1. ரொமேலியாவின் மகன் பாசேயினுடைய ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோவாத்தாமின் மகன் ஆக்காசு அரியணை ஏறினான்.
2. அரசனான போது அவனுக்கு இருபது வயது; அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தன் தந்தையான தாவீதைப்போல், தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நல்லவனாய் நடந்து கொள்ளவில்லை.
3. இஸ்ராயேல் அரசர்கள் நடந்த வழியிலேயே தானும் நடந்து, ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை முன்னிட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கத்தின் படியே தன் மகனைத் தீயில் நடக்கச் செய்து பொய்த்தேவர்கட்கு அவனைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
4. மேலும் மேடுகளிலும், குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த மரங்களுக்குக் கீழும் பலியிட்டுக் கொண்டு வந்தான். தூப வழிபாடும் நடத்தி வந்தான்.
5. அப்போது சீரியா நாட்டின் அரசன் ரசீனும், இஸ்ராயேலின் அரசனும் ரொமேலியாவின் மகனுமான பாசேயும் யெருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தனர். அவர்கள் ஆக்காசைத் தாக்கிய போதிலும் அவனை வெல்ல முடியாது போயினர்.
6. அப்போது சீரியாவின் அரசன் ரசீன், ஐலாவைச் சீரியாவோடு சேர்த்துக் கொண்டு அங்கு வாழ்ந்து வந்த யூதரை வெளியேற்றினான். இதுமேயர் ஐலாவுக்கு வந்து இன்றுவரை அங்கே குடியேறியிருக்கின்றனர்.
7. ஆக்காசு அசீரியாவின் அரசன் தெகிளாத்-பலசாரிடம் தூது அனுப்பி, "நான் உம் ஊழியனும் மகனுமாயிருக்கிறேன். நீர் இங்கு வந்து எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்யும் சீரியாவின் அரசனிடமிருந்தும் இஸ்ராயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டுகிறேன்" என்று சொன்னான்.
8. மேலும் ஆண்டவருடைய ஆலயத்திலும் அரண்மனைக் கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் சேர்த்து அசீரிய அரசனுக்கு அவற்றைப் பரிசாக அனுப்பி வைத்தான்.
9. அசீரிய அரசன் அவனது விருப்பத்திற்கு இசைந்து, தமாஸ்கு நகரில் நுழைந்து, அதை அழித்து விட்டு, அதன் குடிகளைச் சிறைப்படுத்திச் சீரோனுக்குக் கொண்டு போனான். அன்றியும் ரசீனையும் கொன்றான்.
10. ஆக்காசு அசீரிய அரசனாகிய தெகிளாத் - பலசாரைச் சந்திக்கத் தமாஸ்கு நகருக்குச் சென்றான். தமாஸ்கு நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்ணுற்ற அரசன் ஆக்காசு எல்லா வேலைப் பாட்டுடனும் கூடிய அதன் மாதிரி ஒன்றை ஊரியா என்ற குருவுக்கு அனுப்பி வைத்தான்.
11. அரசன் ஆக்காசு தமாஸ்கு நகரிலிருந்து இட்டிருந்த கட்டளையின்படி, குரு ஊரியா ஒரு பீடத்தைக் கட்டித் தமாஸ்கு நகரினின்று அரசன் ஆக்காசு வந்து சேர்வதற்குள் அதை முடித்தார்.
12. அரசன் தமாஸ்கு நகரிலிருந்து வந்த போது அந்தப் பீடத்தைப் பார்த்து அதற்கு வழிபாடு செய்தான். பிறகு அதன் அருகில் சென்று தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினான்.
13. மேலும் பானப் பலியையும் செலுத்தித்தான் செலுத்திய சமாதானப் பலிகளின் இரத்தத்தைத் தெளித்தான்.
14. அன்றியும் அவன் ஆண்டவர் திருமுன் இருந்த பித்தளைப் பலி பீடத்தை அங்கிருந்து அகற்றி ஆலயத்தின் முன்னிருந்தும், அதற்குக் குறிக்கப்பட்டிருந்த நடுப்பீடத்திலிருந்தும் எடுத்து வந்து அதனைத் தன் பலிபீடத்தின் அருகில் வடப்புறமாய் வைத்தான்.
15. பிறகு அரசன் ஆக்காசு குரு ஊரியாவை நோக்கி, "(நான் கட்டச் சொல்லிய) பெரிய பீடத்தின் மேல் நீர் காலையில் தகனப் பலியையும் மாலையில் காணிக்கைப் பலியையும், அரசனின் தகனப்பலி காணிக்கைப் பலிகளையும், எல்லா மக்களின் தகனப் பலிகளையும், காணிக்கைப் பலிகளையும் பானப் பலிகளையும் செலுத்தி, தகனப் பலியாகவோ காணிக்கைப் பலியாகவோ செலுத்தப்பட்ட விலங்குகளின் இரத்தத்தை எல்லாம் அதன்மேல் தெளிப்பீராக. பித்தளைப் பீடமோ தற்போது அப்படியே இருக்கட்டும். பிற்பாடு என் விருப்பப்படி செய்யலாம்" என்று கட்டளையிட்டான்.
16. அரசன் ஆக்காசு கட்டளையிட்ட அனைத்தையும் குரு ஊரியா செய்தார்.
17. மேலும் அரசன் ஆக்காசு சித்திர வேலைப்பாடுள்ள தாங்கிகளையும், அவற்றின் மேல் இருந்த கொப்பரைகளையும், வெண்கலக் காளைகளின் மேல் இருந்த கடல் தொட்டியையும் இறக்கிக் கற்களால் பாவப்பட்ட தளத்தில் வைத்தான்.
18. ஓய்வு நாளில் அரசன் ஆலயத்தில் நுழையும் பொருட்டுத் தான் கட்டியிருந்த முசாக் என்ற மண்டபத்தையும், வெளியிலிருந்து நுழையும் வாயிலையும் அசீரிய அரசனின் பொருட்டு ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
19. ஆக்காசு செய்த மற்றச் செயல்கள் யூதாவின் அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
20. ஆக்காசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தாவீதின் நகரில் தன் முன்னோருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் எசெக்கியாசு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.