1. தாவீது தம் அரண்மனையில் குடியேறிய பின்னர் இறைவாக்கினரான நாத்தானை நோக்கி, "இதோ நான் கேதுரு மரவீட்டில் வாழ்கிறேன். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ தோல் திரைகளின் கீழ் இருக்கின்றதே!" என்றார்.
2. அதற்கு நாத்தான் தாவீதைப் பார்த்து, "நீர் விரும்புவதை எல்லாம் செய்யும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
3. அன்றிரவே ஆண்டவரின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது.
4. நீ போய் என் ஊழியன் தாவீதிடம், 'ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: நாம் தங்கியிருக்க நீ நமக்கு ஒரு கோயிலைக் கட்டப் போவதில்லை.
5. ஏனெனில் நாம் இஸராயேலை (எகிப்தினின்றும்) வெளிக்கொணர்ந்த நாள் முதல் இன்று வரை கோவிலில் தங்கியதில்லை. ஆனால் கூடாரத்தில் வெவ்வேறு இடங்களில்,
6. இஸ்ராயேல் அனைத்தோடும் தங்கியிருந்தோம். நம் மக்களை மேய்க்கும்படி நாம் கட்டளையிட்ட இஸ்ராயேலின் நீதிபதிகளில் எவனையாவது நோக்கி, "நீங்கள் நமக்குக் கேதுரு மரத்தால் கோயில் கட்டாதிருப்பது ஏன்?" என்று நாம் கூறியதுண்டோ?
7. ஆகையால் இப்போது நீ நம் ஊழியன் தாவீதுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீ மேய்ச்சல் நிலங்களில் மந்ததையை நடத்தி வந்த போது நாம் உன்னை நம் மக்கள் இஸ்ராயேலுக்குத் தலைவனாகத் தேர்ந்து கொண்டோம்.
8. நீ சென்றவிடமெல்லாம் உன்னோடு இருந்தோம். உன் முன்னிலையில் உன் எதிரிகளைக் கொன்றோம். உலகம் புகழ்ந்து கொண்டாடும் ஆன்றோரின் திருப்பெயரை ஒத்த ஒரு பெயரையும் உனக்கு வழங்கினோம்.
9. நம் மக்களாகிய இஸ்ராயேலருக்கு நாம் ஓர் இடத்தைக் கொடுத்தோம். அதில் அவர்கள் நிலையாய் வாழ்வார்கள். இனி அவர்கள் அலைந்து திரியமாட்டார்கள். முன் நிகழ்ந்தது போல் இனி பாவிகளின் கையில் அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.
10. நாம் நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு நீதிபதிகளை ஏற்படுத்திய காலம் முதல் உன் எதிரிகளைத் தாழ்த்தி வந்தோம். ஆகையால் ஆண்டவர் உனக்காக ஒரு வீட்டைக் கட்டி எழுப்புவார் என்று உனக்கு அறிவிக்கின்றோம்.
11. உன் வாழ்நாளை முடித்து நீ உன் முன்னோரிடம் போக விருக்கும் போது, நாம் உனக்குப் பின் உன் புதல்வருக்குள் ஒருவனை உயர்த்தி அவனது அரசை நிலைநிறுத்துவோம்.
12. அவனே நமக்கு ஆலயத்தைக் கட்டுவான். நாமோ அவனது அரியணையை முடிவில்லாக் காலத்திற்கும் உறுதிப்படுத்துவோம்;
13. நாம் அவனுக்குத் தந்தையாய் இருப்போம். அவன் நமக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து நமது இரக்கத்தை எடுத்துக் கொண்டதுபோல், அவனிடமிருந்து எடுத்து விடமாட்டோம்.
14. அவனை நமது வீட்டிலும், நமது அரசிலும் என்றென்றும் நிலைநாட்டுவோம். அவனது அரியணையும் என்றென்றும் மிகவும் உறுதிபூண்டு விளங்கும்' என்று சொல்" என்றார்.
15. நாத்தான் இந்த வாக்குகள் எல்லாவற்றையும், இந்தக் காட்சிகள் அனைத்தையும் தாவீதிடம் கூறினார்.
16. அப்போது, தாவீது அரசர் ஆண்டவர் திருமுன் சென்று அமர்ந்து கூறியதாவது:"ஆண்டவராகிய கடவுளே! நீர் இத்தகையை பேற்றை அடியேனுக்கு அளிக்க நான் யார்! என் வீடு எம்மாத்திரம்!
17. ஆயினும் அதுவும் உமது பார்வைக்குச் சிறிதாய்த் தோன்றிற்று; எனவே தான் அடியேனுடைய வீட்டைக் குறித்து வரவிருப்பதையும் சொல்லியருளினீர். என் கடவுளாகிய ஆண்டவரே, அடியேனை எல்லா மனிதர்களிலும் சிறந்தவனாக ஆக்கியருளினீர்!
18. நீர் இவ்வாறு தேர்ந்தெடுத்து என்னை மகிமைப்படுத்தியதற்கு ஈடாகத் தாவீது சொல்லக் கூடியது வேறு என்ன உளது?
19. ஆண்டவரே, உம் அடியான் பொருட்டு உமது திருவுளப்படி இத்தகைய மாண்பை எல்லாம் செய்ததுமன்றி உமது வியத்தகு செயல்களை மக்கள். அறியும்படியும் செய்தீர்.
20. ஆண்டவரே, நாங்கள் அறிந்த அனைவரிலும் உமக்கு இணையானவர் யாருமில்லை. உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை.
21. உண்மையில் உம் மக்கள் இஸ்ராயேலருக்கு இணையான வேறு மக்களும் உண்டோ? மண்ணில் இந்த இனத்தை மட்டும் கடவுளாகிய நீர் மீட்கவும், உம் மக்களாக்கவும்., எகிப்திலிருந்து மீட்டுவந்த அம்மக்களின் முகத்தே வேறு இனமக்களை உமது மகத்துவத்தினாலும் உம் மேல் கொண்ட அச்சத்தாலும் துரத்தவும் திருவுளமானீர்.
22. மேலும் உம் மக்களான இஸ்ராயேலரை என்றென்றும் உம் மக்களாகவே வைத்துக்கொண்டீர். ஆண்டவரே, நீரே அவர்களின் கடவுளானீர்.
23. ஆகையால், இப்போது, ஆண்டவரே, நீர் உம் அடியானையும், அவனது வீட்டையும் பற்றிக் கூறிய வாக்கு என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். நீர் கூறியபடியே செய்தருளும்.
24. உமது திருப்பெயர் என்றென்றும் நிலைநின்று மாண்பு பெறட்டும். சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலின் கடவுள் என்றும், அவருடைய ஊழியன் தாவீதின் வீடு அவர் திருமுன் எக்காலமும் நிலைநிற்கிறது என்றும் சொல்லப்படட்டும்.
25. என் ஆண்டவராகிய கடவுளே, 'நாம் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவோம்' என்று நீரே எனக்கு வெளிப்டுத்தினீர். எனவே உம் அடியானான நான் உமது திருமுன் வேண்டுதல் செய்யத் துணிவு பெற்றுள்ளேன்.
26. ஆண்டவரே, நீரே கடவுள்; நீர் இத்துணை நலன்களை உம் ஊழியனுக்குத் தருவதாய்க் கூறினீரே!
27. உம் ஊழியனது வீடு என்றென்றும் உமது திருமுன் நிலைநிற்கும்படி, அதற்கு உம் ஆசீரை வழங்கத் தொடங்கியுள்ளீர்; ஆண்டவராகிய உமது ஆசீரால் அது என்றென்றும் ஆசீர் பெறும்."