1. ஒரு மனிதன் ஒரு பெண்ணை மணம்புரிந்து கொண்டபின்பு, அவளிடம் வெட்கத்திற்குரிய தீயகுணத்தைக் கண்டு அவளை வெறுத்தால், அவன் தள்ளுதலின் பத்திரம் எழுதி அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனப்பி விடலாம்.
2. அவள் அப்படி வெளியே போனபின்பு வேறொருவனுக்கு மனைவியானாள்.
3. இவனும் அவளை வெறுத்துத் தள்ளுபடிப் பத்திரம் எழுதி அவளை அனுப்பி விட்டாலாவது, தானே இறந்துபோனாலாவது,
4. முதல் கணவன் அவளைத் திரும்பவும் மனைவியாகச் சேர்ந்துக் கொள்ளலாகாது. காரணம்: அவள் தீட்டுப்பட்டு, ஆண்டவருடைய முன்னிலையில் அருவருப்புக்குரியவள். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய்க் கொடுக்கவிருக்கும் நாட்டின் மேல் பாவம் வரச் செய்யலாகாது.
5. ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் புதிதாய் மணந்திருந்தால், அவன் போருக்குப் போகாமலும், யாதொரு பொது வேலையில் ஈடுபடாமலும் ஓராண்டளவு வீட்டில் சுதந்திரமாக தன் மனைவியோடு மகிழ்ந்திருப்பானாக.
6. நீ திரிகையின் மேற் கல்லையாவது அடிக்கல்லையாவது ஈடாக வாங்கலாகாது. அது அவன் உயிரை ஈடாக வாங்குவதுபோலாகும்.
7. தன் சகோதரராகிய இஸ்ராயேல் மக்களில் ஒருவனை ஏமாற்றிப் பணத்துக்கு விற்று அந்த விலையை வாங்கினவன் கையும் பணமுமாகப் பிடிபட்டால், அவன் கொலை செய்யப்பட வேண்டும். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விவக்கக்கடவாய்.
8. (தொற்று நோயாகிய) தொழு நோய்க்கு உள்ளாகாதபடிக்கு நீ எச்சரிக்கையாய் இரு. லேவி வம்சத்தாராகிய குருக்கள் என் கட்டளைப்படி உனக்கு எவ்வித அறிவுரை சொல்லுவார்களோ அவ்விதமாய் நடக்க நீ கருத்தாய் இரு.
9. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே ஆண்டவர் மரியாளுக்குச் செய்ததை நினைத்துக் கொள்ளுங்கள்.
10. பிறனுக்கு நீ ஏதேனும் கடனாகக் கொடுத்ததைத் திரும்பக் கேட்கும்போது, ஈடு வாங்கி எடுத்துக்கொள்ளும்படி வீட்டினுள் புக வேண்டாம். நீ வெளியே நிற்பாய்.
11. அவன் தனக்குண்டான அடகை வெளியே உன்னிடம் கொண்டு வருவானாக.
12. அவன் வறியவனாயின் நீ அவனது அடகை வாங்கி இரவில் வைத்துக் கொள்ளாமல்,
13. சூரியன் மறையுமுன்னே அதை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அதனால் அவன் தன் ஆடையை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிபான். அப்படிச் செய்வது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முன்பாக உனக்கு நலமாய் இருக்கும்.
14. உன் சகோதரரிலும் உன் நாட்டு வாயில்களிலுள்ள அந்நியரிலும் ஏழை எளியவனான கூலிக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காமல் ஒடுக்காதே.
15. அவன் வேலை செய்த நாளில்தானே சூரியன் மறையுமுன்னே அவனது கூலியை அவனுக்குச் செலுத்திவிடக் கடவாய். ஏனென்றால், அவன் ஏழையாய் இருப்பதனால், அது அவன் பிழைப்புக்குத் தேவையாயிருக்கிறது. நீ அதைக் கொடாத நிலையில் அவன் உன்னைக் குறித்து ஆண்டவரை நோக்கி முறையிடுவான். அது உனக்குப் பாவமாகவே அமையும்.
16. மக்களுக்குப் பதிலாய்ப் பெற்றோர்களேனும், பெற்றோர்களுக்குப் பதிலாய் மக்களேனும் கொலை செய்யப்பட வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவனே கொலை செய்யப்டுவான்.
17. அந்நியனுடைய நியாயத்தையும் தாய் தந்தையரில்லாத பிள்ளையின் நியாயத்தையும் நீ புரட்டாமலும், விதவையின் ஆடையை ஈடாக வாங்காமலும் இருப்பாய்.
18. நீ எகிப்தில் அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அவ்விடத்தினின்று விடுதலை செய்ததையும் நினைத்துக் கொள். இதுகாரியத்தில் நீ செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுவது என்னவென்றால்:
19. உன் விளைச்சலை அறுவடை செய்யும்போது உன் வயலிலே ஓர் அரிக்கட்டை மறதியாய் விட்டு வந்திருப்பாயேல், நீ அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைப் பாடுகளிலெல்லாம் உனக்கு ஆசீர் அளிக்கும் பொருட்டு அதை அகதிக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டு வைக்கக்கடவாய்.
20. நீ ஒலிவ மரங்களை உலுப்பிக் கொட்டைகளை எடுத்துக்கொண்டு போன பிற்பாடு உதிராமல் நிற்பவற்றைப் பறிக்கும்படி நீ திரும்பப்போக வேண்டாம். அவற்றை அகதிக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டு வைக்கக்கடவாய்.
21. உன் கொடிமுந்திரிப் பழங்களை வெட்டிய பிறகு மிஞ்சி நிற்கும் பழங்களை வெட்டிவரும்படி திரும்பப் போகாதே. அவற்றை அகதிக்கும் தாய் தந்தயரில்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டுவைப்பாயாக.
22. நீயும் எகிப்திலே அடிமையாய் இருந்தாயென்று நினைத்துக்கொள். அதுபற்றி இவ்விதமாய்ச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.