1. யோவாத்தாம் அரசுகட்டில் ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் அரசோச்சினான். சாதோகின் மகளான அவனுடைய தாயின் பெயர் எருசா.
2. தன் தந்தை ஓசியாசைப் போன்று அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான். ஆனால் அவனைப் போல் இவன் ஆண்டவரின் ஆலயத்தில் நுழையவில்லை. மக்களோ இன்னும் தீய வழியிலேயே நடந்து வந்தார்கள்.
3. அவன் ஆண்டவரது ஆலயத்தின் பெரிய வாயிலைக் கட்டினதோடு ஓப்பேலின் மதில் மேல் பல கட்டடங்களையும் கட்டுவித்தான்.
4. மேலும் அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டை கொத்தளங்களையும் கட்டினான்.
5. அம்மோனிய அரசனோடு போராடி அவர்களை வென்றான். ஆதலால் அம்மோனியர் அவனுக்கு அவ்வாண்டு நூறு தாலந்து வெள்ளியும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும் திறையாகக் கொடுத்தனர். இரண்டாம் மூன்றாம் ஆண்டிலும் அவ்வாறே அவனுக்குச் செலுத்தினர்.
6. யோவாத்தாம் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடந்து வந்ததால் ஆண்டவர் அவனைப் பலப்படுத்தினார்.
7. யோவாத்தாம் செய்த போர்களும், அவனுடைய மற்றச் செயல்களும், அவனைப் பற்றிய எல்லா விவரமும் இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
8. அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான்.
9. பிறகு யோவாத்தாம் தன் முன்னோரோடு துயிலுற்றுத் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காஸ் அவனுக்கு பின் அரியணை ஏறினான்.