1. அமாசியாஸ் அரச பதவி ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் யோவாதானா. அவள் யெருசலேம் நகரில் பிறந்தவள்.
2. அமாசியாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான். ஆயினும் முழுமனத்தோடும் அவ்வாறு நடந்தானில்லை.
3. தன் அரசை நிலைநாட்டிய பின் தன் தந்தையான அரசனைக் கொன்ற ஊழியர்களைக் கொன்று குவித்தான்.
4. ஆனால் அவர்களின் பிள்ளைகளை உயிரோடு விட்டு வைத்தான். ஏனெனில் மோயீசனின் திருச்சட்ட நூலில், "பிள்ளைகளின் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டும் புதல்வர்களும் கொல்லப்படக் கூடாது; அவனவன் செய்த பாவத்தின் பொருட்டு அவனவனே சாக வேண்டும்" என்று ஆண்டவர் திருவுளம் பற்றியிருந்தார்.
5. பின்னர் அமாசியாஸ் யூதாமக்களை ஒன்று திரட்டி, யூதா பென்யமீன் நாடெங்கும் ஆயிரவர் தலைவர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தி. அவர்களுக்குக் கீழ் மக்களைக் குடும்ப வாரியாகப் பிரித்து வைத்தான். இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள இளைஞர்களைக் கணக்கிட்டான். கேடயம் தாங்கிப் போரிடத்தக்க வேல் வீரர் மூன்று லட்சம் பேரைப் பொறுக்கி எடுத்தான்.
6. இஸ்ராயேலிலும் ஒரு லட்சம் வீரர்களை நூறு தாலந்து வெள்ளிக்கு அமர்த்தினான்.
7. அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, "அரசே, இஸ்ராயேலின் படை உம்மோடு வரக்கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ராயேல் புதல்வரோடும் எப்பிராயீம் புதல்வரோடும் இல்லை.
8. திரளான படை இருப்பதால் வெற்றி கிட்டும் என்று நீர் நம்புவீராகில் கடவுள் உம்மை எதிரிகள் முன் தோல்வியுறச் செய்வார். ஏனெனில் உதவி கொடுக்கவும் எதிரிகளை முறியடிக்கவும் கடவுளாலேயே முடியும்" என்றார்.
9. அப்பொழுது அமாசியாஸ் கடவுளின் மனிதரை நோக்கி, "அப்படியானால் இஸ்ராயேல் படைக்கு நான் கொடுத்த அந்த நூறு தாலந்தும் வீணாய்ப் போகுமே! இதற்கு என்ன சொல்லுகிறீர்?" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர் அவனைப் பார்த்து, "ஆண்டவரால் அதை விட அதிகமாய் உமக்குக் கொடுக்க முடியுமே" என்றார்.
10. அப்பொழுது அமாசியாஸ் எப்பிராயீமிலிருந்து வந்திருந்த வீரர்களைப் பிரித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின் மேல் கடும் கோபம் கொண்டவராய்த் தங்கள் நாடு திரும்பினர்.
11. பின்பு அமாசியாஸ் திடம் கொண்டு தன் படையை உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்குச் செயீர் புதல்வரில் பதினாயிரம் பேரைக் கொன்று குவித்தான்.
12. இன்னும் பதினாயிரம் பேரை அவர்கள் பிடித்து ஒரு கற்பாறையின் உச்சிக்குக் கொண்டு போய் அங்கிருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டார்கள். இவர்கள் எல்லாரும் நொறுங்கி மடிந்தனர்.
13. இதற்கிடையில் தன்னோடு போருக்கு வரக் கூடாதென்று சொல்லி அமாசியாஸ் அனுப்பி விட்டிருந்த போர்வீரர் சமாரியா முதல் பெத்தரோன் வரையுள்ள யூதா நகர்களைத் தாக்கி; மிகுதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
14. அமாசியாசோ ஏதோமியரை முறியடித்துச் செயீர் புதல்வர்களின் சிலைகளை யெருசலேமுக்குக் கொண்டு வந்தான். அவற்றைத் தனக்குத் தெய்வங்களாக வைத்து அவற்றிற்கு வழிபாடு செய்து தூபம் காட்டினான்.
15. எனவே ஆண்டவர் அமாசியாசின்மேல் சீற்றம் கொண்டு அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். இவர் அவனை நோக்கி, "தம்மை நம்பியிருந்த மக்களையே உமது கையிலிருந்து காக்க முடியாத தெய்வங்களை நீர் வழிபடுவது ஏன்?" என்றார்.
