1. சீரியருக்கும் இஸ்ராயேலருக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகப் போர் எதுவும் நடக்க வில்லை.
2. மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ராயேலின் அரசனைக் காண வந்தான்.
3. (ஏனென்றால், இஸ்ராயேலின் அரசன் தன் ஊழியரை நோக்கி, "கலாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களோ? அதை நாம் சீரியாவின் அரசனிடமிருந்து கைப்பற்றாமல் வாளா இருந்துவிடலாமா?" என்று சொல்லியிருந்தான்.)
4. அவன் யோசபாத்திடம், "கலாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க என்னோடு சேர்ந்து போர்புரிய வருவீரா?" என்று கேட்டான்.
5. யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "உம் காரியம் என் காரியமே. என் மக்களும் உம் மக்களும் ஒரே மக்கள் தாமே. என் குதிரைகளும் உன் குதிரைகளும் ஒன்றேதாம்" என்று சொன்னான். மீளவும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனைப் பார்த்து, "ஆண்டவருடைய திருவுளம் இன்னதென்று இன்று நீர் அறியும்படி உம்மை வேண்டுகிறேன்" என்றான்.
6. அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு போலி இறைவாக்கினரைக் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி, "நான் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம்; ஆண்டவர் அரசருக்கு அதைக் கையளிப்பார்" என்றனர்.
7. பின்பு யோசபாத், "நாங்களும் அறிந்து கொள்ளும்படி ஆண்டவரின் இறைவாக்கினர் யாராவது ஒருவர் இங்கில்லையா?" என்று கேட்டான்.
8. அப்போது இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "ஜெம்லா மகன் மிக்கேயாசு என்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் மூலம் ஆண்டவரின் திருவுளத்தை நாம் அறிந்து கொள்ளலாம். ஆயினும் நான் அவனைப் பகைக்கிறேன். ஏனெனில், அவன் எனக்கு எப்பொழுதும் நன்மையாக அன்று, தீமையாகவே இறைவாக்கு உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத், "அரசே, அப்படிச் சொல்ல வேண்டாம்" என்றான்.
9. அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஓர் அண்ணகனைக் கூப்பிட்டு, "ஜெம்லாவின் மகன் மிக்கேயாசை விரைவில் அழைத்து வா" என்றான்.
10. இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச ஆடைகளை அணிந்தவராய்த் தத்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் போலி இறைவாக்கினரும் அவர்களுக்கு முன்பாக இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தனர்.
11. கானானாவின் மகன் செதேசியாசு தனக்கென்று இரும்புக் கொம்புகளைச்செய்து, "இவற்றால் நீர் சீரியாவைக் கலங்கடித்து வேரறுத்துப் போடுவீர்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றான்.
12. போலி இறைவாக்கினர் அனைவரும் அதைப் போன்றே இறைவாக்கு உரைத்து, "கலாத்திலுள்ள ராமோத்துக்கு நலமே செல்வீர். ஏனெனில், ஆண்டவர் அதை அரசருக்குக் கையளிப்பார்" என்றனர்.
13. மிக்கேயாசை அழைக்கப்போன ஆள் அவனைப் பார்த்து, "இதோ இறைவாக்கினர் அனைவரும் ஒரே மாதிரியாக அரசருக்குச் சாதகமாய் இறைவாக்கு உரைத்துள்ளனர். அவர்களைப் போன்று நீரும் அரசருக்குச் சாதகமாகவே பேசும்" என்றான்.
14. அதற்கு மிக்கேயாசு, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்லுவதையே நான் எடுத்துரைப்பேன்" என்றார்.
15. அவர் அரசன்முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி, "மிக்கேயாசு, நாங்கள் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா, போகலாகாதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீர் நலமே போகலாம். ஆண்டவர் அதை உமக்குக் கையளிப்பார்" என்றார்.
16. மீளவும் அரசன் அவரை நோக்கி, "ஆண்டவர் பெயரால் உம்மைத் திரும்பவும் வேண்டிக் கொள்கிறேன். உண்மை அன்றி வேறு ஒன்றும் நீர் என்னிடம் உரைக்க வேண்டாம்" என்றான்.
