1. துயர நாட்கள் வருமுன்னே, உன் வாலிப நாட்களில் உன்னைப் படைத்த கடவுளை நினை. ஏனென்றால்: நல்லதன்று என்று நீ சொல்லப் போகிற காலம் அண்மையில் இருக்கும்.
2. சூரியனும் சந்திரனும் வெளிச்சமும் விண்மீன்களும் இருண்டு போகுமுன்னும், மழைக்குப் பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வருமே - அதற்கு முன்னும் (கடவுளை நினை).
3. வீட்டுக் காவலாட்கள் சோர்வடைந்து, பேராற்றல் உடையவர்கள் தள்ளாடி, இயந்திரம் சுழற்றும் பெண்கள் சிலருமாய் வேலை செய்யாதவர்களுமாய் ஓய்வதற்கு முன்னும்; பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்களின் கண்கள் இருண்டு போவதற்கு முன்னும்;
4. இயந்திரக்கல் சுழலும் ஒலி மெலிந்துபோக, தெரு வாயிற் கதவுகள் அடைபட்டு, பறவைகள் கூவ, மனிதர் எழுந்து, இசைக்கருவி இயக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழக்குமுன்னும்;
5. மேட்டுக்குப் பயந்து வழியிலே திகில் உண்டாக்கி, வாதுமை மரம் பூத்து, வெட்டுக் கிளி பெருத்து, கப்பாரீச் செடியின் தழைகள் உதிருமுன்னும்; மனிதன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதனால் தூங்குகிறவர்கள் வீதியிலே திரியுமுன்னும்;
6. வெள்ளிக்கயிறு அறுந்துபோய், பொன் (தெப்பம்) அவிழ்க்கப் பட்டு, ஊற்றினருகே குடம் உடைந்து, கேணியண்டையில் அதன் கப்பி உடைந்து போகு முன்னும்;
7. மண்ணால் ஆனது தான் தோன்றின பூமிக்கே மறுபடியும் போகுமுன்னும்; ஆவி அதனை அளித்த கடவுளிடம் திரும்பிச் சேருமுன்னும் - நீ உன்னைப் படைத்தவரை (நினைக்கக் கடவாய்).
8. வீணிலும் வீண் என்கிறான் (சங்கப் போதகன்); எல்லம் வீணே.
9. அன்றியும், சங்கப் போதகன் மிக்க ஞானமுள்ளவனாதலால், அவன் மக்களுக்கு அறிவு வழங்கி, தான் செய்ததையெல்லாம் அவர்களுக்கு விவரித்து சொல்லியதுமன்றி, கவனமாய்க் கேட்டு ஆராய்ந்து பல நீதி மொழிகளையும் எழுதினான்.
10. அவன் பயனுள்ள வார்த்தைகளைச் சொல்ல வகை தேடினான்; செவ்வையும் உண்மையுமான பல நூல்களை இயற்றினான்.
11. ஞானிகளின் கூற்றுகள் தாற்றுக் கோல்கள் போலவும், (சுவரில்) அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கின்றன. அவை பல அறிஞரின் ஆலோசனைப்படி ஒரே மேய்ப்பனால் அளிக்கப் பட்டன.
12. என் மகனே, இவை உனக்குப் போதும். பல நூல்களை இயற்றுவதிலும் முடிவு இல்லை; அதிகம் ஆலோசிப்பதிலும் உடலுக்கு நலம் இல்லை.
13. இப்போதகத்தின் இறுதிப் பகுதியை எல்லாரும் கவனித்துக் கேட்கக் கடவோம்: கடவுளுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வருவதே மனிதர் யாவர்மேலும் சுமந்த கடமை;
14. மனிதர் செய்து வருகிற புண்ணிய பாவமோ தவறோ எவ்விதமானாலும், அவைகளையெல்லாம் கடவுள் நீதி நியாயத்தின்படி தீர்ப்புச் செய்வார்.