1. சாத்தான் இஸ்ராயேலுக்கு எதிராக எழுந்து இஸ்ராயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டி விட்டது.
2. அவ்வாறே தாவீது யோவாபையும், படைத் தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் போய்ப் பெத்சபே முதல் தாண் வரை வாழ்ந்து வரும் இஸ்ராயேல் மக்களைக் கணக்கிட்டு, தொகையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை அறிய வேண்டும்" என்றார்.
3. அதற்கு யோவாப், "ஆண்டவர் தம் மக்களை இப்போது இருப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாய்ப் பெருகச் செய்வாராக. என் தலைவராகிய அரசே! எல்லாரும் உம் ஊழியரல்லரோ? பின் ஏன் தாங்கள் மக்களின் தொகைக் கணக்கு எடுக்க வேண்டும்? இதன் மூலம் ஏன் இஸ்ராயேலின் மேல் பாவம் வருவிக்க வேண்டும்?" என்றான்.
4. ஆனால் தம் கட்டளையை அரசர் யோவாப் மேல் திணித்தார். எனவே யோவாப் புறப்பட்டுச் சென்று இஸ்ராயேல் முழுவதும் சுற்றி விட்டு, யெருசலேமுக்குத் திரும்பி வந்தான்.
5. தான் கணக்கிட்ட மக்களின் தொகையைத் தாவீதிடம் கொடுத்தான். இஸ்ராயேலில் வாளேந்தும் வீரர் பதினொரு லட்சம் பேரும், யூதாவிலே போர்வீரர் நான்கு லட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.
6. ஆனால் அரசரின் கட்டளையை வேண்டா வெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமீன் குலத்தினரை யோவாப் கணக்கிடவில்லை.
7. இக்கணக்கெடுப்பு கடவுளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர் இஸ்ராயேலரைத் தண்டித்தார்.
8. தாவீது கடவுளை நோக்கி, "நான் இக்காரியத்தைச் செய்து மிகவும் பாவியானேன். மதிகெட்டே இதைச் செய்தேன். ஆகையால் அடியேனின் அக்கிரமத்தை அருள்கூர்ந்து மன்னித்தருள வேண்டும்" என்று வேண்டினார்.
9. அப்போது ஆண்டவர் தாவீதின் இறைவாக்கினரான காத் என்பவருடன் பேசி,
10. நீ தாவீதிடம் போய், 'ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறோம்; உன் விருப்பப்படி அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள், அதை நாம் உனக்குச் செய்வோம்' என்று சொல்" என்றார்.
11. காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி,
12. ஆண்டவரின் திருவாக்கைக் கேளும்: மூன்றாண்டுகளுக்குப் பஞ்சம் வரும்; அல்லது உம் எதிரிகளை வெல்ல இயலாது, அவர்களுக்கு முன் மூன்று மாதம் புறமுதுகுகாட்டி ஓடுவாய்; அல்லது ஆண்டவரின் வாளாகக் கொள்ளை நோய் நாட்டில் மூன்று நாள் நிலவும்; இஸ்ராயேல் நாடெங்கணும் ஆண்டவரின் தூதர் மக்களைக் கொல்லுவார்: இம்மூன்றில் எதை நீர் தேர்ந்து கொள்ளுகிறீர்? என்னை அனுப்பினவருக்கு நான் பதில் சொல்லுமாறு அதைப்பற்றி எண்ணிப் பாரும்" என்றார்.
13. தாவீது காத்தை நோக்கி, "துன்பங்கள் என்னை நாற்புறத்திலுமே நெருக்குகின்றன. ஆனால் மனிதர் கையில் சரண் அடைவதை விட ஆண்டவரின் கைகளில் நான் சரண் அடைவதே மேல். ஏனெனில், அவர் மிகவும் இரக்கம் கொண்டவர்" என்றார்.
14. ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின் மேல் கொள்ளைநோயை அனுப்பினார். அதனால் இஸ்ராயேலருள் எழுபதினாயிரம்பேர் மடிந்தனர்.
15. யெருசலேமையும் தண்டிக்க ஆண்டவர் ஒரு தூதரை அனுப்பினார். அத்தூதுவர் நகரைத் தண்டித்த போது ஆண்டவர் அந்த மாபெருந் தீங்கைப் பார்த்து மனமிரங்கினார். எனவே உயிர்களைப் பறித்துக் கொண்டிருந்த தூதரை நோக்கி, "போதும்; இப்போது உன் கையை நிறுத்து" என்று கட்டளையிட்டார். ஆண்டவரின் தூதர் அப்பொழுது செபுசையனான ஒர்னானுடைய களத்தருகே நின்று கொண்டிருந்தார்.