17. அப்பொழுது அவர், "இஸ்ராயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை. அனைவரும் அமைதியுடன் தத்தம் வீடு திரும்பட்டும்' என்று உரைத்தார்" என்று சொன்னார்.
18. அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இவன் எப்பொழுதும் எனக்கு நன்மையாக அன்றித் தீமையாகவே இறைவாக்கு உரைப்பான் என்று முன்பே உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான்.
19. மிக்கேயாசு மீண்டும் அரசனை நோக்கி, "ஆண்டவருடைய வாக்கைக் கேளும்: ஆண்டவர் தமது அரியனையில் வீற்றிருக்கவும், வானகச் சேனையெல்லாம் அவரது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நிற்கவும் கண்டேன்.
20. அந்நேரத்தில் ஆண்டவர், 'ஆக்காப் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் படையெடுத்துப்போய் அங்கே மடியும்படி அவனுக்குக் கெடுமதி சொல்கிறவன் யார்?' என்று கேட்டார். அதற்குப் பலரும் பலவிதமாய் பதில் கூறினர்.
21. அப்பொழுது ஓர் அரூபி புறப்பட்டு வந்து ஆண்டவர் திருமுன் நின்று அவரை நோக்கி, 'நான் அவனுக்குக் கெடுமதி சொல்வேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'அதெப்படி?' என்றார்.
22. அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய (போலி) இறைவாக்கினர் எல்லாரிடத்திலும் நுழைந்து அவர்கள் பொய்யை உரைக்கும்படி செய்வேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி பெறுவாய். போய் அப்படியே செய்' என்றார்.
23. ஆதலால் இங்கேயிருக்கிற உம்முடைய எல்லாப் (போலி) இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும் படி ஆண்டவர் அரூபியை ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்கு எதிராகத் தீயனவே பகன்றுள்ளார்" என்றார்.
24. அப்பொழுது கானானாவின் மகன் செதேசியாசு, மிக்கேயாசு அருகே வந்து அவரைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு அகன்று விட்டதா? அது உன்னிடம் மட்டுந்தானோ பேசிற்று?" என்றான்.
25. அதற்கு மிக்கேயாசு, "நீர் ஒளிந்து கொள்வதற்காக அறை விட்டு அறை செல்லும் நாளில் இதை அறிந்து கொள்வீர்" என்றார்.
26. அப்பொழுது இஸ்ராயேலின் அரசன், "மிக்கேயாசைப் பிடித்து அவனை நகரத் தலைவன் ஆமோனிடமும், அமலேக்கின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
27. 'இவனைச் சிறையில் அடைத்து, நான் சமாதானத்தோடு திரும்பி வரும் வரை இவனுக்குத் துன்ப துயரம் எனும் அப்பமும் தண்ணீரும் கொடுங்கள்' என்று அரசர் சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்" என்றான்.
28. அப்பொழுது மிக்கேயாசு, "நீர் சமாதானத்தோடு திரும்பி வருவீராகில் ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும்" என்று சொன்னார்; மேலும் அங்கு இருந்தோரை நோக்கி, "மக்களே, நீங்கள் எல்லாரும் இதற்குச் சாட்சி" என்றார்.
29. பின்பு இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் கலாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க புறப்பட்டுப் போனார்கள்.
30. இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நீர் உம் அரச ஆடைகளை அணிந்து, ஆயுதம் தாங்கிப் போரிடும்" என்று சொன்னான். இஸ்ராயேலின் அரசனோ மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.
31. அப்படியிருக்க, சீரியாவின் அரசன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் சிறியோர் பெரியோர் யாரோடும் போரிடாமல், இஸ்ராயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.
32. ஆதலால் தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், "இவன் தான் இஸ்ராயேலின் அரசன்" என்று எண்ணி, அவன் மேல் பாய்ந்து போரிட்டனர். யோசபாத்தோ பெரும் கூக்குரலிட்டான்.
33. அதனால் அவன் இஸ்ராயேலின் அரசன் அல்லன் என்று அறிந்து கொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை விட்டு அகன்றனர்.
