1. ஆனால் சிறுவன் சாமுவேல் ஏலிக்கு முன்பாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்து வந்தான். அந்நாட்களில் ஆண்டவரின் வாக்கு மிகவும் அருமையாய் இருந்தது. வெளிப்படையான காட்சியும் இல்லை.
2. ஒரு நாள் ஏலி தமக்கு உரிய இடத்தில் படுத்திருக்க, இதோ, அவரது பார்வை மங்கிப் போயிற்று. அவரால் பார்க்க முடியவில்லை.
3. கடவுளின் விளக்கு அணைக்கப்படுமுன்பே, கடவுளின் பேழை இருந்த ஆலயத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருந்தான்.
4. ஆண்டவர் சாமுவேலைக் கூப்பிட்டார். அவன் மறுமொழியாக, "இதோ, இருக்கிறேன்" என்றான்.
5. உடனே ஏலியின் அருகில் ஓடி, "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். அவர் "நான் கூப்பிடவில்லை; திரும்பிப் போய் தூங்கு" என்றார். அப்படியே சாமுவேல் திரும்பிப் போய்த் தூங்கினான்.
6. ஆண்டவர் மறுமுறையும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய், "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். ஏலி, "மகனே, நான் உன்னை அழைக்கவில்லை; திரும்பிப்போய்த் தூங்கு" என்று பதிலுரைத்தார்.
7. சாமுவேலோ ஆண்டவரை இன்னும் அறியவில்லை; ஆண்டவரின் வாக்கு அவனுக்கு தெரிவிக்கப்பட்டதுமில்லை.
8. மேலும் ஆண்டவர் மூன்றாம் முறை சாமுவேலைக் கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியருகில் வந்து,
9. என்னை அழைத்தீரே; இதோ, நிற்கிறேன் என்றான். அப்போது ஆண்டவர் சிறுவனை அழைக்கிறதை ஏலி கண்டறிந்து சாமுவேலை நோக்கி, "நீ போய்த் தூங்கு. திரும்பவும் நீ அழைக்கப்பட்டால், 'ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்று சொல்வாயாக" என்றார். சாமுவேல் திரும்பிப்போய்த் தனது இடத்தில் தூங்கினான்.
10. ஆண்டவர் வந்து சாமுவேல் அருகே நின்று, "சாமுவேல், சாமுவேல்!" என்று முன் போலவே கூப்பிட்டார். சாமுவேல், "ஆண்டவரே, பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்றான்.
11. ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நாம் இஸ்ராயேலரிடையே ஒரு காரியம் செய்யவிருக்கிறோம். அது எத்தன்மைத்து என்றால் அதைக் கேட்போர் அனைவரும் அதிர்ச்சி அடைவர்.
12. அந்நாளில் ஏலியைப் பற்றியும் அவன் வீட்டைப்பற்றியும் நாம் கூறினவற்றை எல்லாம் நிகழச் செய்வோம்; துவக்கி முடிப்போம்.
13. ஏனெனில், தன் புதல்வர்கள் மதிகெட்டு நடந்ததை அறிந்திருந்தும், அவன் அவர்களைக் கண்டிக்காததால், அக் கொடுமைக்காக அவனையும் அவன் வீட்டையும் என்றென்றும் தீர்ப்பிட்டுத் தண்டிப்போம் என்று முன்பே அவனுக்குத் தெரிவித்திருந்தோம்.
14. ஆகவே, ஏலியின் பாவத்திற்குப் பலிகளாலும் காணிக்கைகளாலும் ஒருபோதும் பரிகாரம் செய்ய முடியாது என்று நாம் அவனுடைய வீட்டுக்கு ஆணையிட்டோம்" என்றார்.
15. சாமுவேல் காலை வரை தூங்கிய பின் ஆண்டவருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான். சாமுவேல் ஏலிக்குத் தான் கண்ட காட்சியைக் கூற அஞ்சினான்.
16. ஏலி சாமுவேலை அழைத்து, "சாமுவேல், என் மகனே!" என்றார். அதற்கு அவன், "இதோ நிற்கிறேன்" என்றான்.
17. ஏலி அவனைப் பார்த்து, "ஆண்டவர் உன்னிடம் பேசியது என்ன? ஒன்றையும் மறைக்காதபடி சொல்ல உன்னை வேண்டுகிறேன். உனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளில் எதையாவது நீ என்னிடம் மறைத்தால், கடவுள் உன்னைத் தண்டிப்பாராக" என்றார்.
18. அவருக்குச் சாமுவேல் எல்லாக் காரியங்களையும் ஒளிக்காது வெளிப்படுத்தினான். அப்பொழுது ஏலி, "அவர் ஆண்டவர்; அவர் தமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்வாராக" என்று பதிலுரைத்தார்.
19. சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவரும் அவனுடன் இருந்தார். அவர் சொன்ன சொல்லில் ஒன்றும் வீண் போகவில்லை.
20. சாமுவேல் ஆண்டவரின் பிரமாணிக்கமான இறைவாக்கினர் என்று தான் துவக்கிப் பெத்சாபே வரை இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொண்டனர்.
21. சாமுவேலுக்கு ஆண்டவர் முதலில் சீலோவில் தோன்றியதால் அவர் சொற்படி மறுமுறையும் சீலோவிலேயே அவனுக்குத் தோன்றலானார். சாமுவேல் இஸ்ராயேலர் அனைவருக்கும் கூறியவை நிறைவேறின.