1. தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஒதொல்லாம் என்னும் குகைக்கு ஓடிப்போனான். அவனுடைய சகோதரரும் அவன் தந்தை வீட்டார் அனைவரும் இதைக் கேள்விப்பட்டு அங்கு அவனிடம் வந்து சேர்ந்தனர்.
2. துன்புற்றோர், கடன்பட்டோர், மனத்துயருற்றோர் அனைவரும் அவனோடு சேர்ந்து கொண்டாடினார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான். இப்படி அவனோடு ஏறக்குறைய நானூறு பேர் இருந்தனர்.
3. தாவீது அங்கிருந்து மோவாபியரைச் சேர்ந்த மாஸ்பாவுக்குப் போய் மோவின் அரசனைப் பார்த்து, "நான் செய்ய வேண்டியது இன்னதென்று கடவுள் எனக்குத் தெரிவிக்கும் வரை என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்கும் படி அனுமதி கொடும்" என்று வேண்டினான்.
4. பின் அவர்களை அழைத்து வந்து மோவாப் அரசன் முன் நிறுத்தினான். தாவீது கோட்டையில் இருந்த நாட்கள் முழுவதும் அவர்கள் மோவாப் அரசனோடு தங்கி இருந்தார்கள்.
5. பின்பு இறைவாக்கினரான காத் என்பவன் தாவீதை நோக்கி, "நீ கோட்டையில் தங்காது யூதேயா நாட்டிற்குப் புறப்பட்டுப் போ" என்றார். தாவீது புறப்பட்டு அரேத் என்ற காட்டை அடைந்தான்.
6. தாவீதும் அவனுடன் இருந்த மனிதர்களும் கண்டுபிடிக்கப்பெற்ற செய்தியைச் சவுல் கேள்விப்பட்டார். சவுல் காபாவைச் சேர்ந்த ராமாவில் இருக்கிற ஒரு தோப்பில் கையில் ஈட்டியை ஏந்தியவாறுக் காத்திருந்தார். அவருடைய ஊழியர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்.
7. சவுல் தமக்கு உதவி செய்து வந்த ஊழியர்களை நோக்கி, "ஜெமினி புதல்வர்களே, கேளுங்கள். இசாயி மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்கள் எல்லோரையும் படைத் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்துவானோ?
8. அப்படியிருக்க, நீங்கள் அனைவரும் எனக்கு எதிராகச் சதி செய்தது ஏன்? சிறப்பாக, என் மகன் இசாயி மகனோடு உடன்படிக்கை செய்து கொண்ட போது உங்களில் யாராவது அதை எனக்குத் தெரிவித்ததுண்டோ? இல்லையே. எனது அவல நிலைக்கு இரங்கி உங்களில் ஒருவனும் அச்செய்தியை எனக்கு அறிவிக்கவில்லை. ஆம், என் சொந்த மகனே என் வேலைக்காரனை எனக்கு விரோதமாய்த் தூண்டி விட்டதால், அவன் இன்று வரை எனக்குச் சதி செய்யப் பார்க்கிறான்" என்றார்.
9. அப்பொழுது அங்கிருந்த சவுலின் ஊழியர்களில் முக்கிய வேலைக்காரனான இதுமேயனாகிய தோயேக் என்பவன் எழுந்து, "நோபேயில் இருக்கிற அக்கிதோபின் மகன் அக்கிமெலேக் என்ற குருவிடம் இசாயியின் மகன் வரக்கண்டேன்.
10. அக்கிமெலேக் அவனுக்காக ஆண்டவரை மன்றாடி, அவனுக்கு வழிக்கு உணவும், பிலிஸ்தியனாகிய கோலியாத்தின் வாளும் கொடுத்தார்" என்றான்.
11. அதைக் கேட்டு அரசர் நோபேய்க்கு ஆட்களை அனுப்பி, அக்கிதோபின் மகனும் குருவுமான அக்கிமெலேக்கையும் அவர் தந்தை வீட்டாரான குருக்கள் எல்லோரையும் அழைத்து வரச் செய்தார். அவர்கள் எல்லாரும் அரசரிடம் வந்து சேர்ந்தனர்.
