளைக் கட்டினேன்; கொடிமுந்திரித் தோட்டங்களையும் நட்டேன்;
5. எனக்காகப் பூஞ்சோலைகளையும் தோப்புகளையும் உண்டாக்கி, அவைகளில் எல்லா வகைக் கனி மரங்களையும் நட்டேன்.
6. பின் மரங்கள் பயிராகும் சோலைக்கு நீர் பாய்ச்சக் குளங்களை அமைத்தேன்;
7. ஊழியக்காரர்களையும் ஊழியக்காரிகளையும் கொண்டிருந்தேன். என் வீட்டிலே பிறந்த அடிமைகளும் மாட்டுமந்தை, ஆட்டுமந்தைகளும் எவ்வளவென்றால், எனக்குமுன் யெருசலேமிலிருந்த எல்லாருக்கும் இருந்ததைக் காட்டிலும் அவை அதிகத்திரளாய் இருந்தன.
8. வெள்ளியையும் பொன்னையும், அரசர் ஈட்டிய செல்வத்தையும், மாநிலங்களின் பொருட்களையும் சேகரித்துக்கொண்டேன்; இசைச் செல்வர்களையும் செல்விகளையும் மனுமக்கள் நாடும் பலவித இன்பங்களையும், மதுபானம் அருந்தத்தக்க பாத்திரங்களையும் பெற்றிருந்தேன்.
9. எனக்குமுன் யெருசலேமில் இருந்த எல்லாரையும்விட நான் செல்வன் ஆனேன். (அவ்வாறு செய்தும்) ஞானம் என்னோடு நிலைக்கொண்டது.
10. என் கண்கள் நாட்டம் கொண்ட எதையும் நான் அவைகளுக்குத் தடை செய்திலேன்; என் இதயம் விரும்பிய சிற்றின்பங்களில் ஒன்றையும் நான் வேண்டாமென்று தள்ளியதும், ஈட்டிய பொருட்களை அனுபவிக்கமால் ஒதுக்கி விட்டதும் இல்லை. நான் முயற்சி செய்து பெற்ற பொருட்களை அனுபவிப்பது நியாயம் என்றிருந்தேன்.
11. பின்னர், என் கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட வீணான தொல்லைகளையும் கண்முன் கொண்டு சிந்தித்தபோது, இதோ, எல்லாம் விழலும் மனத் துயரமுமாய் இருக்கின்றனவென்றும், வானத்தில் கீழ் உள்ளவை எல்லாம் நிலையற்றனவென்றும் கண்டேன்.
12. அடுத்து, ஞானத்தையும் பைத்தியத்தையும் மதியீனத்தையும் பார்த்து அறியும்படி திரும்பினேன்: தன்னைப் படைத்த அரசர்க்கரசரைப் பின்பற்ற மனிதன் யார் என்றேன்.
13. அப்பொழுது என் கண்கள் திறந்தன. இருளைக் காட்டிலும் ஒளி எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு மதியீனத்தைவிட ஞானம் சிறந்ததென்று கண்டேன்.
14. ஞானியின் கண்கள் அவன் தலையிலே இருக்கின்றன. மூடனோ இருளில் நடக்கிறான். ஆயினும் இருவருமே சாக வேண்டும் என்றும் கண்டேன்.
15. அப்பொழுது நான் சிந்திக்கத் தொடங்கி: மூடனுக்கும் சாவு நேரிடும், எனக்கும் நேரிடும் என்றால், நான் அதிகமாய்ப் படித்திருப்பதினால் பயன் என்ன என்று யோசித்து, அதுவும் வீண்தான் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
16. உள்ளபடி, மூடனும்சரி ஞானியும் சரி- அவர்களுடைய நினைவு என்றைக்கும் நிலை நிற்காது; காலச்சக்கரம் சுழலச் சுழல இருவரும் மறக்கப்படுவார்கள்; கல்வி கற்றவனும் கல்லாதவனும் ஒரே விதமாய்த்தான் சாவார்கள்.
17. ஆதலால், சூரியன் முகத்தே இத்தனை தீமைகள் உண்டென்றும், எல்லாம் விழலும் மனத்துயரமுமாய் இருக்கிறதென்றும் கண்டு என் உயிரையும் வெறுத்தேன்.
18. சூரியன் முகத்தே நான் உழைத்த எல்லா உழைப்பையும், எனக்குப் பிறகு எனக்கு உரிமையாளியான ஒரு மகனை அடைவதற்கு நான் கொண்டிருந்த எண்ணத்தையும் வெறுத்தேன்.
19. அவன் ஞானியாய் இருப்பானோ அறிவற்றவனாய் இருப்பானோ என்று அறியேன். ஆயினும், நான் வேர்த்துக் கவலைப்பட்டு ஈட்டின என் எல்லாப் பொருட்களுக்கும் அவன் தலைவன் ஆவான். இவ்வளவு வீணானது வேறு ஏதாவது உண்டோ?
20. அதைப்பற்றி நான் சோர்வடைந்தது மட்டுமன்றி, சூரியன் முகத்தே நான் இனி உழைப்பதன் மேலுள்ள ஆசையையும் விட்டுவிட்டேன்.
21. உள்ளபடி ஒருவன் ஞானத்தையும் கல்வியையும் ஆவலாய்த் தேடி உழைத்த பின்பு, தான் ஈட்டியவற்றை உழைக்காதிருந்த வேறொருவனுக்கு விட்டு விடுகிறான். இதுவன்றோ வீணும் பெரிய தீமையுமாய் இருக்கிறது?
22. மனிதன் சூரியன் முகத்தே பட்ட எல்லாத் தொல்லையினாலேயும் வதைக்கப்பட்ட மனத்துயரத்தினாலேயும் அவனுக்கு என்ன இலாபம் இருக்கும்?
23. அவன் நாட்களிலெல்லாம் அலுப்பும் அலைச்சலும் உள்ளன. இரவில் முதலாய் அவனுக்கு ஓய்வு இல்லை. இதுவும் வீணேயன்றோ?
24. அதைவிட மனிதன் உண்டு குடித்துத் தன் உழைப்பின் பயனைத் தன் ஆன்மாவுக்குக் காண்பிக்கிறது நலம். அது கடவுள் கையிலிருந்து வருகிறது.
25. என்னைப்போல் நிறைவாய் விருந்தாடி இன்பங்களில் மூழ்கியிருக்கிறவன் யார்?
26. கடவுள் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் தந்தருள்கிறார். பாவிக்கோ அவர் கொடுத்தது என்ன? தமக்கு விருப்பமாயிருக்கிறவனிடம் விட்டுக் கொடுக்கும் பொருட்டுச் செல்வங்களைச் சேர்த்துக் குவித்து வைக்கும் தொல்லையையும் வீண் கவலையையும்தான் கொடுத்தார். அது வீண் வேலையும் வீண் நாட்டமும் அன்றோ?