1. வாயிற்காவலரின் பிரிவுகளாவன: கொரேயர் குலத்தைச் சேர்ந்த ஆசாப்பின் மக்களில் கொரேயின் மகன் மெசெலேமியா,
2. மெசெலேமியாவின் புதல்வருள் மூத்தவன் பெயர் சக்கரியாஸ், இரண்டவாது யாதியேல், மூன்றாவது சபாதியாஸ், நான்காவது யாதனாயேல்,
3. ஐந்தாவது ஏலாம், ஆறாவது யொகனான், ஏழாவது எலியோவேனாயி,
4. ஒபெதெதோமின் புதல்வருள் மூத்தவன் பெயர் செமேயியாஸ், இரண்டாவது யோசபாத், மூன்றாவது யொவகா, நான்காவது சாகார், ஐந்தாவது நத்தானியேல்,
5. ஆறாவது அம்மியேல், ஏழாவது இசாக்கார், எட்டாவது பொல்லாத்தி; இவ்வாறு ஆண்டவர் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6. அவனுடைய மகன் செமேயியிக்குப் பிறந்த புதல்வரோ தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்கள் மிக்க ஆற்றல் படைத்தவர்கள்.
7. செமேயியின் புதல்வருள் ஒத்னி, ரபாயேல், ஒபேத், எல்சபாத் ஆகியோரும் இவர்களின் சகோதரர்களும்; இவர்கள் ஆற்றல் மிக்க மனிதராய் இருந்தனர். எலீயுவும் சமாக்கியாசும் மேற்சொல்லப்பட்டவர்களின் சகோதரர்கள்.
8. இவர்கள் எல்லாரும் ஒபெதெதோமின் மக்கள். இவர்களும் இவர்களின் புதல்வரும் சகோதரரும் அறுபத்திரண்டுபேர்; ஒபெதெதோமின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தங்கள் பணியைத் திறமையோடு ஆற்றி வந்தனர்.
9. மெசெலேமியாவின் மக்களும் அவர்கள் சகோதரரும் திறமை மிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
10. மெராரிக்குப் பிறந்த மக்களில் ஒருவனான ஓசாவின் மக்களின் விவரம் வருமாறு: தலைவனான செம்ரி, (இவன் தலைமகன் அல்லன்; எனினும் ஓசா அவனைத் தலைவனாக நியமித்திருந்தான்)
11. இரண்டாவது எல்சியாஸ், மூன்றாவது தபேலியாஸ், நான்காவது சக்கரியாஸ். ஓசாவின் புதல்வர்களும் சகோதரர்களும் மொத்தம் பதின்மூன்று பேர்.
12. இவ்வாறு வாயிற்காவலரின் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தங்கள் சகோதரர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி செய்து வந்தது போலவே, இப்பிரிவுகளின் தலைவர்களும் தங்கள் கடமையை ஆற்றி வந்தனர்.
13. ஆகையால் தங்கள் குடும்பங்களின்படி தாங்கள் காவல் புரிய வேண்டிய வாயிலை அறிந்து கொள்ளும் பொருட்டு, பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றிச் சீட்டுப் போட்டனர்.
14. இவ்வாறு சீட்டுப் போட்ட போது கிழக்கு வாயிலுக்குச் சீட்டு செலேமியாசுக்கு விழுந்தது. வடக்கு வாயிலுக்குச் சீட்டு மிக்க விவேகமும் அறிவும் படைத்த சக்கரியாசுக்கு விழுந்தது.
15. ஒபெதெதோமுக்குத் தெற்கு வாயிலும் அவன் புதல்வருக்குப் பண்டசாலையும் கிடைத்தன.
16. செபீமுக்கும் ஓசாவுக்கும் மேற்கு வாயிலுக்கும் மலைக்குப் போகும் வழியில் இருந்த ஷல்லேகத் வாயிலுக்கும் சீட்டு விழுந்தது. அவர்கள் காவலிருக்க வேண்டிய இடங்கள் அடுத்தடுத்து இருந்தன.
17. கிழக்கே லேவியர் ஆறுபேரும் வடக்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும், தெற்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும் பண்டசாலையில் பக்கத்துக்கு இருவராக நால்வரும் நியமிக்கப் பட்டனர்.
18. மேற்கிலிருந்த காவலர் அறைகளினருகே அறைக்கு இருவரும் வழியிலே நால்வரும் நிறுத்துப்பட்டனர்.