34. யாரோ ஒருவன் வில்லை நாணேற்றிக் குறிவைக்காது அம்பை எய்தான். அது தற்செயலாய் இஸ்ராயேல் அரசனின் உடலில் வயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே பாய்ந்தது. அவனோ தன் தேரோட்டியை நோக்கி, "நீ தேரைத் திருப்பிப் போர்க்களத்திற்கு வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில் பெரிதும் காயம் அடைந்துள்ளேன்" என்றான்.
35. அன்று முழுவதும் போர் நடந்தது. இஸ்ராயேலின் அரசன் தன் தேரிலேயே நின்றுகொண்டு சீரியரை எதிர்த்துப் போர் புரிந்து மாலை வேளையில் உயிர் நீத்தான். அவன் பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஒழுகித் தேரின் மேல் வடிந்து கொண்டிருந்தது.
36. கதிரவன் மறையுமுன், "அனைவரும் தத்தம் நாட்டிற்கும் நகருக்கும் போகலாம்" என்று படை முழுவதற்கும் பறைசாற்றப்பட்டது.
37. இறந்த அரசனைச் சமாரியாவுக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர்.
38. அவனது தேரையும் கடிவாளத்தையும் சமாரியாவின் குளத்தில் கழுவினர். அப்போது ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் வந்து அவனது இரத்தத்தை நக்கின.
39. ஆக்காபின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும், அவன் தந்தத்தால் கட்டிய வீடும். அமைத்த நகர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் இடம் பெற்றுள்ளன.
40. ஆக்காப் தன் முன்னோரோடு துயிலுற்ற பின், அவன் மகன் ஒக்கோசியாசு அரியணை ஏறினான்
41. இஸ்ராயேலின் அரசன் ஆக்காப் ஆட்சி புரிந்து வந்த நான்காம் ஆண்டில் ஆசாவின் மகன் யோசபாத் யூதாவின் அரசன் ஆனான்.
42. அப்பொழுது அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சலாயின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபா.
43. அவன் அனைத்திலும் தன் தந்தை ஆசாவின் வழி நின்று வழுவாது ஒழுகினான். இவ்வாறு ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான். (44) ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடைகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.
44. (45) யோசபாத் இஸ்ராயேலின் அரசனோடு சமாதானமாய் இருந்தான்.
45. (46) யோசபாத்தின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் புரிந்த போர்களும், யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
46. (47) தன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த பெண் தன்மையுள்ள ஆடவர்களை யோசபாத் அழித்துப் போட்டான்.
47. (48) அப்பொழுது ஏதோமில் அரசன் இல்லை.
48. (49) அரசன் யோசபாத் பொன் திரட்ட ஓபீருக்குப் போகும்படி கப்பல்களைக் கட்டினான்; ஆனால் அவைகள் போக முடியவில்லை; ஏனென்றால் அசியோன் கபேரில் கப்பல்கள் உடைந்து போயின.
49. (50) அப்பொழுது ஆக்காபின் மகன் ஒக்கோசியாசு யோசபாத்தை நோக்கி, "என் வேலைக்காரர் உம் வேலைக்காரரோடு கப்பல்களில் போகவிடும்" என்று கேட்டான். அதற்கு யோசபாத் இணங்கவில்லை.
50. (51) யோசபாத் தன் முன்னோரோடு துயிலுற்றுத் தாவீதின் நகரில் தன் முன்னோரோடு புதைக்கப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பிறகு அரியணை ஏறினான்.
51. (52) யூதாவின் அரசன் யோசபாத் அரியணை ஏறிய பதினேழாம் ஆண்டில் ஆக்காபின் மகன் ஒக்கோசியாசு சமாரியாவின் அரசனாகி இஸ்ராயேலில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தி வந்தான்.
52. (53) அவன் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து, தன் தாய் தந்தையர் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கின நாபோத்தின் மகன் எரோபோவாமின் தீய வழியிலும் நடந்தான்.
53. (54) அத்தோடு பாவாலுக்கு ஊழியம் செய்து அதை வழிபட்டான். அவன் எல்லாவற்றிலும் தன் தந்தை வழி நின்று, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்தான்.