1. தீரின் அரசன் ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவருக்கு ஓர் அரண்மனை கட்டுவதற்குப் போதுமான கேதுரு மரங்களையும் கொத்தர்களையும் தச்சர்களையும் அனுப்பி வைத்தான்.
2. ஆண்டவர் தம்மை இஸ்ராயேலின் மேல் அரசனாக உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், அவருடைய மக்களாகிய இஸ்ராயேலின் மேல் தம் அரசை மேன்மைப்படுத்தியுள்ளார் என்றும் இதனால் தாவீது அறிந்து கொண்டார்.
3. அவர் யெருசலேமில் இன்னும் பல பெண்களை மணமுடித்துப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்.
4. யெருசலேமில் அவருக்குப் பிறந்த புதல்வர்களின் பெயர்களாவன: சாமுவா, சோபாத், நாத்தான், சாலமோன்,
5. யெபகார், எலீசுவா, எலிப்பலேத், நோகா,
6. நாப்பேக், யாப்பியா,
7. எலீசமா, பாலியாதா, எலிப்பலேத்.
8. தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் அரசராக அபிஷுகம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கேள்விப் பட்ட பிலிஸ்தியர் எல்லாரும் அவரைப் பிடிக்க தேடிப் புறப்பட்டு வந்தனர். அதைத் தாவீது அறிந்து அவர்களுக்கு எதிராய்ப் படையுடன் சென்றார்.
9. பிலிஸ்தியரோ வந்து ரப்பாயீம் பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள்.
10. தாவீது ஆண்டவரை நோக்கி, "நான் பிலிஸ்தியரைத் தாக்கினால் நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா?" என்று கேட்டார். "போ; அவர்களை உன் கையில் ஒப்படைப்போம்" என்றார் ஆண்டவர்.
11. அவர்கள் பால்பரசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்தார். "வெள்ளம் அழிப்பது போல ஆண்டவர் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார்" என்றார். அதன் காரணமாகவே அவ்விடத்திற்குப் பால்பரசீம் என்று பெயரிட்டனர்.
12. அவர்கள் தங்கள் தெய்வங்களை அங்கே விட்டு விட்டுப் போயிருந்தார்கள். அவற்றை தாவீது தீக்கிரையாக்கக் கட்டளையிட்டார்.
13. இன்னொரு முறையும் பிலிஸ்தியர் திடீரென வந்து பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள்.
14. திரும்பவும் தாவீது கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், "நீ அவர்களை முன்னின்று தாக்காமல், அவர்களைச் சுற்றி வளைத்து பீர் மரங்களுக்கு எதிரே அவர்களைத் தாக்கு.
15. பீர் மரங்களின் உச்சியில் யாரோ நடந்துவரும் சத்தத்தை நீ கேட்பாய்; உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில் பிலிஸ்தியர் படையை முறியடிக்கும்படி கடவுள் உனக்குமுன் ஏறிச் செல்கிறார்" என்றார்.
16. கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே தாவீது செய்து, காபாவோன் முதல் காசேரா வரை பிலிஸ்தியர் படைகளை முறியடித்தார். இவ்வாறு தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் விளங்கிற்று.
17. ஆண்டவர் எல்லா நாடுகளும் அவருக்கு அஞ்சும்படி செய்தார்.