1. சாலமோன் அரசர் எல்லா இஸ்ராயேலரையும் ஆண்டு வந்தார்.
2. அவருடன் இருந்த அதிகரிகள் வருமாறு: சாதோக்கின் மகன் அசாரியாசு குருவாயிருந்தார்.
3. சிசாவின் புதல்வர்கள் எலியோரேபும், அகியாவும் எழுத்தர்களாய் இருந்தனர். அகிலுதின் மகன் யோசபாத் பதிவு செய்பவனாய் இருந்தான்.
4. யோயியாதாவின் மகன் பனாயாசு படைத்தலைவனாய் இருந்தான். சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாய் இருந்தனர்.
5. குரு நாத்தானின் மகன் அசாரியாசு அரச அலுவலர்களுக்குத் தலைவனாய் இருந்தான். நாத்தானின் மகன் சாபுத் அரசரின் நண்பனாய் இருந்தான்.
6. ஐயிசார் அரண்மனைக்கும், அப்தாவின் மகன் அதோனிராம் கப்பங்களுக்கும் மேற்பார்வையாளராய் இருந்தனர்.
7. அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுக்க இஸ்ராயேல் நாடெங்கும் பன்னிரு கண்காணிப்பாளர்கள் சாலமோனுக்கு இருந்தனர். அவர்கள் ஆண்டு முழுவதற்கும் மாதத்திற்கும் வேண்டியவற்றை எல்லாம் அனுப்பி வைத்தனர்.
8. அவர்களின் பெயர்களாவன: பென்குர்- இவன் எபிராயீம் மலையில் இருந்தான்.
9. பெந்தேக்கர்- இவன் மாக்சசு, சலேபிம், பெத்சாமேசு, எலோன், பெத்தானான் நாடுகளில் இருந்தான்.
10. பெனேசேத்- இவன் அருபோத்தில் இருந்தான்; சொக்கோவும் எபேர் நாடு முழுவதும் இவனது கண்காணிப்பில் இருந்தன.
11. பேனாபினாதாப்- இவனுக்கு நெப்பாத்தோர் நாடு முழுவதும் சொந்தமாய் இருந்தது; சாலமோனின் மகள் தாபேத் இவன் மனைவி.
12. அகிலுதின் மகன் பானா- இவன் தானாக், மகேத்தோ, சர்தானுக்கு அருகிலுள்ள பெத்சான் நாடெல்லாவற்றிற்கும், பெத்சான் முதல் ஜெஸ்ராயேல் நாட்டுக்குக் கீழ் உள்ள எக்மானுக்கு எதிரில் இருக்கும் அபேல்மேயுலா வரையிலுள்ள நாடுகளுக்கும் ஆளுநனாய் இருந்தான்.
13. பென்கபேர்- இவன் ராமோத் காலாதில் இருந்தான்; காலாதிலுள்ள மனாசேயின் மகன் யாயீரின் ஊர்களுக்கும், சுற்றுமதில்களும் வெண்கலக் கதவுகளுமுள்ள பாசான் நாட்டின் அறுபது மாநகர்களுள்ள ஆர்கோப் நாட்டுக்கும் தலைவனாய் இருந்தான்.
14. அத்தோவின் மகன் அயினாதாப்- இவன் மனாயிம் நாட்டின் தலைவனாய் இருந்தான்.
15. அக்கிமாசு- இவன் நெப்தலியில் இருந்தான். சாலமோனின் மகள் பசேமாத் இவனுக்கு மனைவியாய் இருந்தாள்.
16. உசிவின் மகன் பவானா- இவன் ஆசேர், பாலோத் நாடுகளுக்கும்,
17. பருவேயின் மகன் யோசபாத் என்பவன் இசாக் காரின் நாடுகளுக்கும் ஆளுநராய் இருந்தனர்.
18. ஏலாவின் மகன் செமேயி பெஞ்சமின் நாடுகளுக்குக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
19. ஊரியின் மகன் காபேர்- இவன் அமோறையரின் அரசன் சேகோனுக்கும், பாசானின் அரசன் ஓகூக்கும் இருந்த நாடாகிய காலாதில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தலைவனாய் இருந்தான்.
20. யூதா மக்களும் இஸ்ராயேலரும் கடற்கரை மணலைப் போல் பெருகி, உண்டும் குடித்தும் மகிழ்ந்திருந்தனர்.
21. நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். அவர்கள் சாலமோனுக்குப் பரிசுகள் கொடுத்து, அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.
22. நாள்தோறும் சாலமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு: முப்பது மரக்கால் மிருதுவான மாவும், அறுபது மரகால் சாதாரண மாவும்,
23. கலைமான்கள், சிறுமான்கள், கவரிமான்கள், கொழுத்த பறவைகள் முதலியவற்றைத் தவிர கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும், நூறு ஆடுகளுமாகும்.
24. ஏனெனில், நதிக்கு அப்புறத்திலுள்ள தாப்சா முதல் காசா வரை உள்ள எல்லா நாட்டையும் அவர் ஆண்டு வந்தார். இந்நாட்டரசர் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர். சுற்றுப்புறம் எங்கனும் சமாதானம் நிலவிற்று.
25. சாலமோனின் வாழ்நாளெல்லாம், தான் முதல் பெர்சாபே வரையிலும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் இருந்த மக்கள் அச்சமின்றித் தத்தம் திராட்சைத் தோட்டத்திலும் அத்திமரச் சோலைகளிலும் நலமே வாழ்ந்து வந்தனர்.
26. தேர்க் குதிரைகளுக்கென நாற்பதினாயிரம் தொழுவங்களும், சேணங்களை வைப்பதற்கெனப் பன்னீராயிரம் கூடங்களும் சாலமோனுக்கு இருந்தன.
27. மேற்சொன்ன அரச கண்காணிப்பாளர்கள் குதிரைகளுக்குத் தீனி போட்டு வந்தனர்; அத்தோடு சாலமோன் அரசரின் பந்திக்குத் தேவையானவற்றையும் மிகுந்த கவனத்துடன் குறித்த காலத்தில் கொடுத்து வந்தனர்.
28. மேலும், இவர்கள் தத்தமக்குக் குறிக்கப்பட்டிருந்தபடி அரசர் செல்லுமிடமெல்லாம் குதிரைகளுக்கும் மற்றக் கால்நடைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமை, வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு வருவது வழக்கம்.
29. கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும், மேலான அறிவையும், கடற்கரை மணலைப் போல் பரந்த உள்ளத்தையும் கொடுத்திருந்தார்.
30. கீழை நாட்டார், எகிப்தியர் அனைவரின் ஞானத்தையும் விட சாலமோனின் ஞானம் சிறந்து விளங்கிற்று.
31. ஏசுராயித்தனாகிய எத்தானிலும், ஏமான், ஷல்கோல், தொர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட அவர் அறிவில் சிறந்து விளங்கினார். அண்டை நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று.
32. சாலமோன் மூவாயிரம் பழமொழிகளையும் ஆயிரத்தைந்து பாடல்களையும் எழுதினார்.
33. லீபானிலிருக்கும் கேதுரு மரமுதல் சுவர் மேல் முளைக்கிற ஈசோப்புப் புல் வரை உள்ள மரவகைகளைக் குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மீன்கள் முதலியவற்றைக் குறித்தும் பேசினார்.
34. சாலமோனின் ஞானத்தைக் கேட்க எல்லா நாடுகளிலுமிருந்து மக்கள் வருவார்கள். அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற அரசர்கள் அனைவரும் அவரிடம் வருவார்கள்.