1. ஆபியா தன் முன்னோரோடு கண் வளர்ந்த பின் தாவீதின் நகரில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரியணை ஏறினான். அவனது ஆட்சியின் போது நாடு பத்தாண்டு அமைதி பூண்டிருந்தது.
2. ஆசா ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து நல்லன புரிந்து வந்தான். அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அழித்தான்.
3. அவர்களின் சிலைகளை உடைத்துச் சிலைத்தோப்புகளைத் தரைமட்டமாக்கினான்.
4. தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைத் தேடவும் திருச்சட்டத்தைப் பின்பற்றி அதன்படி நடக்கவும் யூதா மக்களுக்குக் கட்டளையிட்டான்.
5. யூதாவின் எல்லா நகர்களிலுமிருந்தும் பீடங்களையும் கோவில்களையும் அகற்றினான். அமைதியில் அரசாண்டான்.
6. கடவுளின் அருளால் அவனது ஆட்சியில் போரின்றி நாடெங்கும் அமைதி நிலவியது. எனவே அவன் யூதாவில் அரணான நகர்களைக் கட்டினான்.
7. அவன் யூதாவை நோக்கி, "நம் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை நாம் பின்பற்றி வந்ததால், அவர் நாடெங்கும் அமைதி நிலவச் செய்தார். சண்டையில்லாத இந்தக் காலத்தில் நாம் இந்நகர்களைக் கட்டவும், மதில்களையும் கோபுரங்களையும் எழுப்பி வாயில்களை அமைத்துத் தாழ்ப்பாள்களைப் போட்டுப் பலப்படுத்தவும் வேண்டும்" என்றான். அவ்விதமே மக்களும் செய்தனர். யாதொரு தடையுமின்றி வேலை நடந்தேறியது.
8. யூதா குலத்திலே கேடயம் தாங்கிப் போரிடும் மூன்று லட்சம் வேல் வீரரும், பென்யமீன் குலத்திலே கேடயம் தாங்கிப் போரிடும் இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் வில் வீரரும் இருந்தனர். மிக்க ஆற்றல் படைத்த இவர்கள் அனைவரும் ஆசாவின் படையைச் சேர்ந்தவர்கள்.
9. எத்தோப்பியனான ஜாரா பத்து லட்சம் போர் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து மரேசா வரை வந்தான்.
10. அப்பொழுது ஆசா அவனை எதிர்த்துச் சென்று மரேசாவுக்கடுத்த செப்பத்தா என்ற பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்தான்.
11. ஆசா தன் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, வலியோரை எதிர்த்து நிற்கும் எளியோரைக் காப்பவர் நீர் ஒருவரே! எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்களுக்குத் துணையாக வாரும். ஏனெனில் உம்மிடத்திலும் உமது திருப்பெயரிலும் நாங்கள் நம்பிக்கை வைத்தே இப்பெரும் படையை எதிர்த்து வந்துள்ளோம். நீரே எங்கள் கடவுள். உம்மை எந்த மனிதனும் மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.
12. அப்பொழுது ஆண்டவர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறியடிக்கவே, அவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர்.
13. அவர்களை ஆசாவும் ஆசாவோடு இருந்த மக்களும் கேரார் வரை துரத்திச் சென்றனர். எத்தியோப்பியர் எல்லாரும் அடியோடு அழிந்தனர். ஏனெனில் ஆசா படை வீரர் கண்முன்பாக ஆண்டவர் அவர்களை வெட்டி வீழ்த்தினார். யூதாவின் வீரர் மிகுதியான பொருட்களைக் கொள்ளையடித்தார்கள்.
14. அதுவுமன்றி கேராரைச் சுற்றியிருந்த நகர்களையும் கைப்பற்றினார்கள். ஏனெனில் எல்லா மக்களையும் பேரச்சம் ஆட்கொண்டிருந்தது. யூதாவின் வீரர்கள் நகர்களைச் சூறையாடி மிகுதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றார்கள்.
15. மேலும் மிருகத் தொழுவங்களை அவர்கள் இடித்துப் போட்டுத் திரளான ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் பிடித்துக் கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.