1. ' விசுவாசிகளை மேற்பார்வையிடும் அலுவலை ஏற்க விழைபவன் ஒரு மேன்மையான தொழிலையே விரும்புகிறேன் ' என்பது உண்மையான வார்த்தை.
2. எனவே, அவ்வலுவலை ஏற்பவர் பிறருடைய குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் திருமணம் புரிந்தவராய், மிதமிஞ்சிக் குடியாமல் விவேகம், நயமான நடத்தை, விருந்தோம்பல் கற்பிக்கும் ஆற்றல் ஆகிய நல்லியல்புகள் வாய்க்கப்பெற்று,
3. குடிவெறி, கலகம், வீண்சண்டை, பொருளாசை இவற்றை விலக்கிக் கனிந்த உள்ளத்தினராய் இருத்தல் வேண்டும்.
4. குடும்பத்தை செவ்வனே ஆண்டு, தம் மக்களைக் கீழ்ப்படிதலிலும் ஒழுக்கத்திலும் வளர்க்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
5. தம் குடும்பத்தையே ஆண்டு நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளின் சபையை எவ்வாறு கண்காணிக்க முடியும்?
6. அவர் புதுக் கிறிஸ்துவனாகவும் இருத்தல் கூடாது. 'இருந்தால் இறுமாப்புக்கொள்ளக் கூடும். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அடையலாம்.
7. மேலும், திருச்சபையைச் சேராதவர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராயிருக்க வேண்டும். இல்லையேல், இகழ்ச்சிக்காளாகலாம்; அலகையின் வலையிலும் விழக் கூடும்.
8. அவ்வாறே திருப்பணியாளர்கள் இரட்டை நாவுள்ளவர்களாகவோ, மதுபானப் பிரியர்களாகவோ, இழிவான முறையில் ஊதியம் தேடுபடுவர்களாகவோ இராது கண்ணியமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
9. விசுவாசத்தின் மறை பொருளைத் தூய மனச்சாட்சியோடு காத்துவரவேண்டும்.
10. அவர்களை முதலில் சோதித்துப் பார்க்கவேண்டும். யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதிருந்தால் திருப்பணிக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
11. அவர்களுடைய மனைவியரும் அவ்வாறே கண்ணியம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். புறணிபேசாமல், மிதமிஞ்சிக் குடியாது, எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கட்டும்.
12. திருப்பணியாளர்கள் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்தவர்களாய்த் தம் மக்களையும் குடும்பத்தையும் செவ்வனே நடத்துபவர்களாயிருக்க வேண்டும்.
13. திருப்பணியை நன்கு ஆற்றுவோர் உயர்நிலையடைவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப்பற்றிப் பேசத் துணிவும் பெறுவர்.
14. நான் இதை எழுதும்போது விரைவில் வந்து உம்மைக் காணும் நம்பிக்கையோடு எழுதுகின்றேன்.
15. ஒருவேளை நான் வரத் தாமதித்தால், நீர் கடவுளின் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இக்கடிதம் உணர்த்தும். இவ்வீடு உயிருள்ள கடவுளின் திருச்சபையே. அதுவே உண்மைக்குத் தூணும் அடிப்படையுமாகும்.
16. மெய்யாகவே, நமது விசுவாசத்தின் மறை பொருள் பெரியது, ஐயமே இல்லை. ஊன் உருவிலே அவர் தோன்றினார். தேவ ஆவியின் செயலாலே அவர் இறைவனுக்கு ஏற்புடையவரென விளங்கினார். வானத்தூதர்க்குத் தமைக் காண்பித்தார். புறவினத்தார்க்கு அறிவிக்கப்பெற்றார். விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பெற்றார். மாட்சிமையிலே அவர் விண்ணேற்பு அடைந்தார்.