1. ஆண்டவர் பெயரால் சாலமோன் அடைந்ததிருந்த புகழைச் சாபா நாட்டு அரசி கேள்வியுற்று பல புதிர்களால் அவரைச் சோதிக்க வந்தாள்.
2. மிகுந்த பரிவாரத்தோடும், நறுமணப் பொருட்களையும் மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமந்து வந்த ஒட்டகங்களோடும் யெருசலேமை அடைந்தாள். அவள் சாலமோனிடம் வந்து தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவரிடம் உரையாடினாள்.
3. சாலமோன் அவள் கேட்டவற்றை எல்லாம் அவளுக்கு விளக்கிக் கூறினார். அவள் கேட்டவற்றுள் ஒன்றாகிலும் மன்னருக்குப் புதிராக இருக்கவில்லை; அனைத்திற்கும் தக்க பதில் கொடுத்தார்.
4. சாபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும், அவர் கட்டியிருந்த அரண்மனையையும், அவர் உண்டு வந்த உணவு வகைகளையும்,
5. அவர் ஊழியரின் வீடுகளையும், அவர் அலுவலரின் ஊர்களையும், அவர்களின் ஆடைகளையும், குடிகலம் பரிமாறுபவரையும், அவரால் தேவாலயத்தில் செலுத்தப் பெற்று வந்த தகனப்பலிகளையும் கண்ட போது, வியப்பில் ஆழ்ந்தாள்.
6. அவள் மன்னரை நோக்கி, "உமது பேச்சுத்திறனைப் பற்றியும் உமது ஞானத்தைப் பற்றியும் என் நாட்டில் நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையே!
7. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவில்லை. இப்பொழுதோ நான் கண்டவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிந்துகொண்டேன். உம் ஞானமும் சாதனைகளும் நான் கேள்விப்பட்டதை விட மேலானவையாய் இருக்கின்றன.
8. உம் மக்களும் உம் ஊழியரும் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் எப்போதும் உம்முன் நின்று உமது ஞானத்தைக் கேட்டு வருகிறார்கள்.
9. உம்மீது பிரியம் கொண்டு உம்மை இஸ்ராயேல் அரியணையில் ஏற்றிய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஆண்டவர் இஸ்ராயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டதினால் அன்றோ, நீதி செலுத்துவதற்கு உம்மை மன்னராக ஏற்படுத்தினார்!" என்றாள்.
10. அவள் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பென்னையும் மிகுந்த நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சாபாவின் அரசி சாலமோனுக்குக் கொடுத்த அத்துணை நறுமணப் பொருட்கள் அதன் பிறகு யெருசலேமுக்கு வந்ததே கிடையாது.
11. ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் நறுமணம் தரும் மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டு வந்தன.
12. அவ்வருமையான மரங்களால் அரசர் கோயிலுக்கும் அரண்மனைக்கும் கிராதிகளும், பாடகருக்கு இசைக் கருவிகளும் யாழ்களும் செய்தார். அப்படிப்பட்ட மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, எவனும் கண்டதுமில்லை.
13. சாலமோன் அரசர் தாமே சாபாவின் அரசிக்கு அரச மகிமைக்குத் தக்க வெகுமதிகளைக் கொடுத்ததோடு, அவள் விரும்பிக் கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார். பிறகு அவள் தன் ஊழியர்களுடன் தன் நாடு திரும்பினாள்.
14. ஒவ்வொரு ஆண்டும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது.
15. அதைத் தவிரச் சாலமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும் வியாபாரிகளும் வணிகர்களும் அராபிய அரசர்களும் மாநில ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.
16. சாலமோன் அரசர் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்துக்கும் அறுநூறு சீக்கல் நிறையுள்ள பசும் பொன் செலவானது.
17. மேலும் முந்நூறு சிறிய கேடயங்களைச் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு மீனா என்ற நாணயப் பொன் செலவானது. அவற்றை மன்னர் லீபானின் வனம் என்ற மாளிகையில் வைத்தார்.
18. மேலும் அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் அலங்கரித்தார்.
19. அவ்வரியணைக்கு ஆறுபடிகள் இருந்தன. அரியணையின் மேற்பாகம் பின்னால் வளைவாய் இருந்தது. உட்காருமிடத்திற்கு இருபுறமும் கைபிடிகள் இருந்தன. இரு சிங்கங்கள் அவற்றின் அருகே நின்றன.
20. ஆறுபடிகளின் மேல் பக்கத்திற்கு ஆறாகப் பன்னிரு சிங்கக் குட்டிகள் நின்றன. எந்த நாட்டிலும் இத்தகு வேலைப்பாடு செய்யப்பட்டதில்லை.
21. சாலமோன் அரசருக்கு இருந்த பான பாத்திரங்கள் எல்லாம் பொன்னாலும், லீபானின் வனம் என்ற மாளிகையின் தட்டுமுட்டுப் பொருட்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் செய்யப்பட்டிருந்தன. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை. சாலமோனின் காலத்தில் வெள்ளி விலையுயர்ந்த ஒரு பொருளாய் எண்ணப்படவுமில்லை.
22. ஏனெனில் அரசரின் கப்பல்கள் ஈராமின் கப்பல்களோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தார்சுக்குப் பயணமாகி அவ்விடமிருந்து பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டுவரும்.
23. மண்ணின் எல்லா மன்னர்களையும் விடச் சாலமோன் மன்னர் செல்வத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார்.
24. சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தைக் கேட்பதற்காக மண்ணுலக மாந்தர் அனைவரும் அவர் முகம் காண ஏங்கி நின்றனர்.
25. ஆண்டுதோறும் வெள்ளிப்பாத்திரங்கள், துணி, போர்க்கருவிகள், குதிரைகள், கோவேறு கழுதைகள் முதலியவற்றை மக்கள் அவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வருவார்கள்.
26. சாலமோன் தேர்களையும் குதிரை வீரரையும் ஒன்று திரட்டினார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அத்தேர்களிலும் குதிரை வீரர்களிலும் சிலரைத் தம்மோடு வைத்துக்கொண்டு மற்றவரை அரணிக்கப் பெற்ற நகர்களுக்கு அனுப்பி வைத்தார்.
27. யெருசலேமிலே சாலமோன் காலத்தில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் காட்டத்தி மரங்கள் போலவும் மிகுதியாய் இருந்தன.
28. எகிப்திலிருந்தும் கோவாவிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. எப்படியெனில், அரசரின் வியாபாரிகள் அவற்றைக் கோவாவில் விலைக்கு வாங்கிக் குறித்த விலைக்கு அரசரிடம் விற்று விடுவார்கள்.
29. அப்படியே எகிப்திலிருந்து அறுநூறு சீக்கல் நிறையுள்ள வெள்ளிக்கு நாற்குதிரைத் தேர் ஒன்றும், நூற்றைம்பது சீக்கல் நிறையுள்ள வெள்ளிக்கு ஒரு குதிரையுமாகக் கொண்டு வருவார்கள். இவ்விதமாக ஏத்தைய அரசர்களும் சீரிய மன்னர்களும் தங்கள் நாட்டுக் குதிரைகளை விற்று வந்தார்கள்.