1. அன்புக்குரியவர்களே, தேவ ஆவியின் ஏவுதல் தமக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள். அந்த ஏவுதல் கடவுளிடமிருந்துதான் வருகிறதா என்பதைச் சோதித்தறியுங்கள். ஏனெனில், போலித் தீர்க்கதரிசிகள் பலர் உலகெங்கும் பரவியுள்ளனர்.
2. கடவுளது ஆவியின் ஏவுதலை நீங்கள் இவ்வாறு அறியக்கூடும்; ஊன் உருவில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஏவுதல் எல்லாமே கடவுளிடமிருந்து வருகிறது.
3. இயேசுவை மறுக்கச் செய்யும் எந்த ஏவுதலும் கடவுளிடமிருந்து வருவதன்று; எதிர்க் கிறிஸ்துவை ஏவும் ஆவியே அது. எதிர்க் கிறிஸ்து வருகிறானென்று கேள்விப்பட்டீர்களே, இதோ அவன் இப்போதே உலகில் இருக்கிறான்.
4. அன்புக் குழந்தைகளே, நீங்களோ கடவுளைச் சார்ந்தவர்கள்; நீங்கள் அந்தப் போலித் தீர்க்கதரிசிகளை வென்றுவிட்டீர்கள்; ஏனெனில், உலகில் இருக்கும் அவனைவிட உங்களுள் இருப்பவர் மேலானவர்.
5. ஆதனால், அவர்கள் பேசுவதும் உலகைச் சார்ந்ததே. உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.
6. நாமோ கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிபவன் நமக்குச் செவிசாய்க்கிறான். கடவுளைச் சார்ந்திராதவன் நமக்குச் செவிசாய்ப்பதில்லை இதனின்று, உண்மையின் ஆவி எது, ஏமாற்றும் ஆவி எது என்று அறியக்கூடும்.
7. அன்புக்குரியவர்களே, நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்வோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது; அன்பு செய்பவன் எவனும் கடவுளிடமிருந்து பிறந்துள்ளான்; அவனே கடவுளை அறிவான்.
8. அன்பு செய்யாதவனோ கடவுளை அறிவதில்லை. ஏனெனில், அன்பே கடவுள்.
9. தம் ஒரே பேறான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது.
10. நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று அவரே நமக்கு அன்பு செய்து, நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் மகனை அனுப்பியதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
11. அன்புக்குரியவர்களே, கடவுள் நமக்கு இவ்வாறு அன்பு செய்தார் எனில், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தல் வேண்டும்.
12. கடவுளை எவனும் ஒருபோதும் கண்டதில்லை. ஆனால், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தால், கடவுள் நம்முள் நிலைத்திருக்கிறார். அவரது அன்பு நம்மிடம் நிறைவுற்றிருக்கிறது.
13. தம் ஆவியில் அவர் நமக்குப் பங்கு தந்தமையால், நாம் அவருள் நிலைத்திருக்கிறோம் எனவும், அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.
14. தந்தை தம் மகனை உலகின் மீட்பராக அனுப்பினாரென்று கண்டோம்; அதற்குச் சான்று பகர்கின்றோம்.
15. இயேசு கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான்.
16. இங்ஙனம், கடவுள் நம்மீதுகொண்ட அன்பை அறியலானோம்; அந்த அன்பை விசுவசித்தோம். அன்பே கடவுள்; அன்பில் நிலைத்திருப்பவன் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான். கடவுளும் அவனுள் நிலைத்திருக்கிறார்.
17. தீர்ப்பு நாளில் நாம் நம்பிக்கையோடிருப்போம் என எதிர்பார்ப்பதில் அன்பின் நிறைவு நம்மிடம் விளங்குகிறது. இவ்வுலகிலேயே நாம் அவரைப்போல் இருப்பதால் அந்த நம்பிக்கை நமக்குண்டு.
18. அன்பில் அச்சத்துக்கிடமில்லை; நிறை அன்பு அச்சத்தை அகற்றும்; ஏனெனில் அச்சம் கொள்பவன் தண்டனையை எதிர் பார்க்கிறான். அச்சம்கொள்பவனோ அன்பில் நிறைவு பெறவில்லை.
19. அவரே நமக்கு முதலில் அன்பு செய்ததால், நாமும் அன்பு செய்வோமாக.
20. 'நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன். ஏனெனில், கண்ணால் கண்ட சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது.
21. கடவுளுக்கு அன்பு செய்பவன், தன் சகோதரனுக்கும் அன்பு செய்ய வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.