1. குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்ராயேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லை. ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளையும் காணிக்கைகளையுமே அவர்கள் உண்ண வேண்டும்.
2. அவர்கள் தங்கள் சகோதரருடைய உரிமைகளில் வேறுயாதொன்றையும் அடையார்கள். உள்ளபடி, ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லிய வண்ணம், ஆண்டவரே அவர்களுடைய உடைமை.
3. மக்களும் பலியைச் செலுத்த வருபவர்களும் குருக்களுக்குக் கொடுக்க வேண்டிய பகுதி என்னவென்றால்: அவர்கள் பலியிடும் ஆடுமாடுகளின் முன்னந் தொடையையும் இரைப்பையையும் குருவுக்குக் கொடுப்பார்கள்.
4. தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச் சாற்றிலும் எண்ணெயிலும் முதற்பலன்களையும், கத்தரித்த ஆட்டுமயிரில் ஒரு பாகத்தையும் அவர்களுக்குச் செலுத்துவார்கள்.
5. ஏனென்றால், அவனும் அவன் புதல்வர்களும் என்றும் ஆண்டவருடைய பெயராலே அவருடைய முன்னிலையில் நின்று இறைபணி செய்யும்படி, அவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவரால் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளேயும் தேர்ந்து கொள்ளப்பட்டார்கள்.
6. இஸ்ராயேலின் எவ்விடத்திலுமுள்ள உங்கள் நகரங்களுள் யாதொன்றிலே குடியிருந்த ஒரு லேவியன் அவ்வூரை விட்டு, ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு இசைவோடு வருவானாயின்,
7. அங்கே அக்காலம் ஆண்டவருடைய முன்னிலையில் இறைபணி செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல அவனும் கடவுளாகிய ஆண்டவருடைய பெயராலே இறைபணி செய்வான்.
8. தன் ஊரிலே தந்தையின் சொத்தில் வரவேண்டியதை அவன் அனுபவிப்பதுமன்றி, மற்றவரைப்போல் உணவிற்காகத் தன் பாகத்தையும் சரியாகப் பெற்றுக் கொள்வான்.
9. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்த பின்பு, அந்த மக்களுடைய வெறுக்கத்தக்க நடத்தைகைளைப் பின்பற்றத் துணியாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
10. தன் புதல்வனையேனும் புதல்வியையேனும் சுத்திகரிப்புக்கென்று தீயைக்கடக்கச் செய்பவனும், குறி சொல்லுகிறவர்களிடம் அறிவுரை கேட்பவனும், கனவுகளையும் சகுனங்களையும் நம்புகிறவனும், சூனியக்காரனும் உங்களுக்குள்ளே இருத்தலாகாது.
11. மந்திரவாதியும் சன்னதக்காரனும் மாயவித்தைகாரனும், இறந்தவர்களிடம் குறி கேட்கிறவனும் (உங்களுக்குள்ளே) இருத்தலாகாது.
12. ஏனென்றால் ஆண்டவர் இவற்றையெல்லாம் வெறுக்கிறார். இப்படிப்பட்ட பாதகங்களின் பொருட்டு அவர் உன் முன்னிலையில் அவர்களை அழித்தொழிப்பார்.
13. உன் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீ குற்றமில்லாத உத்தமனாய் இருக்கக்கடவாய்.
14. நீ யாருடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இருக்கிறாயோ அவர்கள் சகுனம் பார்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் நம்புகிறவர்கள். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவரால் வேறு விதமான கல்வி கற்றிருக்கிறாய்.
15. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இனத்தினின்றும் உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப்போல் இறைவாக்கினரை உனக்காக ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவி கொடுப்பாயாக.
16. ஓரேபிலே சபைக் கூட்டம் கூடிய நாளில் நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து: நான் சாகாதபடிக்கு என் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று வேண்டிக்கொண்டபோது,
17. ஆண்டவர் என்னை நோக்கி: இவர்கள் சொன்னதெல்லாம் சரியே.
18. உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரரின் நடுவிலிருந்து தோன்றச் செய்து, நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்போம். நாம் கற்பிப்பதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார்.
19. நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நாம் தண்டிப்போம்.
20. ஆனால், நாம் சொல்லும்படி கட்டளையிடாத வார்த்தைகளை நமது பெயராலே எந்தத் தீர்க்கதரியாவது சாதித்துச் சொல்லத்துணிவானாகில் அல்லது வேறு தேவர்களின் பெயராலே பேசுவானாகில் சாகக்கடவான் என்று திருவுளம்பற்றினார்.
21. நீயோ: ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எதன் மூலம் அறிவேன் என்று உன் மனத்துள்ளே சொல்லலாம்.
22. இதை அடையாளமாக வைத்துக்கொள். ஒரு தீர்க்கதரிசி ஆண்டவருடைய பெயராலே ஒரு காரியம் சொல்கிறான்; அது நிறைவேறாமல் போனால், அதை ஆண்டவர் சொல்லவில்லை; அந்தத் தீர்க்கதரிசி தன் அகந்தையினாலே அதைத் தானே உண்டாக்கிச் சொன்னான். ஆதலால், அதை நீ (கவனிக்கவும் வேண்டாம்;) அதற்கு அஞ்சவும் வேண்டாம்.