1. பிலிஸ்தியரோ கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு சனுகுப் பாறையினின்று அசோத்துக்கு வந்தனர்.
2. பிலிஸ்தியர் கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு தாகோன் கோவிலினுள் அதைக் கொணர்ந்து தாகோன் அருகில் இருந்தினர்.
3. அசோத்தியர் மறுநாள் அதிகாலையில் எழுந்தபோது, இதோ, ஆண்டவரின் பேழைக்கு முன் தாகோன் முகங்குப்புற விழுந்து கிடக்கக் கண்டனர். தாகோனைத் தூக்கி அந்த இடத்தில் வைத்தனர்.
4. மீண்டும் மறுநாள் காலையில் எழுந்த போது தாகோன் ஆண்டவரின் பேழைக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடக்கக் கண்டனர். தாகோன் தலையும் அதன் இரு உள்ளங்கைகளும் வாயிற்படியில் வெட்டுண்டு கிடந்தன.
5. தாகோனின் முண்டம் மட்டும் தன் இடத்தில் இருந்தது. இதன் காரணமாக, இன்று வரை தாகோன் குருக்களும் அதன் கோவிலில் நுழைபவர்கள் எல்லாருமே அசோத்திலுள்ள அந்தத் தாகோன் கோவிலின் வாயிற் படியை மிதிக்கிறதில்லை.
6. மேலும், ஆண்டவரின் கை அசோத்தியர்மேல் வன்மையாக விழுந்தது. அவர் அவர்களைத் தண்டித்தார். அசோத்திலும் அதன் எல்லைகளிலும் இருந்தவர்களுக்கு மறைவிடத்தில் நோய் வரச்செய்தார். அன்றியும் அந்நாட்டின் நடுவேயிருந்த ஊர்களிலும் வயல்களிலும் மக்கள் கலங்கும்படி கணக்கற்ற எலிப்படை தோன்றினது; ஊரிலும் சாவின் குழுப்பம் அதிகமாயிருந்தது.
7. அசோத் மனிதர் இத்துன்பத்தைப் பார்த்து, "இஸ்ராயேல் கடவுளின் பேழை நம்மிடம் இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும் நம் தெய்வமாகிய தாகோன் மேலும் வன்மையாக விழுந்துள்ளது" என்றனர்.
8. பிலிஸ்தியர் ஆட்களை அனுப்பி, தம் நாட்டுத் தலைவர்களைக் கூட்டி, "இஸ்ராயேல் கடவுளின் பேழையை என்ன செய்யலாம்?" என்றனர். "இஸ்ராயேல் கடவுளின் பேழை இங்கே ஊர்வலமாக வரட்டும்" என்று கெத் நகர மக்கள் கூறினர். அதன்படியே இஸ்ராயேல் கடவுளின் பேழையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றனர்.
9. அதை அவர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் ஆண்டவரின் கை ஒவ்வொரு நாட்டிலும் பலரை மடியச் செய்தது. குழந்தை முதல் கிழவன் வரை ஒவ்வொரு நகரிலும் மனிதரை அவர் தண்டித்தார். அவர்கள் குடல்கள் வெளிப்பட்டு நாற்றம் வீசினது. கெத் நகரத்தார் ஆலோசனை செய்து தங்களுக்குத் தோலால் இருக்கைகள் செய்து கொண்டனர்.
10. பிறகு கடவுளின் பேழையை அக்கரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை அக்கரோனுக்கு வந்தபோது அக்கரோனியர், "எங்களையும் எங்கள் மக்களையும் கொல்ல இஸ்ராயேல் கடவுளின் பேழையை எங்களிடம் கொண்டு வந்துள்ளனர்" என்று சொல்லிக் கூச்சலிட்டார்கள்.
11. அப்பொழுது அவர்கள் பிலிஸ்தியருடைய ஆளுநர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து கூட்டம் கூடி, "இஸ்ராயேல் கடவுளின் பேழை எங்களையும் எங்கள் மக்களையும் கொல்லாதபடி அதன் இருப்பிடத்திற்குத் திரும்ப அனுப்பி விடுங்கள்" என்றனர்.
12. உண்மையில், ஒவ்வொரு நகரிலும் சாவைப்பற்றிய அச்சம் இருந்து வந்தது. கடவுளின் கைவன்மை மிகக் கொடூரமாய் இருந்தது. சாகாத ஆண் பிள்ளைகள் தம் மறைவிடங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாட்டின் அழுகைக் குரலும் வான்மட்டும் எழும்பியது.