1. இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாம் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் தசையுமானவர்கள்;
2. மேலும் நேற்றும் முந்தாநாளும் சவுல் எங்களுக்கு அரசனாய் இருந்தபோது, நீர் இஸ்ராயேலை நடத்திச் செல்பவராக இருந்தீரே; அன்றியும் ஆண்டவர் உம்மை நோக்கி, 'நம் மக்கள் இஸ்ராயேலை நீ பராமரித்து, இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருப்பாய்' என்று உம்மிடம் திருவுளம் பற்றினாரே!" என்றனர்.
3. இஸ்ராயேலின் முதியவர்களும் எபிரோனில் இருந்த அரசரிடம் வந்தார்கள். தாவீது அரசர் எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன் படிக்கை செய்து கொண்ட பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள்.
4. தாவீது அரச பதவி ஏற்றபோது அவருக்கு வயது முப்பது. அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
5. அவர் எபிரோனில் யூதாவை ஏழரை ஆண்டும், யெருசலேமில் இஸ்ராயேல் முழுவதையும் யூதாவையும் முப்பத்து மூன்று ஆண்டும் அரசாண்டார்.
6. அரசரும் அவருடன் இருந்த மனிதர் அனைவரும் எழுந்து நாட்டில் குடியிருந்த எபிசேயர் மேல் போரிடுவதற்கு யெருசலேமுக்குப் போனார்கள். எபிசேயர் தாவீதிடம், "நீர் குருடர்களையும் முடவர்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் இங்கு உம்மால் நுழைய முடியாது" என்று கூறித் தாவீது நகருள் நுழைவதைத் தடுத்தனர்.
7. ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தார்.
8. அது தாவீதின் நகராயிற்று. குழாய்க் கால்வாய் வழியாகக் கோட்டையின் மேல் ஏறி எபிசேயரையும் தாவீதை வெறுக்கும் முடவர்களையும் குருடர்களையும் அப்புறப்படுத்துபவனுக்குப் பரிசு கொடுப்பதாகத் தாவீது கூறியிருந்தார். இதன் பொருட்டே, 'குருடனும் முடவனும் ஆலயத்தில் வரக்கூடாது' என்று பழமொழி வழங்கலாயிற்று.
9. அக்கோட்டையில் தாவீது வாழ்ந்து வந்தார். அதற்குத் தாவீதின் நகர் என்று பெயரிட்டு, மெல்லோ தொடங்கிச் சுற்றிலும் உட்புறத்தில் மதில் எழுப்பினார்.
10. அவர் நாளுக்கு நாள் சீரும் சிறப்பும் பெற்றார். சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் அவரோடு இருந்தார்.
11. அன்றியும் தீரின் அரசனாகிய கீராம் தாவீதிடம் தூதர்களையும் கேதுரு மரங்களையும் தச்சர்களையும் கொத்தர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தாவீதுக்கு ஒரு மாளிகையைக் கட்டினார்கள்.
12. அதனால் ஆண்டவர் இஸ்ராயேலின் அரசராகத் தம்மை உறுதிப்படுத்தினார் என்றும், ஆண்டவருடைய மக்களாகிய இஸ்ராயேல் மேல் தம் அரசை அவரே நிறுவினார் என்றும் தாவீது தெளிவாய்க் கண்டு பிடித்தார்.
13. தாவீது எபிரோனிலிருந்து வந்த பின்பு யெருசலேமில் இன்னும் பல மனைவியரையும் வைப்பாட்டிகளையும் கொண்டார். அவருக்கு வேறு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14. சாமுவா, சோபாப். நாத்தான், சாலமோன்,
15. ஜேபவார், ஏலிசுவா, நெபேகு, ஜாபியா,
16. ஏலிசமா, எலியோதா, எலிபலேத் ஆகியோர் யெருசலேமில் அவருக்குப் பிறந்த மக்களாவர்.
17. தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள் என்று அறிந்தபோது, பிலிஸ்தியர் எல்லாருமே அவரைத் தேடி வந்தார்கள். அதைக் கேள்வியுற்ற தாவீது கோட்டைக்குள் போய்விட்டார்.
18. பிலிஸ்தியரோ இராபாயீம் பள்ளத்தாக்கிற்கு வந்து எங்கும் பரவியிருந்தனர்.
19. அப்போது தாவீது ஆண்டவர் திருமுன் வந்து, "நான் பிலிஸ்தியரோடு போருக்குப் போகலாமா? என் கையில் அவர்களை நீர் ஒப்படைப்பீரா?" என்று கேட்க, ஆண்டவர், "போகலாம், பிலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்போம்" என்று மறுமொழி சொன்னார்.
20. அவ்வாறே தாவீது பாவால்- பாரசீமுக்கு வந்து அங்கே அவர்களை முறியடித்தார். அப்போழுது அவர், "தண்ணீர் சிதறுண்டு போவது போல் ஆண்டவர் என் எதிரிகளை எனக்கு முன்பாகச் சிதறடித்தார்" என்றார். எனவே, பாவால்- பாரசீம் என்று அவ்விடம் அழைக்கப் பெற்றது.
21. பிலிஸ்தியர் தங்கள் சிற்பங்களை அங்கு விட்டுச் சென்றனர். தாவீதும் அவருடைய சேவகரும் அவற்றை எடுத்துச் சென்றனர்.
22. மீண்டும் பிலிஸ்தியர் வந்து இராபாயீம் பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள். தாவீது ஆண்டவர் திருமுன் வந்து,
23. பிலிஸ்தியருடன் நான் போருக்குப் போகலாமா? நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா? என்று கேட்டதற்கு ஆண்டவர், "நீ அவர்களை முன்னிருந்து எதிர்க்க வேண்டாம். மாறாக அவர்களுக்குப் பின்னால் சுற்றிப்போய்ப் பீர் மரங்களுக்கு எதிரே வந்த பின் அவர்களைப் பின் தொடர்வாய்.
24. மேலும் பீர் மரங்களின் உச்சியில் மனிதர் நடந்து வரும் சத்தத்தை நீ கேட்கும் போது போரைத் தொடங்கு. ஏனெனில் அந்நேரத்தில் பிலிஸ்தியரின் பாசறையை முறியடிக்கும்படி ஆண்டவர் உனக்கு முன்பாகப் போயிருப்பார்" என்றார்.
25. ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே தாவீது செய்து, பிலிஸ்தியரைக் காபா தொடங்கி ஜேசர் எல்லை வரை துரத்தி முறியடித்தார்.