1. சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தையும், தம் அரண்மனையையும் கட்டியபின் இருபது ஆண்டுகள் கடந்தன.
2. பின்னர் ஈராம் தமக்குக் கொடுத்திருந்த நகர்களைச் சாலமோன் திரும்பக் கட்டி அவற்றில் இஸ்ராயேல் மக்கள் குடியேறச் செய்தார்.
3. அவர் ஏமாத்சோபாவுக்குப் போய் அதைக் கைப்பற்றினார்.
4. பாலைவனத்தில் பல்மீர் நகரையும், ஏமாத் நாட்டிலுள்ள சிறந்த அரணுள்ள பற்பல நகர்களையும் கட்டினார்.
5. மேல் பெத்தரோனையும், கீழ் பெத்தரோனையும் மதில்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களும் கொண்ட அரணுள்ள நகர்களாக மாற்றினார்.
6. பாலாதையும் தமக்குச் சொந்தமான கோட்டை நகர்களையும், தேர்கள், குதிரை வீரர்கள் இருந்த எல்லா நகர்களையும் எழுப்பினார். பின்னர் யெருசலேமிலும் லீபானிலும் தமது நாடெங்கும் தாம் எண்ணித் திட்டமிட்டிருந்தவற்றை எல்லாம் கட்டி முடித்தார்.
7. இஸ்ராயேல் மக்கள் கொன்று போடாது விட்டு வைத்திருந்த இஸ்ராயேலரல்லாத ஏத்தையர், அமோறையர், பெரேசையர், ஏவையர்,
8. எபுசையர் ஆகியோரின் குலவழி வந்தோரைச் சாலமோன் தமக்குக் கப்பம் கட்டச் செய்தார். அவர்கள் இன்று வரை கப்பம் கட்டி வருகிறார்கள்.
9. தம் வேலைகளைச் செய்யுமாறு இஸ்ராயேலரில் ஒருவரைக்கூட சாலமோன் நியமிக்கவில்லை. அவர்கள் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், தேர்ப்படைக்கும் குதிரைப்படைக்கும் தளபதிகளாகவும் திகழ்ந்தனர்.
10. சாலமோன் அரசரின் படைத்தலைவர்களாக மொத்தம் இருநூற்றைம்பது பேர் இருந்தனர். அவர்களே மக்கள்மேல் அதிகாரம் செலுத்தி வந்தனர்.
11. அப்போது சாலமோன் தமக்குள் சிந்தனை செய்து, "ஆண்டவரது திருப்பேழை இருந்த இடமெல்லாம் புனிதமானது. எனவே இஸ்ராயேலின் அரசராகிய தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது" என்று சொல்லி, பாரவோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து வெளியேற்றி, தாம் அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகைக்கு அவளைக் கூட்டிச் சென்றார்.
12. பிறகு தாம் மண்டபத்துக்கு முன்பாகக் கட்டியிருந்த ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் சாலமோன் ஆண்டவருக்குத் தகனப்பலிகளைச் செலுத்தினார்.
13. மோயீசனின் சட்டப்படி அப்பலிபீடத்தில் ஓய்வு நாளிலும் அமாவாசை நாட்களிலும் ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத்திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று திருவிழாக்களின் போதும், அந்தந்த நாளுக்குக் குறிப்பபிடப்பட்டிருந்தவாறு பலிகளைச் செலுத்திவந்தார்.
14. மேலும், சாலமோன் தம் தந்தை தாவீது செய்திருந்த திட்டத்தின்படியே திருப்பணி ஆற்றும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கு முறைக்கேற்பப் புகழ்பாடி, குருக்களோடு சேர்ந்து லேவியர்கள் ஆற்ற வேண்டிய திருப்பணி ஒழுங்குகளையும், வாயில்களைக் காவல்புரிய வாயிற்காவலரின் பிரிவுகளையும் ஏற்படுத்தினார். ஏனெனில் கடவுளின் மனிதரான தாவீது இவ்வாறு செய்ய அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.
15. கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட எல்லாக் காரியங்களையுமே குருக்களும் லேவியரும் அரச கட்டளைப்படி செய்துவந்தனர்.
16. இவ்வாறு ஆண்டவரின் ஆலயத்துக்குச் சாலமோன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த வேலை எல்லாம் முடிவுற்றது.
17. பின்பு சாலமோன் ஏதோம் நாட்டுக் கடற்கரை நகர்களான அசியோங்கபேருக்கும் ஏலோத்துக்கும் புறப்பட்டுப் போனார்.
18. ஈராம் கடற்பயணத்தில் கைதேர்ந்த மாலுமிகளையும் கப்பல்களையும் தம் ஊழியர் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தான். இவர்கள் சாலமோனின் ஊழியர்களோடு ஒப்பீருக்குப் போய் அங்கிருந்து நானூற்றைம்பது தாலந்து பொன்னை ஏற்றிச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்தனர்.