1. செத்த ஈக்களால் பரிமளத் தைலத்தின் நறுமணம் அழிவதுபோவவே, சிறியதும் தற்காலத்துள்ளதுமான அறிவீனத்தால் விலையுயர்ந்த ஞானமும் புகழும் (அழிக்கப்படும்).
2. ஞானியின் இதயம் அவன் வலக்கையிலும், மூடனின் இதயமோ அவன் இடக்கையிலும் இருக்கின்றனவாம்.
3. நீதியற்ற நெறியில் செல்லுகிற ஞானமற்ற மனிதன், தான் மதிகெட்டவனாய் இருக்கிறதனால், எல்லாரையும் மதியீனரென்று எண்ணுகிறானாம்.
4. அதிகாரியின் கோபம் உன்மேல் எழும்பினால் நீ அமைதியை இழந்துவிடாதே. ஏனென்றால், சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திவிடும்.
5. சூரியன் முகத்தே நான் கண்ட ஒரு தீங்கு உண்டு. அது அதிகாரியின் (பொய்யான) எண்ணத்தால் நேரிட்ட தவறு.
6. (அதாவது: ) மதியீனன் உயர்ந்த நிலையிலே வைக்கப்பட்டுதலும், செல்வனோ தாழ்ந்த நிலையில் அமர்திருத்தலுமாம்.
7. வேலைக்காரர் குதிரைமேல் ஏறிப் போகிறதையும், பிரபுக்கள் சாதாரண மனிதரைப் போல் நடந்து போகிறதையும் கண்டேன்.
8. படு குழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான். வேலியைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
9. கற்களை எடுக்கிறவன் அவற்றால் காயப்படுவான். விறகு வெட்டுகிறவன் அதனால் அடிபடுவான்.
10. இரும்புக் கருவியை முன்போல் இராமல் மழுங்கலாய்க் கிடக்கவிட்டால், பிறகு அதைக் கூராக்குவது மிகவும் கடினம். அதுபோல் வருந்தித்தான் ஞானத்தை அடையக்கூடும்.
11. மறைவாய்க் கோள் சொல்லுகிறவன் சத்தம் போடாமல் கடிக்கும் பாம்பை ஒத்தவன்.
12. ஞானியின் வாய்மொழிகள் இனிமையாய் இருக்கின்றன. மூடனுடைய உதடுகளோ அவனைத் தாழ விழத்தாட்டும்.
13. அவனுடைய வாக்குகளின் தொடக்கம் மதியீனமும், அதன் முடிவோ மிகக் கேடான பைத்தியமுமாம்.
14. மதியீனன் பேச்சை வளர்க்கிறான். மனிதன் தனக்குமுன் நடந்ததை அறியான்; தனக்குப்பின் நடக்கப் போவதையும் அறியான். அவனுக்கு அதை அறிவிப்பவன் யார்?
15. ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியான். ஆதலால், அவன் தொல்லையே அவனை வாதிக்கும்.
16. அரசன் சிறு பிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலையில் உண்கிறவர்களுமாய் இருக்கப் பெற்ற நாடே உனக்குக் கேடாம்.
17. அரசன் மேன்குல மகனுமாய், பிரபுக்கள் பேருண்டியாய் இன்பத்திற்காக உண்ணாமல், வலிமை கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாய் இருக்கப்பெற்ற நாடே உனக்குப் பேறு.
18. சோம்பலினால் வீட்டு மச்சுக்கட்டைகள் விழும். கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
19. களித்திருப்பதற்கு அப்பத்தையும் மதுபானத்தையும் உபயோகித்து மனிதர் விருந்தாடுவார்கள்: பணமோ எல்லாவற்றையும் படியச் செய்யும்.
20. அரசனை உன் மனத்திலும் இகழாதே. செல்வம் படைத்தவனை உள் அந்தரங்கத்திலும் இகழாதே. ஏனென்றால், வானவெளியில் பறக்கிற பறவைகளுங்கூட உன் வார்த்தைகளைக் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அவர்களுக்கு அறிவிக்கும்.