1. பின்னர் தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை வீழ்த்தி கேத்தையும் அதற்கடுத்த ஊர்களையும் பிலிஸ்தியரின் கையிலிருந்து கைப்பற்றினார்.
2. மோவாபியரையும் தோற்கடித்தார்; அவர்கள் தாவீதுக்கு அடி பணிந்து அவருக்குக் கப்பம் செலுத்தி வந்தனர்.
3. அக்காலத்தில் தாவீது தம் அரசை யூப்ரட்டீஸ் நதி வரை பரப்ப எண்ணி, ஏமாத் நாட்டைச் சேர்ந்த சோபாவின் அரசன் அதரேசரை வென்றார்.
4. தாவீது அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட் படையினரையும் கைப்பற்றினார். தமக்கென்று நூறு தேர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றத் தேர்களின் குதிரைகளுக்கெல்லாம் கால் நரம்பை வெட்டிப் போட்டார்.
5. தமாஸ்கு நகர்வாழ் சீரியர்கள் சோபாவின் அரசன் அதரேசருக்கு உதவி செய்ய வந்தனர். தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் வீரர்களை மாய்த்துப் போட்டார்.
6. சீரியர்களையும் தமக்குப் பணியவைக்கும் எண்ணத்தோடு தமாஸ்குவிலும் படைகளை நிறுத்தினார். சீரியரும் தாவீதுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
7. மேலும் தாவீது, அதரேசரின் ஊழியர் வைத்திருந்த பொற்கேடயங்களை எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
8. அதரேசருக்குச் சொந்தமாயிருந்த தெபாத், கூன் என்ற நகர்களிலிருந்து ஏராளம் வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு தான் சாலமோன் வெண்கலக் கடல் தொட்டியையும், தூண்களையும், வெண்கலத் தட்டுமுட்டுகளையும் செய்வித்தார்.
9. தாவீது சோபாவின் அரசன் அதரேசரின் படை அனைத்தையும் வெட்டி வீழ்த்திய செய்தியை ஏமாத்தின் அரசன் தோவு கேள்விப்பட்டான்.
10. அதரேசரோடு போராடி அவனை முறியடித்து வென்றதற்காகத் தன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தாவீது அரசருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, உடனே தன்மகன் அதோராமை அவரிடம் அனுப்பி வைத்தான். ஏனெனில் தோவு அதரேசருக்கு எதிரியாயிருந்தான். மேலும் பொன், வெள்ளி, வெண்கலத்தாலான எல்லாவிதத் தட்டுமுட்டுகளையும் அவருக்கு அனுப்பி வைத்தான்.
11. தாவீது அரசர் இவற்றையும் தாம் இதுமேயர், மோவாபியர், அம்மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலிய இனத்தாரிடமிருந்து கொண்டுவந்திருந்த பொன்னையும், வெள்ளியையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்.
12. சார்வியாவின் மகன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்தான்.
13. தாவீது ஏதோமில் காவல்படைகளை நிறுத்தினார். அதனால் இதுமேயர் அனைவரும் அவருக்கு அடிமைகளாயினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
14. ஆகையால் தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தித் தம் குடிகளுக்கெல்லாம் நீதி வழங்கி வந்தார்.
15. சார்வியாவின் மகன் யோவாபு படைத்தலைவனாய் இருந்தான். அகிலூதுவின் மகன் யோசபாத் பதிவாளனாய் அலுவல் புரிந்து வந்தான்.
16. அக்கிதோபின் மகன் சாதோக்கும், அபியாத்தாரின் மகன் அக்கிமலேக்கும் குருக்களாய் விளங்கினர். சூசா என்பவனோ எழுத்தனாயிருந்தான்.
17. யோயியாதாவின் மகன் பனாயியாசு, கெரேத்தியர் படைக்கும் பெலேத்தியர் படைக்கும், தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வர் அரசர் முன்னிலையில் முதலிடங்களை வகித்து வந்தனர்.