1. மேலும் இதைத் தெரிந்துகொள்ளும்: இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும்.
2. அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,
3. பரிவில்லாதவர், தீராப் பகையினர், புரணி பேசுபவர், தன்னடக்கமற்றவர், கொடியவர், நல்லதை வெறுப்பவர்,
4. நம்பிக்கைத் துரோகிகள், மூர்க்கர், இறுமாப்புடையவர் என்று இவ்வாறெல்லாம் இருப்பர். அவர்கள் கடவுளை நாடுவதைவிடச் சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர்.
5. பக்தியின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.இவர்களுடன் சேராதீர்.
6. இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
7. இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டேயிருந்தாலும் உண்மையைக் கண்டுணர்வதில்லை.
8. யன்னேயும் யம்பிரேயும் மோயீசனை எதிர்த்து நின்றதுபோல் மேற்சொன்னவர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். சீரழிந்த மதிகொண்டவர்கள் இவர்கள். விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் பயனற்றவர்கள்.
9. இவர்கள் போக்கு நீண்ட நாள் நீடிக்காது. மோயீசனை எதிர்த்தவர்களின் மதிகேடு வெளியானதுபோல் இவர்களுடைய மதிகேடும் எல்லாருக்கும் வெளியாகும்.
10. நீரோ, என் போதனை, நடத்தை, குறிக்கோள், விசுவாசம், பொறுமை, அன்பு, மனவுறுதி, ஆகிய இவற்றில் என்னைப் பின்பற்றினீர்.
11. அந்தியோக்கியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் நான் துன்புறுத்தப்பட்டபோது என் பாடுகளிலும் என்னைப் பின்பற்றினீர். எத்தனையோ துன்பங்களுக்கு உள்ளானேன். ஆனால் ஆண்டவர் அவை அனைத்தினின்றும் என்னை விடுவித்தார்.
12. பக்தியோடு கிறிஸ்து இயேசுவில் வாழவிரும்புவோர் அனைவரும் துன்புறுத்தப்படுவார்.
13. தீயவர்களும் எத்தர்களும் மேன்மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
14. நீரோ, கற்றுக்கொண்டவற்றையும், உம் மனத்தில் உறுதியாய் நிறுத்திய உண்மைகளையும் கடைப்பிடியும். உமக்குக் கற்பித்தவர்கள் யாரென்று தெரியுமன்றோ?
15. குழந்தைப் பருவமுதலே உமக்கு மறைநூல் தெரியும் என்பதை நீர் மறவாதீர். மறைநூல் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மீட்பிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஞானத்தை அளிக்க வல்லது.
16. மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும் கண்டிக்கவும் சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும், பயன்படும்.
17. இவ்வாறு கடவுளின் அடியான், திறமை நிரம்பப் பெற்று, எல்லா வகையான நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகின்றான்.