1. அன்புக்குரிய காயு அவர்களுக்கு, மூப்பனாகிய நான் எழுதுவது: அன்புக்குரியவரே, உம்மீது உண்மையான அன்புகொண்டுள்ள நான்,
2. நீர் ஆன்ம நலத்தோடு இருப்பதுபோல, உடல் நலத்தோடு இருக்கவும், எல்லாம் இனிதே நடைபெறவும் வேண்டுமெனச் செபிக்கிறேன்.
3. நீர் உண்மையில் நிலைத்திருந்து, உண்மைக்கேற்ப நடந்து வருகிறீர் என இங்கு வந்த சகோதரர் சிலர் சான்று பகர்ந்தனர்.
4. என் மக்கள் உண்மைக்கேற்ப நடக்கின்றனர் என்று கேள்விப்படுவதைவிட மேலானதொரு மகிழ்ச்சி எனக்கில்லை.
5. அன்புக்குரியவரே, சகோதரர்களுக்காக- அதுவும் அந்நியரான சகோதரர்களுக்காக- நீர் உழைக்கும்போதெல்லாம் கடமை தவறாதவராய் விளங்குகிறீர்.
6. இவர்கள் எங்கள் சபையின் முன்னிலையில் உமது அன்புக்குச் சான்று பகர்ந்தனர். கடவுளுக்குகந்த முறையில் அவர்களை நீர் வழியனுப்புவீராகில் நலமாயிருக்கும்.
7. அவர்கள் கிறிஸ்துவின் பெயருக்காகப் பயணத்தை மேற்கொண்டார்கள்; வழியில் புறமதத்தாரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை.
8. ஆகவே, இத்தகையோரை ஆதரித்து, உண்மைக்காகப் பணிபுரியும் அவர்களுடன் ஒத்துழைக்கவேண்டும்.
9. சபைக்கு நான் கடிதமொன்றை எழுதியுள்ளேன். ஆனால் தன்னைத் தலைவனாக்கிக் கொள்ள விரும்பும் தியோத்திரேப்பு எங்களை மதிப்பதில்லை.
10. அவன் செய்து வருவதையெல்லாம் எடுத்துக் காட்டுவேன். அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாதன பிதற்றுகிறான். அத்தோடு நின்றுவிடாமல், அவன் சகோதர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்; ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்களையும் தடை செய்கிறான்; அவர்களைச் சபைக்கு வெளியேயும் தள்ளுகிறான்.
11. அன்புக்குரியவரே, தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையைப் பின்பற்றும்; நன்மை செய்கிறவன் கடவுளைச் சார்ந்தவன்; தீமை செய்கிறவன் கடவுளைக் கண்டதில்லை.
12. தேமேத்திரியுவைப்பற்றி அனைவரும் நற்சான்று கூறுகின்றனர்; உண்மையுமே நற்சான்று கூறுகிறது; நாங்களும் கூறுகிறேம்;
13. எங்கள் சான்று உண்மை என நீர் அறிவீரன்றோ? உமக்கு எழுதவேண்டிய செய்திகள் பல உண்டு: இருப்பினும் எழுத்து வடிவில் சொல்ல நான் விரும்பவில்லை.
14. விரைவில் உம்மைக் கண்டு, நேரில் பேசலாம் என எதிர்பார்க்கிறேன். (15) உமக்குச் சமாதானம் உண்டாகுக. அன்பர்கள் உமக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். அங்குள்ள ஒவ்வோர் அன்பருக்கும் தனித்தனியே வாழ்த்துக் கூறவும்.