1. ஆகவே, தீயமனம், வஞ்சகம் அனைத்தையும் அகற்றுங்கள். இளி, கள்ளமும் பொறாமையும் வேண்டாம்.
2. புறணிப் பேச்செல்லாம் விலக்குங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல் கலப்பற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் வளர்ச்சி பெற்று மீட்படைவீர்கள்.
3. ஆண்டவர் இனியவர் எனச் சுவைத்தீர்களன்றோ!
4. அவரையணுகி வாருங்கள். மனிதரால் விலக்கப்பட்டு, கடவுள் முன்னிலையில் விலை மதிப்பற்றதாய்த் தேர்ந்து கொள்ளப்பட்ட உயிருள்ள கல் அவரே.
5. நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. அதில் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனுக்குகந்த ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள். ஏனெனில்,
6. ' இதோ, நான் கல்லொன்றைத் தேர்ந்தெடுத்து, விலைமதிப்பற்ற மூலைக்கல்லாக அதைச் சீயோனில் நாட்டுகிறேன், அதன் மேல் விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று மறை நூலில் காணக் கிடக்கிறது.
7. விசுவாசமுள்ள உங்களுக்குத்தான் அக்கல் மதிப்புள்ளது. விசுவாசமில்லாதவர்களுக்கோ, " கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.
8. தடுக்கி விழச் செய்யும் கல் அது, இடறலான பாறை அது " என்னும் வாக்குகள் பொருந்தும். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் தான் அவர்கள் தடுக்கி விழுகின்றனர்; அதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருந்தனர்.
9. நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்; உங்களை இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி.
10. ஒரு காலத்தில் நீங்கள் மக்கள் இனமாகவே இல்லை; இன்றோ நீங்கள் கடவுளுடைய மக்கள் இனம். ஒரு காலத்தில் நீங்கள் இரக்கம் பெறாதவர்கள்; இன்றோ இரக்கம் பெற்றவர்கள்.
11. அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.
12. புற மனத்தினர் உங்களைத் தீயவரென்று இப்போது தூற்றினாலும், உங்கள் நற்செய்கைகளைப் பார்த்து, கடவுள் வரும் நாளில், அவர்கள் அவரை மகிமைப் படுத்துமாறு, அவர்களிடையே நீங்கள் நன்னடத்தையில் சிறந்து விளங்குங்கள்.
13. மனித அதிகாரம் எதற்கும் ஆண்டவரின் பொருட்டு அடங்கியிருங்கள். மேலான அதிகாரம் படைத்தவர் என்பதால் அரசர்க்கு அடங்கியிருங்கள்.
14. தீமை செய்வோரைத் தண்டிக்கவும், நன்மை செய்வோரைப் பாராட்டவும், அரசால் அனுப்பப் பட்டவர்கள் என்பதால், ஆளுநர்களுக்கும் அடங்கியிருங்கள்.
15. இப்படி நீங்கள் நன்மை செய்து விட வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.
16. உரிமை அடைந்தவர்களென வாழுங்கள்; ஆனால், இந்த உரிமையை, தீவினை செய்வதற்குப் போர்வையாகக் கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அடிமைகளென்றே வாழுங்கள்.
17. மனிதர் அனைவர்க்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர்கள் மீது அனபுக்கூருங்கள்; கடவுளுக்கு அஞ்சி நடங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுக்கத் தவறாதீர்கள்.
18. வேலையாட்களே, உங்கள் தலைவர்களுக்கு முழு மரியாதையோடு கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்த முள்ளவர்களுக்கும் மட்டுமன்று, கடுமையானவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
19. ஒருவன் அநியாயமாய்த் துன்புறுத்தும் போது, இறைவனை மனத்தில் நினைத்துக் கொண்டு பொறுமையோடு ஏற்றுக் கொள்வானானால், அது அவருக்குகந்ததாகும்.
20. குற்றம் செய்தபின், அதற்காக அடிபட்டால், அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வதில், என்ன பெருமை? மாறாக, நன்மை செய்தும், அதற்காகத் துன்புற்றால், அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வதே கடவுளுக்கு உகந்தது.
21. இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.
22. அவர் பாவம் எதுவும் செய்ததில்லை, அவரது வாயினின்று வஞ்சகம் வெளிப்பட்டதில்லை".
23. அவர்கள் பழித்துரைத்த போது, அவர் எதிர்த்துப் பழிக்கவில்லை. துன்புற்ற போது அச்சுறுத்தவில்லை. நீதியோடு தீர்ப்பிடும் இறைவனிடம் தம் காரியத்தை ஒப்படைத்தார்.
24. நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.
25. நீங்கள் ஆடுகளைப் போல் வழி தவறி அலைந்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் காவலருமானவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.