1. கிறிஸ்துவோடு நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள். அங்கேதான், கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
2. இவ்வுலகில் உள்ளவற்றின்மீது மனத்தைச் செலுத்தாமல் மேலுலகிலுள்ளவற்றின் மீதே மனத்தைச் செலுத்துங்கள்.
3. ஏனெனில், நீங்கள் இறந்து விட்டீர்கள். உங்கள் உயிர் கிறிஸ்துவோடு கடவுளுக்குள் மறைந்துள்ளது.
4. நம்முடைய உயிராகிய கிறிஸ்து தோன்றும்பொழுது, நீங்களும் அவரோடு மாட்சிமையில் தோன்றுவீர்கள்.
5. ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
6. இவையே, கடவுளுடைய சினத்தை வரவழைக்கின்றன.
7. இத்தீயவற்றில் உழன்ற காலத்தில் நீங்களும் இவ்வாறுதான் நடந்துகொண்டீர்கள்.
8. ஆனால், இப்பொழுது நீங்கள் இதையெல்லாம் விலக்குங்கள். சினம், சீற்றம், தீயமனம் ஆகியவற்றையெல்லாம் நீக்குங்கள். பழிச்சொல், நாணங்கெட்ட பேச்சு எதுவும் உங்கள் வாயில் வராதிருக்கட்டும்.
9. இனி ஒருவரிடம் ஒருவர், பொய் பேசாதீர்கள். ஏனெனில் பழைய இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்து விட்டு.
10. தன்னை உண்டாக்கியவரின் சாயலுக்கேற்ப, உண்மை அறிவை அடையும் பொருட்டுப் புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய இயல்பை அணிந்துகொண்டீர்கள்.
11. இப்புது வாழ்வில் கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை; விருத்தசேதனம் பெற்றவனென்றும் பெறாதவனென்றும் இல்லை. மிலேச்சன் என்றும், சீத்தியன் என்றும் இல்லை. அடிமையென்றும் உரிமைக்குடிமகனென்றும் இல்லை. கிறிஸ்துவே அனைவரிலும் அனைத்துமானவர்.
12. ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.
13. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.
14. இவையெல்லாவற்றிற்கும் மேலாக அன்பை அணிந்துகொள்ளுங்கள். அதுவே எல்லா நற்பண்புகளையும் பிணைந்து நிறைவு அளிப்பது.
15. கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.
16. கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள் குடிகொள்வதாக. முழு ஞானத்தோடு ஒருவருக்கொருவர் போதியுங்கள். அறிவு புகட்டுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்களையும் புகழ்ப்பாக்களையும் பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடுங்கள்.
17. எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் செய்து, அவர் வழியாகத் தந்தையாகிய கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
18. மனைவியரே, உங்கள் கணவருக்கு பணிந்து நடங்கள். இதுவே ஆண்டவருக்குள் வாழும் முறை.
19. கணவர்களே, உங்கள் மனைவியர்க்கு அன்பு காட்டுங்கள், அவர்கள் மேல் எரிந்து விழாதீர்கள்.
20. பிள்ளைகளே, எல்லாவற்றிலும் பெற்றோர்ருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இதுவே ஆண்டவருக்கு உகந்தது.
21. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்ட வேண்டாம்; அவர்கள் மனந்தளர்ந்து போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
22. அடிமைகளே, இவ்வுலகத்தில் உங்கள் தலைவராயிருப்போருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள். மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாயிராமல், ஆண்டவருக்கு அஞ்சி நேர்மையான உள்ளத்தோடு கீழ்ப்படியுங்கள்.
23. நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல், ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள்.
24. அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களைத் தம் வாரிசுகளாக்குவார் என உங்களுக்குத் தெரியுமன்றோ? நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே.
25. ஏனென்றால் அநீதி புரிபவன் அநீதியின் பலனையே பெறுவான். இறைவன் முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை.