1. பின்னும் ஆண்டவர் எனக்குச் சொல்லியவாறு நாம் அங்கிருந்து புறப்பட்டுச் செங்கடலுக்குப் போகும்வழியே பாலைவனத்தில் பயணம் செய்து நெடுநாள் செயீர் மலை நாட்டைச் சுற்றித் திரிந்தோம்.
2. அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி:
3. நீங்கள் இம்மலை நாட்டைச் சுற்றி அலைந்தது போதும். இப்போது வடக்கே திரும்புங்கள்.
4. மக்களைப் பார்த்து நீ கட்டளையிட வேண்டியது என்னவென்றால்: செயீரிலே குடியிருக்கிற, எசாயூவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லைகளின் வழியாய்ச் செல்லப் போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள்.
5. ஆகையால், நீங்கள் அவர்களோடு போராடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் எசாயூவுக்குச் செயீர் மலையை உடைமையாகக் கொடுத்துள்ளமையால், அவர்கள் நாட்டிலே ஓர் அடி நிலம்கூட உங்களுக்குக் கொடோம்.
6. தின்னும் பண்டங்களை விலைக்கு வாங்கி உண்பீர்கள். தண்ணீரையும் அவர்கள் கையில் பணம் கொடுத்து மொண்டு குடிப்பீர்கள்.
7. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் செயல்களிலெல்லாம் உனக்கு ஆசீர் அளித்துவந்தார். நீ செல்லும் வழியையும் அறிந்திருக்கிறார். இந்தப் பெரிய பாலையை நீ கடந்த விதத்தையும் அறிந்திருக்கிறார். உன் கடவுளாகிய ஆண்டவர் நாற்பதாண்டு உன்னோடு வாழ்ந்ததனால், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்றருளினார்.
8. அப்படியே நாம் செயீரில் குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய எசாயூ புதல்வரின் நாட்டைக் கடந்த பின்பு திறந்த வெளிவழியாய் ஏலாத்மீதும் ஆசியொங்கபர்மீதும் சென்று மோவாப் பாலைவனத்திற்கு வந்துசேர்ந்தபோது,
9. ஆண்டவர் என்னை நோக்கி: நீ மோவாபியரைத் துன்புறுத்தவும் வேண்டாம்; அவர்களோடு போராடவும் வேண்டாம். ஏனென்றால், நாம் லோத்தின் புதல்வருக்கு ஆர் என்னும் நகரத்தைக் கொண்டுள்ள நாட்டை உரிமையாகக் கொடுத்தோம். அதில் உனக்கு ஒன்றும் கொடோம் என்றார்.
10. எம்மியர் அதன் முதல் குடிகளாய் இருந்தனர். அவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால், வலிமை மிக்க இனத்தவரும் நெடிய ஆட்களுமாய் அவர்கள் இருந்ததனால்,
11. அவர்களும் அரக்கர்களும் ஏனாக்கீமின் என்று எண்ணப்பட்டார்கள். சிறப்பாக, அவர்கள் ஏனாக்கீமியர்களை ஒத்தவர்கள். மோவாபியர்களோ அவர்களை எமிம் என்று சொல்வார்கள்.
12. செயீரிலே ஓறையர்கள் முதன் முதல் குடியிருந்தார்கள். ஆனால், ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி நாட்டில் இஸ்ராயேலர் எப்படிக் குடியேறினார்களோ, அப்படியே எசாயூவின் புதல்வர் மேற்சொல்லிய ஓறையர்களைத் துரத்தியும் வெட்டியும் அவர்கள் நாட்டில் குடியேறினார்கள்.
13. நிற்க, நாம் ஜாரேத் என்ற ஓடையைக் கடக்க அதன் அண்மையில் வந்தோம்.
14. நாம் காதேஸ் பர்னேயை விட்டுப் புறப்பட்ட நாள் தொடங்கி, ஜாரேத் என்னும் ஓடையைக் கடந்த நாள் வரையிலும் சென்ற காலம் முப்பத்தெட்டு ஆண்டு. அதற்குள் அந்தச் சந்ததியைச் சார்ந்த போர்வீரர் எல்லாரும் ஆண்டவருடைய ஆணையின்படி பாளையத்தின் நடுவிலிருந்து அழிக்கப்பட்டார்கள்.
15. உள்ளபடி அவர்கள் பாளையநடுவினின்று மாண்டு அழியும்படியாய் ஆண்டவருடைய கை அவர்களுக்கு விரோதமாய் இருந்தது.
16. அந்தப் போர்வீரர் எல்லாரும் மாண்டு போனபின்பு,
17. ஆண்டவர் என்னை நோக்கி:
18. நீ இன்று மோவாப் எல்லைகளையும் ஆர் என்ற நகரையும் தாண்டிப்போவாய்.
19. பின்பு அம்மோனின் புதல்வர் குடியிருக்கிற நாட்டில் சேரும்போது, நீ அவர்களைத் துன்புறுத்தவும் போருக்கு அழைக்கவும் வேண்டாம்; எச்சரிக்கை! அவர்களின் நாட்டை நாம் லோத்தின் புதல்வருக்கு உரிமையாகத் தந்தோம். அதில் ஒன்றும் உனக்கு உரிமையாகக் கொடோம்.
