1. பின்னர் நிகழ்ந்ததாவது: சாமுவேல் முதியவரானபோது தம் புதல்வர்களை இஸ்ராயலுக்கு நீதிபதிகளாக நியமித்தார்.
2. பெர்சபேயில் நீதிபதிகளான அவருடைய மூத்த மகனின் பெயர், ஜோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா.
3. அவர் சென்ற வழியிலே அவருடைய புதல்வர்கள் செல்லவில்லை; பண ஆசைகொண்டு, கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு நியாயத்தைத் திரித்துக் கூறினார்கள்.
4. அப்போது இஸ்ராயேலின் முதியோர் அனைவரும் ஒன்று கூடி ராமாத்தாவில் இருந்த சாமுவேலிடம் வந்தனர்.
5. அவரை நோக்கி "இதோ நீர் முதியவரானீர். உம் மக்கள் நீர் நடந்த வழியில் நடக்கிறதில்லை; எமக்கு நீதி வழங்க, மற்ற நாடுகளுக்கெல்லாம் இருப்பது போல் எங்களுக்கும் ஓர் அசரனை ஏற்படுத்தும்" என்று சொன்னார்கள்.
6. 'நீதி வழங்க ஓர் அரசனை எங்களுக்குக் கொடும்' என்ற அவர்களின் முறையீடு சாமுவேலுக்குப் பிடிக்கவில்லை. சாமுவேல் ஆண்டவரை மன்றாடினார்.
7. ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "மக்கள் உன்னிடம் சொல்வதை எல்லாம் கேள். உன்னை அவர்கள் புறக்கணித்து விடவில்லை; நாம் அவர்களை ஆளவிடாதபடி நம்மைத்தான் புறக்கணித்து விட்டார்கள்.
8. அவர்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்ட நாள் முதல் இன்று வரை அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் இப்படித்தான். நம்மை விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடுவது போல உனக்கும் செய்கிறார்கள்.
9. இப்போது அவர்கள் சொல்லுக்குச் செவிகொடு: ஆயினும், அவர்களுடன் விவாதித்து அவர்களை ஆளப்போகிற அரசனின் உரிமையை அவர்களுக்கு முன்னறிவி" என்றார்.
10. எனவே ஆண்டவர் கூறியவற்றை எல்லாம் சாமுவேல் தங்களுக்கு அரசன் வேண்டுமென்று கோரிய மக்களிடம் கூறினார்.
11. மீண்டும், "உங்களை ஆளப்போகிற அரசனின் உரிமை இதோ. அவன் உங்கள் பிள்ளைகளை எடுத்துத் தன் தேர்களை ஓட்ட வைத்துக் கொள்வான்; தனக்குக் குதிரை வீரர்களாகவும், தன் நான்கு குதிரைத் தேருக்கு முன் ஓடுகிறவர்களாகவும் செய்வான்.
12. அவன் அவர்களை ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவர்களாகவும், தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், ஆயுதங்கள், தேர்கள் செய்கிறவர்களாகவும் ஏற்படுத்துவான்.
13. உங்கள் புதல்விகளையோ தனக்குப் பரிமளக்காரிகளாகவும் சமையற்காரிகளாகவும் உரொட்டி செய்கிறவர்களாகவும் வைத்துக் கொள்வான்.
14. மேலும் உங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையம், ஒலிவ மரங்களில் நல்லவற்றையும் எடுத்துக் கொண்டு தம் ஊழியர்களுக்குக் கொடுப்பான்.
15. தன் அண்ணகர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கும் பொருட்டு, உங்கள் விளைச்சல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் பத்தில் ஒரு பங்கு கேட்பான்.
16. உங்கள் வேலைக்காரர் வேலைக்காரிகளையும், நல்ல இளைஞர்களையும் கழுதைகளையும் தன் வேலைக்கு வைத்துக்கொள்வான்.
17. உங்கள் மந்தைகளிலே பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான்; நீங்கள் அவனுக்கு ஊழியர்களாய் இருப்பீர்கள்.
18. நீங்களே தேர்ந்து கொண்ட உங்கள் அரசனுக்கு எதிராய் நீங்கள் முறையிடும் நாள் வரும். ஆனால், நீங்களே அரசனை விரும்பினதால் ஆண்டவர் அந்நாளில் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார்" என்றார்.
19. மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனமின்றி, "அப்படியன்று; எங்களுக்கு ஓர் அரசன் இருக்கத்தான் வேண்டும்" என்றனர்.
20. எல்லா இனத்தையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவான்; எங்களுக்கு முன் சென்று எங்கள் பொருட்டுப் போரிடுவான்" என்றனர்.
21. சாமுவேல் மக்கள் கூறியவற்றை எல்லாம் கேட்டு அவற்றை ஆண்டவருக்குத் தெரியப்படுத்தினார்.
22. ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்து" என்றார். அப்போது சாமுவேல் மக்களைப் பார்த்து, "அனைவரும் தத்தம் நகருக்குச் செல்லலாம்" என்று கூறினார்.