16. அமாசியாஸ் தன்னோடு இவ்வாறு பேசின இறவாக்கினரை நோக்கி, "நீ அரசனின் ஆலோசகனோ? உன் வாயை மூடு. இன்றேல் நான் உன்னைக் கொன்று போடுவேன்" என்று மறுமொழி சொன்னான். இதைக்கேட்ட இறைவாக்கினர் அவனைப் பார்த்து, "நீர் எனது ஆலோசனையைக் கேளாது இவ்வாறு நடந்து கொண்டதால், கடவுள் உம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்" என்று சொல்லி வெளியே சென்றார்.
17. பின்பு யூதாவின் அரசன் அமாசியாஸ் தீயோரின் ஆலோசனையைக் கேட்டு, ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்த யோவாஸ் என்ற இஸ்ராயேலின் அரசனுக்குத் தூதுவரை அனுப்பி, "வாரும், போர்க் களத்தில் சந்தித்துப் பார்ப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
18. அதற்கு இஸ்ராயேலின் அரசன் யோவாஸ் தன்னிடம் வந்த தூதுவர்களை அமாசியாசிடம் திரும்ப அனுப்பி, "லீபான் மலையிலிருந்த நெருஞ்சி முட்செடி ஒன்று அதே மலையிலுள்ள கேதுரு மரத்திடம் தூதனுப்பி, 'நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக் கொடு' என்று கேட்கச் சொன்னதாம். அதற்குள் லீபான் மலையிலுள்ள காட்டு மிருகங்கள் அவ்வழியே நடந்து போய் அம் முள் செடியைக் காலால் மிதித்து அழித்துப் போட்டனவாம்!
19. ஏதோமியரை முறியடித்ததனால் நீர் அகந்தை கொண்டு பெருமை பாரட்டுவது சரியன்று. உமது வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி நீர் தீங்கை வீணிலே தேடிக்கொள்ள வேண்டாம்" என்று மறுமொழி சொல்லச் சொன்னான்.
20. அமாசியாஸ் இதற்குச் செவிமடுக்கவில்லை. ஏனெனில் அவன் ஏதோமியரின் தெய்வங்களை வழிபட்டு வந்ததன் பொருட்டு அவனை அவன் எதிரிகளின் கையில் ஒப்புவிக்க ஆண்டவர் முடிவு செய்திருந்தார்.
21. ஆகவே இஸ்ராயேலின் அரசன் யோவாஸ் படையெடுத்துச் சென்றான். யூதாவிலுள்ள பெத்சமேசில் அவனும் யூதாவின் அரசன் அமாசியாசும் ஒருவரோடொருவர் போர் செய்தனர்.
22. யூதா மனிதர் இஸ்ராயேலரால் முறியடிக்கப்பட்டுத் தங்கள் கூடாரங்களை நோக்கி ஓடினர்.
23. யோவக்காசின் மகன் யோவாசுக்குப் பிறந்த அமாசியாஸ் என்ற யூதாவின் அரசனோ பெத்சாமேஸ் நகரில் இஸ்ராயேல் அரசன் யோவாசால் சிறைப்படுத்தப்பட்டு, யெருசலேமுக்குக் கொண்டு போகப்பட்டான். யோவாஸ் எப்பிராயீம் வாயில் துவக்கி மூலை வாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு யெருசலேம் மதிலை இடித்துத் தள்ளினான்.
24. மேலும் ஒபேதெதோமின் பொறுப்பிலே கடவுளின் ஆலயத்தில் இருந்த பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் அரண்மனைக் கருவூலத்தில் இருந்தவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றான். பிணையாய் நிறுத்தப்பட்டவர்களின் புதல்வர்களையும் சிறைபிடித்துச் சமாரியா திரும்பினான்.
25. யோவாக்காசின் மகன் யோவாஸ் என்ற இஸ்ராயேலின் அரசன் இறந்த பின் யோவாசின் மகன் அமாசியாஸ் என்ற யூதாவின் அரசன் பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.
26. அமாசியாசின் வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
27. அமாசியாஸ் ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் யெருசலேம் மக்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து அவனைக் கொல்ல முயன்றனர். அவன் லாக்கீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவர்கள் அவனுக்குப் பிறகே ஆட்களை அனுப்பி அங்கே அவனைக் கொன்று போட்டனர்.
28. குதிரைகளின் மேல் அவனது பிணத்தை ஏற்றிகொண்டு வந்து, தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் அருகே அவனை அடக்கம் செய்தனர்.