1. ஒக்கோசியாசின் தாய் அத்தாலி தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு அரச குலத்தார் அனைவரையும் கொன்று குவிக்கத் தொடங்கினாள்.
2. யோராம் அரசனின் மகளும் ஒக்கோசியாசின் சகோதரியுமான யோசபா, கொல்லப்பட இருந்த அரச புதல்வரில் ஒருவனான ஒக்கோசியாசின் மகன் யோவாசையும், அவனுடைய தாதியையும் பள்ளியறையினின்று இரகசியமாய்க் கூட்டிச் சென்று அத்தாலியாளுக்குத் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்து அவனது உயிரைக் காப்பாற்றினாள்.
3. யோவாசு ஆறு ஆண்டுகள் தன் தாதியோடு கோயிலில் தலைமறைவாய் இருந்தான். அப்பொழுதெல்லாம் அத்தாலியே நாட்டை ஆண்டு வந்தாள்.
4. ஏழாம் ஆண்டிலோ, யோயியாதா நூற்றுவர் தலைவர்களையும் வீரர்களையும் வரவழைத்து, ஆண்டவரின் ஆலயத்திற்குள் கூட்டிச் சென்று அவர்களோடு உடன்படிக்கை செய்தார். பின், கோயிலில் அவர்களை ஆணையிடச் செய்து, அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டி,
5. என் கட்டளைப்படி, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் ஓய்வு நாளில் வந்து அரசனின் அரண்மனையைக் காக்க வேண்டும்.
6. மேலும் மூன்றில் ஒரு பங்கினர் சூர் என்ற வாயிலில் இருக்க வேண்டும். எஞ்சிய வீரர்கள் கேடயம் தாங்குவோர் தங்குமிடத்திற்குப் பின்னேயுள்ள வாயிலிலிருந்து கொண்டு மெசாவின் வீட்டைப் பாதுகாக்கவேண்டும்.
7. உங்களில் ஓய்வு நாளிலே அலுவல் புரிவோரில் இரண்டு பங்கு வீரர்கள் அரசனைச் சூழ்ந்து நிற்பதோடு கோயிலையும் காவல் புரியவேண்டும்.
8. நீங்கள் கையில் ஆயுதம் தாங்கி அவரைக் காப்பதோடு, யாராவது கோயிலின் முற்றத்தில் நுழைந்தால் அவர்களை உடனே கொன்று விட வேண்டும். அரசர் வெளியே வந்தாலும், உள்ளே போனாலும் அவர் கூடவே நீங்கள் இருக்க வேண்டும்" எனக் கட்டளையிட்டார்.
9. குரு யோயியாதா கட்டளையிட்டபடி நூற்றுவர் தலைவர் நடந்துகொண்டனர். ஓய்வு நாளில் தத்தம் முறைப்படி வந்து போய்க்கொண்டிருக்கிற தங்கள் வீரர்கள் அனைவரையும் அவரவர் கூட்டிக் கொண்டு குரு யோயியாதாவிடம் வந்தனர்.
10. அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டி முதலிய ஆயுதங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
11. அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தாங்கியவராய் கோயிலின் வலப்புறம் தொடங்கிப் பீடத்தின் இடப்புறம் வரை ஆலயத்தில் அரசனைச் சூழ்ந்து நின்றனர்.
12. யோயியாதா இளவரசனை வெளியே கூட்டிவந்து அவனது தலையின் மேல் முடியை வைத்து, கையில் திருச்சட்ட நூலை அளித்தார்; இவ்வாறு அவனை அரசனாக அபிஷுகம் செய்தனர். பிறகு எல்லாரும், "அரசர் வாழ்க!" என்று சொல்லிக் கைதட்டினர்.
13. அப்பொழுது மக்கள் ஓடிவரும் ஓசையை அத்தாலி கேட்டு, ஆண்டவரின் ஆலயத்தில் கூடி நின்ற மக்களிடம் வந்தாள்.
14. அப்போது வழக்கம்போல் அரசன் அரியணையில் வீற்றிருப்பதையும், அவன் அருகில் பாடகர்களும் எக்காளம் ஊதுபவர்களும் நிற்பதையும், எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்ட அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி, சதி!" என்று கூக்குரலிட்டாள்.
15. யோயியாதா நூற்றுவர் தலைவரான படைத் தலைவர்களை நோக்கி, "இவளைக் கோயில் வளாகத்துக்கு வெளியே கொண்டு போங்கள். எவனாவது இவளைப் பின்பற்றுவானானால், அவன் வாளுக்கிரையாவான்" எனக் கட்டளையிட்டார். ஏற்கெனவே, "ஆண்டவரின் ஆலயத்திற்குள் அவளைக் கொல்லலாகாது" என்று சொல்லியிருந்தார். படைத் தலைவர்கள் அவளைப் பிடித்து,
16. அரண்மனைக்கு அருகே 'குதிரைகளின் வாயில்' என்ற சாலையிலே அவளை இழுத்துக் கொண்டுபோய் அங்கு அவளைக் கொன்றனர்.
17. பின்பு யோயியாதா தாங்கள் ஆண்டவரின் மக்ககளாய் இருப்பதாக, அரசனும் மக்களும் ஆண்டவரோடும், மக்களும் அரசனும் தங்களுக்குள்ளேயும் உடன்படிக்கை செய்யச் செய்தார்.
18. அப்போது நாட்டின் மக்கள் எல்லாம் பாவாலின் கோயிலில் நுழைந்து, பீடங்களை இடித்துச் சிலைகளைச் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர். பாவாலின் பூசாரி மாத்தானையும் பீடத்திற்கு முன்பாகக் கொலைசெய்தனர். பிறகு குரு ஆண்டவரின் ஆலயத்திலும் காவலரை நிறுத்தி வைத்தார்.
19. அன்றியும் அவர் நூற்றுவர் தலைவரையும், மக்கள் அனைவருடன் கெரேத், பெலேத் என்ற படைகளையும் சேர்த்து, அரசனை ஆண்டவரின் ஆலயத்தினின்று அழைத்துக் கொண்டு, 'கேடயம் தாங்குவோரின்' வாயில் வழியாக அரண்மனைக்கு வந்தார். அங்கு அரசன் தன் அரியணையில் அமர்ந்தான்.
20. நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். நகரில் அமைதி நிலவிற்று. அத்தாலி என்பவளோ அரசனின் அரண்மனை அருகே வாளுக்கு இரையானாள்.
21. யோவாசு அரியணை ஏறுகையில் அவனுக்கு வயது ஏழு.