1. தலைவர்களே, உங்களுக்கும் ஒரு தலைவர் வானகத்தில் இருக்கிறார் என்பதை மனத்திற்கொண்டு, நீதி நியாயத்தோடு அடிமைகளை நடத்துங்கள்.
2. செபத்தில் நிலைத்திருங்கள்,. அதில் விழிப்பாயிருங்கள், நன்றி கூற மறவாதீர்கள்.
3. கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை எடுத்துக் கூறுவதைத் தேவ வார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பைக் கடவுள் எங்களுக்குத் தந்தருளும் படி எங்களுக்காவும் செபியுங்கள். 'இம் மறைபொருளின் பொருட்டே நான் விலங்கிடப்பட்டிருக்கிறேன்.
4. பேச வேண்டிய முறையில் பேசி நான் அந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி வேண்டுங்கள்.
5. திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு பழகுங்கள். நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்.
6. உங்கள் பேச்சு இனியதாகவும், சாரமுள்ளதாகவும் இருக்கட்டும். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டுமென அறிந்துகொள்வீர்கள்.
7. அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு என்னைப் பற்றிய செய்தியெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார். அவர் நம்பிக்கைக்குரிய பணியாளர், ஆண்டவருடைய பணியில் என் உடனுழைப்பாளர்.
8. எங்களைப் பற்றி உங்களுக்கு அறிவித்து, உங்கள் உள்ளங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன்.
9. நம்பிக்கைக்குரிய அன்புத் தம்பி ஒனேசிமுவைக் கூட அனுப்புகிறேன். அவன் உங்கள் சபையைத் சேர்ந்தவன்தான். அவர்கள் இங்கு நடப்பதையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
10. என்னோடு கைதியாயிருக்கிற அரிஸ்தர்க்கும் பர்னபாவின் நெருங்கிய உறவினரான மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்- இவர் வந்தால் நீங்கள் என்னென்ன செய்யவேண்டுமேன்று உங்களுக்குத் தெரியும். 'இவர் உங்களிடம் வந்தால் உபசரியுங்கள்-
11. யுஸ்து எனப்படும் இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே கடவுளுடைய அரசுக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருந்தனர்.
12. உங்கள் சபையைச் சார்ந்த எப்பாப்பிராவிடமிருந்தும் உங்களுக்கு வாழ்த்து, கடவுளுடைய திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றுவதில் முற்றும் தேறினவர்களாய், ஞான நிறைவில் நிலைத்து நிற்கும்படி கிறிஸ்து இயேசுவின் ஊழியரான அந்த எப்பாப்பிரா உங்களுக்காக எப்போதும் கவலையோடு செபித்துவருகிறார்.
13. உங்களுக்காகவும், லவோதிக்கேயா, எராப்போலி ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்காகவும் அவர் பாடுபட்டு உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.
14. அன்புமிக்க மருத்துவர் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
15. லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர்களுக்கும் நிம்பாளுக்கும், அவருடைய வீட்டில் கூடும் சபைக்கும் என் வாழ்த்து,
16. இக்கடிகத்தை நீங்கள் வாசிக்கக் கேட்டபின், லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்கச் செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
17. " ஆண்டவருக்குள் நீர் பெற்றுக்கொண்ட திருப்பணியை நிறைவேற்றக் கருத்தாயிரும் " என்று அர்க்கிப்புவுக்குச் செல்லுங்கள்.
18. இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. நான் விலங்கிடப்பட்டிருக்கிறேன்¢ என்பதை நினைவுகூருங்கள். இறை அருள் உங்களோடு இருப்பதாக!.