19. கொரே, மெராரி, என்பவர்களின் புதல்வர்கள் இவ்வாறு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
20. மற்ற லேவியருள் ஆகியாஸ் கடவுளின் ஆலயக் கருவூலங்களுக்கும், கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளைச் சேர்த்து வைத்திருந்த அறைகளுக்கும் பொறுப்பு ஏற்றிருந்தான்.
21. லேதானின் புதல்வர்கள்: லேதான் வழிவந்த கெர்சோனியர், கெர்சோனியனான லேதானின் வம்சத்தில் தலைவனான எகியேலியும்,
22. எகியேலியின் மக்களான சேத்தாமும் அவன் சகோதரரான யோவேலுமே. இவர்கள் ஆண்டவரின் ஆலயக் கருவூலங்களுக்குப் பொறுப்பாய் இருந்தனர்.
23. அம்ராம், இசார், எப்பிரோன், ஒசியேல் ஆகியோரின் குடும்பத்தவரிலும் சிலர் அவற்றை மேற்பார்த்து வந்தனர்.
24. மோயீசனுக்குப் பிறந்த கெர்சோமின் மகன் சுபுவேல் கருவூலத் தலைமைக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
25. அவனுடைய சகோதரன் எலியேசரும் அதே அலுவலில் இருந்தான். எலியேசருக்கு ரகாபியா பிறந்தான். ரகாபியாவுக்கு இசயாஸ் பிறந்தான். இவனுக்கு யோராம் பிறந்தான். இவனுக்குச் செக்ரி பிறந்தான். இவனுக்குச் செலேமித் பிறந்தான்.
26. இந்தச் செலேமித்தும் அவன் சகோதரர்களும் காணிக்கைக் கருவூலத்தைக் கண்காணித்து வந்தனர். இந்தப் பொருட்களைத் தாவீது அரசரும், குடும்பத் தலைவர்களும், ஆயிரவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் போர்க்களத்தினின்றும், கொள்ளைப் பொருட்களினின்றும் எடுத்து,
27. ஆண்டவரின் ஆலயத்தைப் பழுது பார்க்கவும் அதற்குத் தேவையான தட்டுமுட்டுகளைச் செய்வதற்கும் கோவிலுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்திருந்தனர்.
28. இவ்வாறே திருக்காட்சியாளர் சாமுவேலும் சீசின் மகன் சவுலும், நேரின் மகன் அப்நேரும், சார்வியாவின் மகன் யோவாபும் காணிக்கைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தனர். இக்காணிக்கைப் பொருட்கள் எல்லாம் செலேமித்தின் கவனிப்பிலும் அவன் சகோதரரின் கவனிப்பிலும் இருந்து வந்தன.
29. இஸ்ராயேலுக்குக் கல்வி புகட்டுவதும் நீதி வழங்குவதுமான வெளிவேலையைப் பார்த்து வந்தவர்கள் இசார் குலத்தினரே. கொனேனியாசும், அவன் புதல்வரும் அவர்களுக்கு மேல் அதிகாரிகளாய் இருந்தனர்.
30. எரிரோனியரில் அசாபியாசும் அவனுடைய சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு ஆற்றல் மிக்க மனிதர்கள், யோர்தானுக்கு அக்கரையில் மேற்கே வாழ்ந்து வந்த இஸ்ராயேலின் மேல் ஆண்டவரின் எல்லாத் திருப்பணிக்கும் அரசனின் ஊழியத்திற்கும் அடுத்த காரியங்களில் அதிகாரிகளாய் இருந்தனர்.
31. எபிரோனியரின் தலைமுறைகளுக்கும் வம்சங்களுக்கும் ஏரியாவே தலைவனாய் இருந்தான். தாவீதுடைய ஆட்சியின் நாற்பதாம் ஆண்டில் அவர்களைப்பற்றிய கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவர்களுக்குள் கலாத் நாட்டு யாசேரில் சில ஆற்றல் படைத்த ஆடவர் இருப்பதாகத் தெரிய வந்தது.
32. வலிமை வாய்நதவர்களும் குடும்பத் தலைவர்களுமான அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பேர் இருந்தனர். தாவீது அரசர் ஆண்டவரின் திருப்பணிக்கும் அரச அலுவலுக்கும் அடுத்த காரியங்களில் ரூபானியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவர்களைத் தலைவர்களாய் ஏற்படுத்தினார்.