1. தாவீது நோபே ஊரிலிருந்த குரு அக்கிமெலேக்கிடம் வந்து சேர்ந்தான். அக்கிமெலேக் தாவீதின் வருகையைப் பற்றித் திடுக்கிட்டு, "ஒருவரும் உன்னோடு வராமல் நீ தனியாய் வந்தது ஏன்?" என்று வினவினார்.
2. தாவீது குரு அக்கிமெலேக்கை நோக்கி, "அரசர் எனக்கு ஒரு கட்டளை விடுத்துள்ளார்: 'நீ அனுப்பப் பட்டதன் நோக்கமும், நான் உனக்குக் கொடுத்துள்ள கட்டளையும் இன்னதென்று ஒருவரும் அறியலாகாது' என்றான். இந்தந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நான் என் ஊழியருக்குச் சொல்லியிருக்கிறேன்.
3. இப்பொழுது உம்மிடம் ஐந்து அப்பங்கள் இருந்தால் அவற்றை எனக்குக் கொடும், இல்லாவிடில் வேறு எதுவானாலும் கொடும்" என்று கெஞ்சினான்.
4. குரு தாவீதுக்கு மறுமொழியாக, "என் கையில் பரிசுத்த அப்பங்களேயன்றிச் சாதாரண அப்பங்கள் இல்லை. இளைஞரான நீங்கள் பெண்களோடு சேராது தூய்மையாய் இருந்தால் சரி" என்றார்.
5. அதற்குத் தாவீது குருவை நோக்கி, "பெண்களைப் பொருத்த மட்டில் எங்களுக்குத் தீட்டு இல்லை. நாங்கள் புறப்பட்டது முதல் நேற்றும் முந்தா நாளும் அவர்களைத் தொட்டதில்லை. ஆதலால் இளைஞருடைய ஆடை முதலியவை பரிசுத்தமாகவே இருந்தன. இப்பயணத்தில் ஏதாவது தீட்டுப்பட்டிருந்தால் இன்றுதான் தூய்மை பெறும்" என்றான்.
6. ஆகையால் குரு பரிசுத்த அப்பத்தை அவனுக்குக் கொடுத்தார். உண்மையில் சூடான அப்பங்களை வைக்கும்படி ஆண்டவர் முன்னிலையிலிருந்து எடுக்கப்பட்ட காணிக்கை அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லை.
7. அந்நேரத்தில் சவுலின் ஊழியர்களிலே ஒருவன் ஆண்டவருடைய கூடாரத்துக்குள் இருந்தான். அவனுடைய பெயர் தோயேக். அவன் இதுமேயன்; சவுலுடைய இடையர்களுக்குத் தலைவன்.
8. தாவீது அக்கிமெலேக்கை நோக்கி, "இங்கு ஈட்டிகளாவது வாளாவது உன் கையில் உண்டா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்தது. எனவே, என் வாளையும் ஆயுதங்களையும் நான் எடுத்துக் கொண்டு வரவில்லை" என்று சொன்னான்.
9. அதற்குக் குரு, "தெரேபிந்த் பள்ளத்தாக்கில் நீ கொன்ற பிலிஸ்தியன் கோலியாத்தினுடைய வாள் அதோ எபோத்துக்குப் பின்னால் துணியில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை" என்று சொன்னார். அப்போது தாவீது, "அதற்கு நிகரானது வேறில்லை; அதை எனக்குக் கொடும்" என்று சொன்னான்.
10. அன்றே தாவீது எழுந்து சவுல் முன்னிலையினின்று ஓடிப்போனான்; கேத் அரசன் அக்கீசிடம் போய்ச் சேர்ந்தான்.
11. அக்கீசின் ஊழியர்கள் தாவீதைப் பார்த்த போது அவனைக் குறித்து, "இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லனோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி ஆடிப்பாடிக் கொண்டாடியது இவனைப் பற்றித்தானே?" என்றனர்.
12. தாவீது இச்சொற்களைத் தன் மனதில் வைத்துக் கொண்டு, கேத் அரசன் அக்கீசுக்கு மிகவும் அஞ்சினான்.
13. அவர்களுக்கு முன்பாகத் தன் முகத் தோற்றத்தை வேறுபடுத்திக் கொண்டு, திடீரென அவர்கள் மேல் பாய்ந்து விழுவதும், வாயிற் கதவுகளில் மோதிக் கொள்வதுமாயிருந்தான். உமிழ் நீர் அவனுடைய தாடியின் வழியே ஒழுகிக் கொண்டிருந்தது.
14. அக்கீசு தன் ஊழியர்களை நோக்கி, "இம்மனிதன் பைத்தியக்காரன் என்று நீங்கள் காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஏன்?
15. என் முன்னிலையில் பைத்தியக்காரனாய் நடிக்க இவனை நீங்கள் கொண்டு வந்தீர்களே; நம்மிடம் பைத்தியக்காரர்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா" என்று சினந்து கொண்டான்.