1. காலாதிலுள்ள குடிகளில் தெசுபித்தரான எலியாசு ஆக்காபை நோக்கி, "நான் வழிபட்டு வரும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினால் அன்றி இவ்வாண்டுகளில் பனியும் மழையும் பெய்யா" என்றார்.
2. மேலும் ஆண்டவர் எலியாசை நோக்கி,
3. நீ இவ்விடத்தை விட்டுக் கிழக்கு நோக்கிச் சென்று யோர்தானுக்கு எதிரேயுள்ள காரீத் ஆற்றோரத்தில் ஒளிந்துகொள்.
4. அவ்வாற்றின் தண்ணீரைப் பருகு. அவ்விடத்தில் உனக்கு உணவளிக்கக் காகங்களுக்குக் கட்டளை இட்டுள்ளோம்" என்றார்.
5. இதைக் கேட்டதும் எலியாசு புறப்பட்டு, ஆண்டவர் திருவுளம்பற்றினபடியே யோர்தானுக்கு எதிரே இருந்த காரீத் ஆற்றோரத்தில் தங்கியிருந்தார்.
6. காகங்கள் அவருக்குக் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தன. அவர் அவ்வாற்றின் நீரைப் பருகி வந்தார்.
7. நாட்டில் மழை பெய்யாததால் சில நாட்களுக்குப் பின் அந்த ஆறு வற்றிப் போயிற்று.
8. அப்போது ஆண்டவர் அவரை நோக்கி,
9. நீ சீதோனியரின் ஊராகிய சரேப்தாவுக்குச் சென்று அங்கே தங்கி இரு. உனக்கு உணவூட்டும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டுள்ளோம்" என்றார்.
10. அதன்படி எலியாசு புறப்பட்டுச் சரேப்தாவுக்குப் போனார். அந்நகரின் வாயிலை அடைந்த போது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவர் அவளைக் கூப்பிட்டு, "நான் குடிக்க ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார்.
11. அவள் தண்ணீர் கொண்டுவரச் செல்கையில் பின்னிருந்து சத்தமிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வா" என்றார்.
12. அவள் அவருக்கு மறுமொழியாக, "உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என்னிடம் அப்பம் இல்லை. என் பானையில் ஒரு சிறங்கை மாவும், கலயத்தின் அடியில் கொஞ்சம் எண்ணெயுமே இருக்கின்றன. அப்பம் சுடத்தான் இந்த இரண்டொரு விறகைப் பொறுக்கினேன். அதைச் சாப்பிட்ட பின் நானும் என் மகனும் மீண்டும் உண்ண ஒன்றுமில்லாமல் சாவோம்" என்றாள்.
13. அப்போது எலியாசு அவளைப் பார்த்து, "அஞ்சாதே; போய், நீ சொன்னபடியே செய். எனினும் முதலில் அதில் ஒரு சிறிய அப்பம் சுட்டு எனக்குக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் அப்பம் தயார் செய்யலாம்.
14. ஏனென்றால், 'ஆண்டவர் நிலத்தில் மழை பொழியச் செய்யும் வரை உன் பானையின் மாவு செலவழிந்து போவதுமில்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை' என்று இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்" என்றார்.
15. அவள் போய் எலியாசின் சொற்படி செய்தாள். அவரும் உண்டார்; அவளும் அவள் வீட்டாரும் உண்டனர்.
16. ஆண்டவர் எலியாசின் மூலம் சொன்ன வார்த்தையின் படியே அன்று முதல் பானையின் மாவு செலவழிந்ததும் இல்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்ததுமில்லை. இதன் பிறகு,
17. குடும்பத் தலைவியாகிய அப் பெண்ணின் மகன் நோயுற்றான். அந்நோய் எவ்வளவு கொடுமையாயிருந்ததென்றால், அவன் உயிர் நீத்தான்.
18. அப்போது அப் பெண் எலியாசை நோக்கி, "கடவுளின் மனிதரே, உமக்கும் எனக்கும் என்ன? நீர் என் தீச் செயல்களை நினைவூட்டவும், என் மகனைச் சாகடிக்கவுமா என்னிடம் வந்தீர்?" என்றாள்.
19. அதற்கு எலியாசு, "உன் மகனை என்னிடம் கொடு" என்று சொன்னார். பின்னர் அவளது மடியிலிருந்த அப்பிள்ளையைத் தாமே வாங்கிக் கொண்டு தமது அறைக்குச் சென்றார். அங்கே அவனைத் தம் படுக்கையில் மேல் கிடத்தினார்.
20. என் கடவுளாகிய ஆண்டவரே, தன்னால் முடிந்த வரை என்னைப் பேணிவந்த இவ்விதவையின் மகனைச் சாகடித்து அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ?" என்று கடவுளை நோக்கிக் கதறியழுதார்.
21. பிறகு பிள்ளையின் உடலை அளந்தாற்போல் அவர் மும்முறை அதன்மேல் படுத்து, "என் கடவுளாகிய ஆண்டவரே, இப்பிள்ளையின் உயிர் இதன் உடலில் திரும்ப நுழையுமாறு செய்தருளும்" என்று ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
22. ஆண்டவர் எலியாசின் விண்ணப்பத்திற்கு இரங்கினார். பிள்ளையின் உயிர் திரும்பி வர அவன் உயிர் பிழைத்தான்.
23. அப்பொழுது எலியாசு பிள்ளையை எடுத்துக் கொண்டு மேல் மாடியிலிருந்து கீழ்வீட்டுக்கு வந்து அவனை அவன் தாயின் கையிலே கொடுத்து, "இதோ, உன் மகன் உயிரோடு இருக்கின்றான்" என்றார்.
24. அப்பொழுது அம்மாது எலியாசை நோக்கி, "நீர் கடவுளின் மனிதர் என்றும், உமது வாயிலிருந்து பிறக்கும் ஆண்டவருடைய வாக்கெல்லாம் உண்மை என்றும் இதன் மூலம் அறிந்து கொண்டேன்" என்றாள்.