16. தாவீது தம் கண்களை உயர்த்தி, விண்ணிற்கும் மண்ணிற்கும் நடுவே ஆண்டவரின் தூதர் நிற்பதையும், அவரது கையில் இருந்தவாள் யெருசலேமை நோக்கி நீட்டப்பட்டிருந்ததையும் கண்டார். அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் கோணியாடை உடுத்திக் கொண்டவர்களய்த் தரையில் நெடுந்தெண்டனிட்டு விழுந்தனர்.
17. அப்பொழுது தாவீது கடவுளை நோக்கி, "மக்கள் தொகையைக் கணக்கிடக் கட்டளையிட்டவன் நான் அல்லவா? நானே பாவம் செய்தவன், தீமை புரிந்தவனும் நானே. இந்த மந்தை என்ன குற்றம் செய்தது? என் ஆண்டவராகிய கடவுளே, உமது கரம் எனக்கும் என் தந்தை வீட்டாருக்கும் எதிராய்த் திரும்பட்டும். உம் மக்களைத் தண்டியாதேயும்" என்று மன்றாடினார்.
18. அப்பொழுது ஆண்டவரின் தூதர் காத்தை நோக்கி, "தாவீது செபுசையனான ஒர்னானுடைய களத்திற்குச் சென்று அங்கு ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டச்சொல்" என்றார்.
19. ஆண்டவர் திருப்பெயரால் காத் கூறியிருந்தபடியே தாவீதும் சென்றார்.
20. ஒர்னானும் அவனுடைய நான்கு புதல்வரும் அந்நேரத்தில் களத்தில் போரடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நிமிர்ந்து தூதரைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டனர்.
21. பின்னர் தாவீது தம்மிடம் வருகிறதைக் கண்டு ஒர்னான் களத்திலிருந்து அவருக்கு எதிர்கொண்டு போனான்; தரையில் விழுந்து அவரை வணங்கினான்.
22. தாவீது அவனை நோக்கி, "உனது களத்தை எனக்குக் கொடு, கொள்ளைநோய் மக்களை விட்டு நீங்கும்படி இக்களத்திலே நான் ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும். அதன் விலையை உனக்குத் தந்து விடுகிறேன்" என்றார்.
23. ஒர்னான் தாவீதை நோக்கி, "அரசராகிய என் தலைவர் அதை வாங்கிகொண்டு தம் விருப்பப்டியெல்லாம் செய்வாராக. இதோ தகனப்பலிகளுக்கு மாடுகளையும் விறகுவண்டிகளையும், பலிக்குப் பயன்படும் கோதுமையையும், கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு தருகிறேன், எடுத்துக்கொள்ளும்" என்றான்.
24. அதற்கு தாவீது அரசர், "அப்படியன்று, நான் அதற்கு உள்ள விலையைத் தந்து விடுகிறேன். உன்னுடையதை நான் இலவசமாய்ப் பெற்றுக் கொண்டு செலவின்றி ஆண்டவருக்குத் தகனப்பலிகளைச் செலுத்தமாட்டேன்" என்றார்.
25. அவ்வாறே தாவீது அறுநூறு சீக்கல் நிறை பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, அந்நிலத்தை வாங்கினார்.
26. பின் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பி, அதிலே தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்து ஆண்டவரைத் தொழுதார். ஆண்டவர் வானிலிருந்து தகனப் பலிபீடத்தின் மேல் நெருப்பை இறங்கச்செய்து, அவரது மன்றாட்டைக் கேட்டருளினார்.
27. அப்பொழுது ஆண்டவரின் கட்டளைப்படி தூதர் தம் வாளை உறையில் போட்டார்.
28. செபுசையனான ஒர்னானின் களத்திலே ஆண்டவர்தம் மன்றாட்டைக் கேட்டருளினார் என்று தாவீது கண்டு அங்கே தாமே பலிகளைச் செலுத்தினார்.
29. பாலைவனத்தில் மோயீசன் கட்டியிருந்த ஆண்டவரின் திருக் கூடாரமும், தகனப் பலிகளின் பீடமும் அச்சமயம் கபாவோனின் மேட்டில் இருந்தன.
30. அங்கிருந்த ஆண்டவரின் பீடத்திற்குச் சென்று செபம் செய்யத் தாவீதால் கூடவில்லை. ஏனெனில் ஆண்டவரின் தூதர் தாங்கியிருந்த வாளைக் கண்டு பேரச்சம் கொண்டிருந்தார்.