1. இயேசு தான் கிறிஸ்து என்று விசுவசிக்கும் எவனுக்கும் கடவுளே தந்தை. தந்தைக்கு அன்பு செய்பவன், தந்தை பெற்ற மகனுக்கும் அன்பு செய்கிறான்.
2. நாம் கடவுளுக்கு அன்பு செய்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளுடைய மக்களுக்கும் அன்பு செய்கிறோம். என்பது தெளிவாகிறது.
3. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே கடவுள் அன்பு. அவருடைய கட்டளைகள் நமக்குச் சுமையல்ல.
4. ஏனெனில், கடவுளிடமிருந்து பிறந்தவன் எவனும் உலகை வெல்கிறான். உலகைத் தோற்கடித்து நாம் அடைந்த வெற்றி நம் விசுவாசமே.
5. உலகை வெல்பவன் யார்? இயேசு, கடவுளின் மகன் என்று விசுவசிப்பவனே.
6. இந்த இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர். நீரோடு மட்டுமன்று, நீரோடும் இரத்தத்தோடும் வந்தார். இதற்குத் தேவ ஆவியே சாட்சி; ஏனெனில், தேவ ஆவி உண்மையானவர்.
7. ஆகவே, தேவ ஆவி, நீர், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகள் உள்ளன;
8. இம் மூன்றின் நோக்கமும் ஒன்றே.
9. நாம் மனிதரின் சாட்சியத்தை ஏற்கிறோமே. கடவுளின் சாட்சியம் அதைவிட மேலானதன்றோ? இந்த மூன்றும் கடவுள் தந்த சாட்சியமே. தம் மகனைப்பற்றி அவர் தந்த சாட்சியமே இது.
10. கடவுளின் மகன் மீது விசுவாசம் கொள்பவன் இந்தச் சாட்சியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறான். கடவுளை விசுவசியாதவன் அவரைப் பொய்யனாக்குகிறான். ஏனெனில், கடவுள் தம் மகனைப்பற்றித் தந்த சாட்சியத்தை அவன் விசுவசிக்கவில்லை.
11. கடவுள் நமக்கு முடிவில்லா வாழ்வைத் தந்தார்; இவ்வாழ்வு அவர் மகனுள் இருக்கிறது; இதுவே அவர் தரும் சாட்சியம்.
12. யாரிடம் இறைமகன் இருக்கிறாரோ, அவனுக்கு வாழ்வு உண்டு; யாரிடம் கடவுள் மகன் இல்லையோ அவனுக்கு வாழ்வு இல்லை.
13. கடவுளுடைய மகனின் பெயர்மீது விசுவாசம் வைத்துள்ள உங்களுக்கு முடிவில்லா வாழ்வு உண்டு என்பதை நீங்கள் அறியவே இதையெல்லாம் எழுதினேன்.
14. நாம் இறைவனிடம் கேட்பது அவரது திருவுளத்திற்கேற்றதாய் இருந்தால், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இந்த நம்பிக்கையுடன் நாம் அவர் முன் நிற்க முடியும்.
15. நாம் கேட்கும்போதெல்லாம் அவர் செவிசாய்க்கிறார். என்ற உறுதி நமக்கிருந்தால், அவரிடம் கேட்டதனைத்தும் கிடைத்துவிட்டது என்ற உறுதியும் இருக்கும்.
16. இறுதிச்சாவை வருவிக்காத பாவம் ஒன்றைச் சகோதரன் செய்வதை ஒருவன் கண்டால், அவனுக்காக வேண்டுவானாக; இறைவன் அவனுக்கு வாழ்வளிப்பார். இறுதிச்சாவை வருவிக்காத பாவத்தைச் செய்பவர்களைப் பற்றியே நான் சொல்லுகிறேன். இறுதிச்சாவை வருவிக்கும் பாவம் ஒன்றுண்டு; வேண்டுதல் செய்யும்படி நான் சொல்வது அதைப்பற்றியன்று.
17. தீய செயலனைத்தும் பாவம்; ஆயினும், இறுதிச்சாவை வருவிக்காத பாவமும் உண்டு.
18. கடவுளிடமிருந்து பிறக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; கடவுளிடமிருந்து பிறந்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்; தீயோன் அவனைத் தீண்டுவதில்லை; இது நமக்குத் தெரியும்.
19. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள், ஆனால் உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது; இதுவும் நமக்குத் தெரியும்.
20. கடவுளின் மகன் வந்தார்; உண்மை இறைவனை அறியும் ஆற்றலை நமக்குத் தந்தார்; இதுவும் நமக்குத் தெரியும். அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் உண்மை இறைவனுக்குள் இருக்கிறோம்; இவரே உண்மைக் கடவுள். இவரே முடிவில்லா வாழ்வு.
21. அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.