1. ஆசாவினது ஆட்சியின் முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ராயேலில் அரசன் பாசா யூதா நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து வந்து ராமாவைச் சுற்றிலும் அரண் எழுப்பினான். இவ்வாறு ஆசாவின் நாட்டில் போக்கு வரத்தைத் தடை செய்ய அவன் எண்ணம் கொண்டிருந்தான்.
2. ஆகவே ஆசா ஆண்டவரின் ஆலயத்திலிருந்தும் அரச கருவூலத்திலிருந்தும் பொன், வெள்ளி முதலியவற்றை எடுத்துத் தமாஸ்குவில் வாழ்ந்து வந்த பெனாதாத் என்ற சீரியா அரசனுக்கு அனுப்பி வைத்தான்.
3. என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் இடையே உடன்படிக்கை இருந்து வந்தது போல், எனக்கும் உமக்கும் இடையேயும் உடன்படிக்கை இருந்து வருகிறது. எனவே வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பி வைக்கிறேன். இஸ்ராயேலின் அரசனாகிய பாசாவோடு நீர் செய்துள்ள உடன்படிக்கைகளை நீக்கி, அவன் என்னை விட்டு விலகும்படி செய்யும்" என்று சொல்லி அனுப்பினான்.
4. இதற்கு இணங்கிப் பெனாதாத் படைத்தலைவர்களை இஸ்ராயேலரின் நகர்கள் மீது படையெடுக்கும்படி அனுப்பி வைத்தான். அவர்கள் அயோனையும் தாணையும் ஆபல் மாயீமையும், நெப்தலி கோத்திரத்து அரணுள்ள நகர்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினர்.
5. இதைக் கேள்வியுற்ற பாசா, ராமாவின் மதிலைக் கட்டுகிறதை நிறுத்தினான்.
6. அப்பொழுது அரசன் ஆசா யூதமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ராமாவைக் கட்டும்படி பாசா எடுத்து வந்து காபாவையும் மஸ்பாவையும் கட்டினான்.
7. அக்காலத்தில் இறைவாக்கினர் அனானி ஆசாவிடம் வந்து அவனை நோக்கி, "உம் கடவுளாகிய ஆண்டவரை நீர் நம்பாமல், சீரியா அரசனை நம்பியதால், சீரியா நாட்டுப் படை உமது கைக்குத் தப்பிற்று.
8. எத்தியோப்பியருக்கும் லிபியருக்கும் இதைவிட மிகுதியான தேர்களும் குதிரை வீரரும் பெரும் படையும் இருக்கவில்லையா? அப்படியிருந்தும் நீர் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருந்ததினால் அவர் அவர்களை உமது கையில் ஒப்படைத்தாரல்லரோ?
9. ஆண்டவர் அவனி எங்கும் நடக்கும் அனைத்தையும அறிவார். தம்மை முழுமனதோடும் நம்பும் அனைவர்க்கும் அவர் ஆற்றல் அளிப்பார். நீரோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்து கொண்டுள்ளீர். எனவே இன்று முதல் எதிரிகள் உம்மைப் பலமுறை எதிர்த்து வருவர்" என்றார்.
10. இதைக் கேட்ட ஆசா இறைவாக்கினர் மேல் மிகவும் சினந்து அவரைச் சிறையிலிடக் கட்டளையிட்டான். மக்களுள் பலரையும் கொன்று குவித்தான்.
11. ஆசாவின் வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
12. ஆசாவினுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் அவனுக்குக் கால்களில் ஒரு கொடிய வியாதி கண்டது. ஆயினும் அவன் ஆண்டவரின் துணையை நாடாது, மருத்துவரின் திறமையிலேயே நம்பிக்கை வைத்தான்.
13. தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து தன் முன்னோரோடு துயில்கொண்டான்.
14. ஆசா தாவீதின் நகரில் தனக்கெனக் கட்டியிருந்த கல்லறையிலேயே அவனை அடக்கம் செய்தனர். கைதேர்ந்தோரால் செய்யப் பட்ட நறுமண எண்ணெயும் நறுமணப் பொருட்களும் நிறைந்த ஒரு படுக்கையின் மேல் அவனது சடலத்தைக் கிடத்தி, அவற்றைக் கொளுத்தினர்.