1. ஆகையால் அன்புக்குரியவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கும் நாம் உடலிலும் உள்ளத்திலும் எவ்வித மாசுமின்றி நம்மைத் தூயவர்களாக்கிக்கொள்வோமாக, கடவுளுக்கு அஞ்சிப் பரிசுத்தத்தின் முழுமையை அடைவோமாக.
2. உங்கள் உள்ளத்திலே எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, யாருக்கும் கெடுதி செய்யவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை.
3. கண்டனம் செய்வதுபோல் அதை நான் சொல்ல விரும்பவில்லை. செத்தால் ஒன்றாய்ச் சாகிறோம், வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்கிறோம் என்னும் அளவுக்கு எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறீர்கள்; இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
4. உங்களிடம் நான் மிகுந்த துணிவோடு பேசுகிறேன்; உங்களைக் குறித்து மிகப்பெருமைப்படுகிறேன்; எனக்கு வரும் வேதனையிலெல்லாம் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.
5. உள்ளபடியே, நாங்கள் மக்கெதோனியாவுக்கு வந்து சேர்ந்தபோது, எளியோர் எமக்கு அமைதியே கிட்டவில்லை; எல்லா வகையிலும் வேதனையுற்றோம்; புறத்திலே பல சச்சரவுகள், உள்ளத்திலே பலவிதத்திலும் அச்சம்;
6. ஆனால், தாழ்மையுள்வர்களுக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வருகையால் எங்களுக்கு ஆறுதல் அளித்தார்.
7. அவருடைய வருகையால் மட்டுமன்று, உங்களால் அவர் அடைந்த ஆறுதலாலும் எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. உங்களுக்கிருந்த ஏக்கத்தையும், நீங்கள் வடித்த கண்ணீரையும், என்மட்டில் நீங்கள் காட்டிய ஆர்வத்தையும் அவர் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டபின் எனக்கு இன்னும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாயிற்று.
8. நான் எழுதிய கடிதத்தால் உங்களுக்குத் துயர் தந்திருந்தாலும், அதற்காக நான் மனம் வருந்தவில்லை; அந்தக் கடிதம் உங்களைச் சில நாழிகையேனும் துயரத்தில் ஆழ்த்திற்று என்று தெரிகிறது; அதற்காக நான் முதலில் வருந்தியிருந்தாலும், இப்பொழுது எனக்கு மகிழ்ச்சிதான்.
9. நீங்கள் துயரத்துக்குள்ளானீர்கள் என்பதற்காக நான் மகிழவில்லை. ஆனால், மனமாற்றம் விளைவித்த துயரத்துக்குள்ளானீர்கள் என்பதற்காகவே மகிழ்கிறேன். ஏனெனில், கடவுளின் திருவுளத்திற்கேற்றவாறு அத்துயரத்தை ஏற்றுக்கொண்டீர்கள்; ஆகவே நாங்கள் செய்தது உங்களுக்கு எத்தீமையும் இழைக்கவில்லை.
10. கடவுளின் திருவுளத்தின்படி ஏற்கப்படும் துயரம், மீட்புத் தரும் மனமாற்றத்தை விளைவிக்கிறது. அதற்காக மனம் வருந்துவதற்கு இடமே இல்லை. ஆனால், இவ்வுலகுக்கடுத்த துயரமோ, சாவையே கொணர்கிறது
11. இதோ பாருங்கள், கடவுளின் திருவுளத்திற்கேற்ப நீங்கள் ஏற்றுக்கொண்ட துயரம் உங்களுக்கு எவ்வளவு ஊக்கமூட்டியது! அதுமட்டுமா? உங்களுடைய நேர்மையை எண்பிக்க உங்களுக்கு எவ்வளவு துடிப்பு! எவ்வளவு உள்ளக் கொதிப்பு! எவ்வளவு பரபரப்பு! என்னைப்பார்க்க எவ்வளவு ஏக்கம்! என்மீது எவ்வளவு ஆர்வம்! தீயவனை ஒறுப்பதில் எவ்வளவு கண்டிப்பு! இக்காரியத்தில் நீங்கள் எவ்வகையிலும் குற்றமற்றவர்கள் என எண்பித்தீர்கள்.
12. ஆகையால் நான் அக்கடிதம் எழுதியது அநீதி செய்வனை முன்னிட்டுமன்று; அநீதிக்கு ஆளாகாதவனை முன்னிட்டுமன்று; எங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கறை கடவுள் முன்னிலையில் உங்களுக்கு விளங்கும் படியே அதை எழுதினேன்.
13. அதனால் தான் ஆறுதல் அடைந்தோம். இப்படி எங்களுக்குக் கிடைத்த ஆறுதலோடு தீத்துவின் மகிழ்ச்சியையும் பார்த்தபோது, இன்னும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாயிற்று. நீங்கள் அனைவரும் அவர் உள்ளத்தைக் குளிரச் செய்தீர்கள்.
14. அவரிடம் உங்களைப்பற்றிப் பெருமையாய்ப் பேசியிருந்தேன்; அப்படிப் பேசியது அறிவீனமாகத் தென்படவில்லை. ஆனால், நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் எவ்வாறு உண்மையாய் இருந்ததோ, அவ்வாறே தீத்துவிடம் உங்களைக் குறித்து நாங்கள் பெருமையோடு சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது .
15. உங்கள் எல்லோருடைய பணிவையும், அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அவரை நீங்கள் ஏற்றுக்கொண்ட வகையையும் அவர் நினைவு கூரும் போது, அவருடைய உள்ளமும் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது
16. உங்கள்மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு; இது எனக்குப் பெருமகிழ்ச்சி.