1. தெயோபிலே, இயேசு தாம் தேர்ந்துகொண்ட அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றைப் பரிசுத்த ஆவியினால் கட்டளையிட்டு விண்ணேற்படைந்த நாள்வரை,
2. அவர் செய்தவை, போதித்தவை யாவற்றையும் என் நூலின் முதற்பகுதியில் எழுதினேன்.
3. தாம் பாடுபட்ட பின்னர், இயேசு நாற்பது நாள் அளவாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளின் அரசைப்பற்றிக் கூறி, பல சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காட்டினார்.
4. ஒருநாள் அவர் அவர்களோடு உண்ணும்போது, அவர்கள் யெருசலேமை விட்டு நீங்காமல் தந்தை வாக்களித்ததை எதிர்பார்க்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
5. "என் வாய்மொழியாக நீங்கள் கேட்டது இவ்வாக்குறுதியைப்பற்றித்தான்: அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" என்றார்.
6. ஆகவே, கூடிவந்திருந்தவர்கள், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?" என்று வினவினார்கள்.
7. அதற்கு அவர், "தந்தை தம் அதிகாரத்தால் குறித்துள்ள காலங்களையும் நேரங்களையும் அறிவது உங்களைச் சார்ந்ததன்று.
8. ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.
9. இதைச் சொன்னபின்பு, அவர்கள்கண்முன்பாக அவர் மேலே உயர்த்தப்பெற்றார். மேகம் ஒன்று வந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.
10. அவர் போகும்பொழுது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது வெண்ணாடை அணிந்த இருவர் அங்கே தோன்றி,
11. "கலிலேயரே, ஏன் இப்படி வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? உங்கள் நடுவிலிருந்து வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்ற இந்த இயேசு எவ்வாறு வானகம் செல்லக் கண்டீர்களோ, அவ்வாறே மீண்டும் வருவார்" என்றனர்.
12. பின்பு அவர்கள் ஒலிவத்தோப்பு என்னும் மலையிலிருந்து யெருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை யெருசலேமுக்கு அருகில் உள்ளது; ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரம்தான்.
13. இப்படித் திரும்பிவந்த இராயப்பர், அருளப்பர், யாகப்பர், பெலவேந்திரர், பிலிப்பு, தோமையார், பார்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், தீவிரவாதி என்னும் சீமோன், யாகப்பரின் மகன் யூதா ஆகியவர்கள், தாங்கள் வழக்கமாய்த் தங்கும் மாடியறைக்குப் போனார்கள்.
14. இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
15. அப்பொழுது ஒருநாள், அங்கே - ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் கூடியிருக்கையில் - இராயப்பர் அவர்கள் நடுவில் எழுந்துநின்று பேசியதாவது:
16. "சகோதரர்களே, இயேசுவைக் கைதுசெய்தவர்களுக்கு வழிகாட்டியான யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி, தாவீதின் வழியாக, முன்னறிவித்த மறைநூல்வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. -
17. அவன் நம்முள் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.
18. இந்த யூதாஸ் தன் அநீதச் செயலுக்குக் கிடைத்த கூலியைக்கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். அவன் தலைகீழாய் விழ, அவன்வயிறு வெடித்துக் குடலெல்லாம் சிதறிப்போயின.
19. இது யெருசலேமில் குடியிருப்பவர் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அந்த நிலம் அவர்கள் மொழியில் அக்கெல்டாமா, அதாவது இரத்த நிலம், எனப்படுகிறது.
20. சங்கீத நூலில்: ' அவன் இல்லிடம் பாழாகட்டும், குடியற்றுப் போகட்டும் ' என்றும், ' அவன் அலுவலை வேறொருவன் ஏற்றுக்கொள்ளட்டும் ' என்றும் எழுதியுள்ளது.
21. "ஆகையால், அருளப்பரின் ஞானஸ்நானம் முதல் ஆண்டவராகிய இயேசு நம் நடுவினின்று எடுத்துக் கொள்ளப்பெற்ற நாள்வரை,
22. அவர் நம்மோடு பழகிய காலமெல்லாம் எங்களுடனிருந்தவர்களுள் ஒருவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது."
23. எனவே, அவர்கள் இருவரைக் குறிப்பிட்டார்கள்: அவர்கள் ஒருவர் பர்சபாஸ் என்னும் சூசை; இவருக்கு யுஸ்துஸ் என்ற பெயருமிருந்தது; மற்றொருவர் மத்தியாஸ்.
24. "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, 'யூதாஸ் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி, இந்த அப்போஸ்தலர் ஊழியத்தில் இழந்துபோன இடத்தைப் பெறுவதற்கு,
25. இவ்விருவருள் யாரை நீர் தேர்ந்துகொள்கிறீர் எனக் காண்பித்தருளும்" என்று அவர்கள் மன்றாடினார்கள்.
26. பிறகு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாஸ் பேருக்கு விழவே, அவர் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.