1. ஏழாம் ஆண்டிலே (பொது) மன்னிப்பை அளிப்பாயாக. அதன் விவரமாவது:
2. தன் நண்பனுக்கு அல்லது அயலானுக்கு அல்லது சகோதரனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும் அந்தக் கடனைத் தண்டாமல் விட்டுவிடக் கடவான். ஏனென்றால், அது ஆண்டவர் ஏற்படுத்திய மன்னிப்பு ஆண்டு.
3. அகதியிடத்திலும் அந்நியனிடத்திலும் நீ கடனைத் தண்டலாம். ஆனால், உன் ஊரான் கையிலும், உன் உறவினர் கையிலும் அதைத் தண்ட உனக்கு அதிகாரம் இல்லை.
4. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குச் சொந்தமாய் அளிக்கவிருக்கும் நாட்டிலே உனக்கு ஆசீர் கிடைக்கும்படி உங்களுக்குள்ளே ஏழையும் இரந்துண்பவனும் இருத்தலாகாது.
5. ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அவர் கற்பித்தனவும், நான் உனக்கு விதித்தனவுமாகிய எல்லாவற்றையும் நிறைவேற்றக்கடவாய். அப்பொழுது தாம் சொல்லியபடி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.
6. நீ பல மக்களுக்கும் கடன் கொடுப்பாயேயன்றி, எவனிடத்திலும் நீ கடன் வாங்கலாகாது. பல இனத்தாரையும் நீ ஆள்வாயேயன்றி, உன்னை எவனும் ஆளான்.
7. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கவிருக்கும் நாட்டில் உன் நகர வாயிலுக்குள்ளே வாழும் உன் சகோதரர்களில் ஒருவன் ஏழையாய்ப் போனால், நீ அவன் மட்டில் உன் இதயத்தைக் கடினப்படுத்தாமலும் உன் கையைச் சுருக்கிக் கொள்ளாமலும்,
8. அதை ஏழைக்குத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய தேவைக்கு ஏற்றாற்போல் கடன் கொடுப்பாயாக.
9. நெறிகெட்ட ஒரு நினைவு முதலாய் உன்னிடத்தே புகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. அது என்னவென்றால்: மன்னிப்பு ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையிலுள்ளது என்று கருதி ஏழையான உன் சகோதரனுக்கு நீ கடன் கொடுக்க மறுத்தால், அவன் உன்னைக் குறித்து ஆண்டவரிடம் முறையிடுவான் என்றும், அதனால் உனக்குப் பாவம் வருமென்றும் நெஞ்சிலே எண்ணுவதும், அவனுக்குக் கடன் கொடுக்க உனக்கு மனமில்லாதபடியால் அவனுடைய தேவையைக் கண்டறிந்திருந்தும் அறியாதவன்போல் பாசாங்கு செய்வதுமாம். (இப்படிப்பட்ட நினைவை மனத்தில் கொண்டிராதே.)
10. அவனுக்குக் கண்டிப்பாய்க் கொடுக்கவேண்டும். நீ கையால் செய்வன எல்லாற்றிலும் எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கத் தக்கதாக நீ உன் சகோதரனுடைய நெருக்கிடையில் செய்யும் உதவியைக் கபடமில்லாமல் செய்யக்கடவாய்.
11. நீ வாழும் நாட்டிலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை. ஆகையால், உன் நாட்டிலே வறுமையுற்றவனும் ஏழையுமாகிய உன் சகோதரனுக்குத் தாராளமாய்க் கை திறக்க வேண்டுமென்று நான் உனக்குக் கற்பிக்கிறேன்.
12. உன் சகோதரனாகிய எபிரேய ஆடவனேனும் எபிரேய பெண்ணேனும் உனக்கு விலைப்பட்டார்களாயின், அவர்கள் ஆறாண்டு உன்னிடம் வேலை செய்து பிற்பாடு ஏழாம் ஆண்டில் அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்.
13. இப்படி விடுதலை செய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பாமல்,
14. உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்தளித்த உன் மந்தையிலும் களத்திலும் ஆலையிலுமிருந்து கொஞ்சம் எடுத்து வழிச் செலவுக்கு இனாமாகக் கொடுத்தனுப்ப வேண்டும்.
15. நீயும் எகிப்து நாட்டிலே அடிமையாய் இருந்தாயெனும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை மீட்டாரென்றும் நினைத்துக்கொள். ஆதலால் நான் இன்று இந்தக் கட்டளையை உனக்கு விதிக்கிறேன்.
16. ஆனால், அவன் உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதனாலும், உன்னிடத்தில் இருப்பது தனக்கு நன்றென்று உணர்வதனாலும்: உன்னை விட்டுப் போகேன் என்பானாயின்,
17. நீ ஒரு குத்தூசியை எடுத்து உன் வீட்டு வாயிலில் நின்று கொண்டு அவனுடைய காதைக் குத்துவாய். பின்பு அவன் என்றுமே உனக்கு ஊழியனாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்வாய்.
18. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கை வேலைகளிலெல்லாம் உனக்கு ஆசீரளிக்குமாறு அப்படிப் பட்டவர்களை நீ விடுதலை செய்து அனுப்பி விட்ட பின்பு: அவர்கள் ஆறாண்டும் கூலிவாங்க என்ன வேலை செய்தார்கள் என்று அவர்களை அவமதித்து விலக்க வேண்டாம்.
19. உன் ஆடுமாடுகளின் ஆண் தலையீற்றையெல்லாம் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புனிதமாக்குவாய். உன் மாட்டின் தலையீற்றை வேலைக்கு வைக்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்திரியாமலும் இருப்பாயாக.
20. ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே ஆண்டுதோறும், நீயும் உன் குடும்பத்தாருமாய் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மேற்கூறியவற்றை உண்ணக்கடவீர்கள்.
21. ஆனால், தலையீற்றுக்கு யாதொரு பழுது இருக்குமாயின், (உதாரணமாக) அது முடம் அல்லது குருடு அல்லது எதிலேயும் உருச்சிதைவுள்ளதாய் இருந்தால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அதைப் பலியிட வேண்டாம்.
22. அப்படிப்பட்டதை உன் நகர வாயில்களினுள்ளே, வெளிமான் கலைமான்களை உண்பது போல் உண்ணக் கடவாய். தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் இதை உண்ணலாம். ஆயினும்,
23. அவற்றின் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரைப்போல் அதைத் தரையில் ஊற்றி விடக்கடவாய்.