12. அப்போது, சவுல் அக்கிமெலேக்கை நோக்கி, "அக்கிதோபின் மகனே, கேள்" என்றார். அதற்கு அவர், "இதோ நிற்கிறேன் அரசே!" என்று மறுமொழி சொன்னார்.
13. சவுல் அவரைப் பார்த்து, "நீரும் இசாயியின் மகனும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்ய நினைத்தது ஏன்? நீர் அவனுக்கு அப்பங்களையும் வாளையும் கொடுத்து, இன்று வரை பிடிவாதச் சதிகாரனான அவன் எனக்கு விரோதமாய்க் கிளர்ச்சி செய்யும்படி, கடவுள் திருமுன் அவனுக்காக விசாரித்ததும் ஏன்?" என்று கேட்டார்.
14. அதற்கு அக்கிமெலேக், "உம் எல்லா ஊழியர்களிலும் தாவீதைப் போல் பிரமாணிக்கம் உள்ளவன் யார்? அவன் அரசருக்கு மருமகனும் உம் கட்டளையின்படி செய்து வருகிறவனும், உம் வீட்டிலே மகிமை பெற்றவனும் அல்லனோ?
15. இன்று நானாகவே அவனுக்காகக் கடவுளிடம் விசாரிக்கத் தொடங்கினேன். அரசர் தம் அடியான் மேலும், என் தந்தை வீட்டார் மேலும் இப்படிப்பட்ட காரியத்தைக் குறித்துச் சந்தேகப்படலாகாது. உம் ஊழியனாகிய நான் இக்காரியத்தைப் பற்றி ஒரு சிறிதும் அறியேன்" என்றார்.
16. அரசரோ, "அக்கிமெலேக்கே, நீயும் உன் தந்தை வீட்டாரும் சாகவே சாவீர்கள்" என்று சொன்னார்.
17. அப்பொழுது அரசர் தம்மைச் சூழ்ந்திருந்த சேவகர்களை நோக்கி, "நீங்கள் போய் ஆண்டவருடைய குருக்களை வெட்டி வீழ்த்துங்கள்; ஏனேனில் அவர்கள் தாவீதிற்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். அவன் ஓடிப்போனதை அறிந்திருந்தும் அவர்கள் எனக்குத் தெரியப்படுத்தவில்லை" என்றார். ஆனால் அரசரின் ஊழியர்கள் ஆண்டவருடைய குருக்கள் மேல் கைபோட விரும்பவில்லை.
18. அப்பொழுது அரசர் தோயேக்கை நோக்கி, "நீயாவது குருக்களைக் கொன்று போடு" என்றார். இதுமேயனாகிய தோயேக் திரும்பிக் குருக்கள் மேல் பாய்ந்து சணல் நூல் எபோத்து அணிந்திருந்த எண்பத்தைந்து பேரை அன்று வெட்டினான்.
19. குருக்களின் நகராகிய நோபேயில் ஆண், பெண், சிறுவர், கைக்குழந்தைகள், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளினால் வெட்டி வீழ்த்தினான்.
20. அக்கிதோபின் மகன் அக்கிமேலேக்குடைய புதல்வர்களில் அபியாத்தார் என்று அழைக்கப்பட்ட ஒருவன் மட்டும் உயிர் தப்பித் தாவீதிடம் ஓடிப்போனான்.
21. சவுல் ஆண்டவருடைய குருக்களை கொன்று விட்டார் என்று தாவீதுக்கு அறிவித்தான்.
22. தாவீது அபியாத்தாரை நோக்கி, "இதுமேயனாகிய தோயேக் அங்கு இருந்ததால் அவன் கட்டாயம் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றே அறிந்திருந்தேன். உன் தந்தை வீட்டார் இறப்பதற்கு நானே காரணம்.
23. என்னுடனேயே இரு. அஞ்சாதே! என் உயிரை வாங்கத் தேடுகிறவன் உன் உயிரையும் வாங்கத் தேடுவான். என்னோடு நீயும் காப்பாற்றப்படுவாய்" என்றான்.