20. அது அரக்கருடைய நாடென்று எண்ணப்பட்டது. ஏனென்றால், முற்காலத்தில் அரக்கர் அதிலே குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை ஸொம்ஸொம்மீம் என்று அழைக்கிறார்கள்.
21. அந்த மக்களோ வலிமை மிக்க இனம்; ஏனாக்கீமியரைப் போல் நெடியர்; ஆண்டவர் அம்மோனியருக்குமுன்பாக அவர்களை அழித்து, அம்மோனியரை அவர்களுடைய இடத்தில் குடியிருக்கச் செய்தார்.
22. அதற்குமுன் அவர் செயீரில் குடியிருக்கிற எசாயூ புதல்வருக்கு அவ்விதமாகவே உதவியாய் இருந்து, ஓறையரை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்குக் கொடுத்தார். இந்நாள் வரையிலும் ( எசாயூவின் புதல்வர் ) அதிலே குடியிருக்கிறார்கள்.
23. அவ்வாறே, ஆசேரீம் தொடங்கிக் காஜாவரையிலும் குடியிருந்த ஏவையர் கப்பதொசியராலே துரத்தப்பட்டார்கள். இவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வந்து, அவர்களை அழித்து, அவர்களுடைய இடத்திலே குடியேறினார்கள்.
24. நீங்கள் எழுந்து, அரனோன் என்கிற ஓடையைக் கடந்து போங்கள். இதோ நாம் அமோறையனான எஸெபோனின் மன்னன் செகோனை உன் கையில் ஒப்படைத்தோம். அவன் நாட்டை நீ உரிமையாக்கிக் கொள்வதற்கு அவனோடு போராடு.
25. வானத்தின் கீழ் எங்குமுள்ள மக்கள் உன் பெயரைச் சொல்லக்கேட்டு அச்சமுற்று, பிள்ளை பெறும் பெண்களைப்போல் வேதனைப்பட்டுக் கலங்கத்தக்கதாக, இதோ நாம் அவர்களுக்குத் திகிலும் அச்சமும் உண்டாகும்படி இன்று செய்யத் தொடங்குவோம் என்று திருவுளம் பற்றினார்.
26. அப்பொழுது நான் கதேமாத் பாலையிலிருந்து எஸெபோனின் அரசனான செகோனிடம் சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி பிரதிநிதிகளை அனுப்பி:
27. நாங்கள் உம்முடைய நாட்டைக் கடந்து போகவேண்டும். வலப்புறமும் இடப்புறமும் சாயாமல் நெடுஞ்சாலை வழியாகவே நாங்கள் நடப்போம்.
28. எங்களுக்கு உண்ண உணவு வகைகளையும் குடிக்கத் தண்ணீரையும் நீர் விலைக்குத் தரவேண்டும். நாங்கள் கடந்து போக உத்தரவு மட்டும் கொடும்.
29. நாங்கள் யோர்தானை அடைந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நாங்கள் புகும் வரையிலும், செயீரில் வாழ்கிற எசாயூ புதல்வரும் ஆரிலே குடியிருக்கிற மோவாபியரும் உத்தரவு கொடுத்ததுபோல், நீரும் உத்தரவு கொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
30. ஆனால் தன் நாட்டைக் கடந்து போகும்படி எஸெபோனின் அரசனாகிய செகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை. ஏனென்றால், இப்போது நீயே காண்பதுபோல், உன் கடவுளாகிய ஆண்டவர் அவனை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் பொருட்டு அவன் மனத்தையும் கடினப்படுத்தி அவன் இதயத்தையும் அடைத்துவிட்டிருந்தார்.
31. அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி: இதோ செகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கத் தொடங்கினோம். நீ அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கலாம் என்றார்.
32. செகோனோ தன் மக்கள் அனைவரோடும் நம்முடன் போர் தொடுக்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்தான்.
33. நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நமது கையில் ஒப்படைத்தார். ஆதலால் நாம் அவனையும், அவன் புதல்வர்களையும், அவனுடைய மக்கள் அனைவரையும் முறியடித்தோம்.
34. அத்தருணம் நாம் அவன் நகரங்களையெல்லாம் பிடித்து, அவற்றில் குடியிருந்த பெண்களையும் ஆடவர்களையும் பிள்ளைகளையும் அழித்து, எதையும் மீதி வைக்காமல் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம்.
35. மிருக உயிர்களும், நாம் பிடித்த நகரங்களில் கொள்ளையடித்த பொருட்களும் மட்டும் யார் யார் கையில் அகப்பட்டனவோ அவற்றை அவரவர் வைத்துக் கொண்டார்கள்.
36. பள்ளத்தாக்கிலுள்ள அர்னோன் ஓடைக் கரையிலிருக்கிற அரோயோ நகர் தொடங்கிக் கலாத்வரையிலும் நாம் பிடிக்காத அரணுள்ள நகரமும் ஊரும் ஒன்றேனும் இல்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் அவை எல்லாவற்றையும் நம்முடைய கையிலே ஒப்படைத்தார்.
37. அம்மோன் புதல்வருடைய நாட்டையும், ஜெபோக் என்கிற ஓடைக்கடுத்த ஊர்களையும், மலைகளிலுள்ள நகர்கள் முதிலிய இடங்களையும் மட்டும் சேராமல் விலகிப்போனோம். ஏனென்றால், நம் கடவுளாகிய ஆண்டவர் அவற்றையெல்லாம் பிடிக்காதபடி விலக்கியிருந்தார்.