1. ரொபோவாமை அரசனாக்கும்படி இஸ்ராயேலர் அனைவரும் சிக்கேமில் ஒன்று கூடியிருந்ததால், அவனும் சிக்கேமுக்கு வந்தான்.
2. சாலமோன் அரசருக்கு அஞ்சி ஓடிப்போய் எகிப்தில் குடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாமோ, சாலமோன் இறந்ததைக் கேள்வியுற்று அங்கிருந்து திரும்பி வந்தான்.
3. ஏனெனில் அவர்கள் எரோபோவாமுக்கு ஆள் அனுப்பி அவனை வரவழைத்திருந்தனர். அப்படியே அவனும் வர, இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ரொபோவாமிடம் வந்து அவனை நோக்கி,
4. உம் தந்தை பாரமான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார். இப்போது நீர் உம் தந்தை கொடுங்கோன்மையாய் ஆண்ட விதத்தைச் சற்று மாற்றி அவர் எங்கள் மேல் வைத்த பளுவான நுகத்தையும் இலகுவாக்க வேண்டும். அப்படிச் செய்வீராகில் நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றனர்.
5. அதற்கு ரொபோவாம், "நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.
6. அப்பொழுது அரசன் ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவர் முன்னிலையில் நின்ற முதியோரோடு கலந்து ஆலோசித்து, "இம்மக்களுக்கு மறுமொழி சொல்ல நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள், "நீர் இன்று இம்மக்களைச் சகித்து, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் கேட்டபடி செய்து, நயமான வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்வீரானால் எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியராய் இருப்பார்கள்" என்றனர்.
8. முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ரொபோவாம் தள்ளி விட்டுத் தன்னோடு வளர்ந்து தன்னோடு வாழ்ந்து வந்த வாலிபரோடு ஆலோசனை செய்து, அவர்களை நோக்கி,
9. உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும்' என்று என்னிடம் சொன்ன இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?" என்றான்.
10. அப்போது அவனோடு வளர்ந்து வந்த வாலிபர் அவனை நோக்கி, "உம் தந்தை கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். நீர் எங்கள் துன்பம் துடைத்தருளும்' என்று உம்மிடம் சொன்ன இம்மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: 'என் சுண்டு விரல் என் தந்தையின் உடலை விடப் பருமனாயிருக்கிறது.
11. இப்பொழுது என் தந்தை பாரமான நுகத்தை உங்கள் மேல் சுமத்தியுள்ளார்; நானோ அதன் பளுவை இன்னும் அதிகப் படுத்துவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்' என்று நீர் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்" என்றனர்.
12. மூன்றாம் நாள் என்னிடம் வாருங்கள்" என்று மன்னன் சொல்லியிருந்தபடியே எரோபோவாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளில் ரொபோவாமிடம் வந்தனர்.
13. அப்பொழுது அரசன் முதியோர் தனக்குச் சொல்லியிருந்த ஆலோசனையைத் தள்ளி விட்டு மக்களோடு மிகக் கடுமையாய்ப் பேசினான்.
14. வாலிபர்களின் ஆலோசனையின்படி அவன் அவர்களைப் பார்த்து, "என் தந்தை உங்கள் நுகத்தைப் பளுவாக்கினார்; நான் உங்கள் நுகத்தை இன்னும் பளுவுள்ளதாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்" என்று மக்களுக்குப் பதில் கூறினான்.
15. இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடாமல் போனான். ஏனெனில் சிலோனித்தராகிய அகியாசைக் கொண்டு ஆண்டவர் நாபாத்தின் மகன் எரோபொவாமுக்குச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படி ஆண்டவரே இவ்வாறு செய்தார்.
16. மன்னன் தங்களுக்குச் செவி கொடாததைக் கண்ட மக்கள் அரசனுக்கு மறுமொழியாக, 'தாவீதோடு எங்களுக்குப் பங்கு ஏது? இசாயியின் மகனிடம் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இஸ்ராயேலே உன் கூடாரத்திற்குப் போய்விடு. தாவீதே உன் வீட்டுக் காரியத்தை நீயே கவனித்துக் கொள்" என்று சொல்லி இஸ்ராயேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டனர்.
17. எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் மேல் ரொபோவாம் ஆட்சி செய்து வந்தான்.
18. பின்பு அரசன் ரொபோவாம் கப்பம் வசூலித்து வந்த அதுராமை அனுப்பினான். இஸ்ராயேலர் எல்லாரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்போது அரசன் ரொபோவாம் விரைந்து தேர்மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப்போனான்.
19. அப்படியே இன்று வரை இஸ்ராயேலர் தாவீதின் வம்சத்தை விட்டுப் பிரிந்து போயிருக்கிறார்கள்.
20. எரோபோவாம் திரும்பி வந்தான் என்று இஸ்ராயேலர் அனைவரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் ஒரு பெரும் சபையைக் கூட்டி அவனை வரவழைத்து இஸ்ராயேல் முழுவதற்கும் அவனை அரசனாக ஏற்படுத்தினார்கள். அன்று முதல் யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு எவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.
21. ரொபோவாமோ யெருசலேமுக்கு வந்து இஸ்ராயேல் வம்சத்தாரோடு போரிடவும், நாட்டைத் தன் கைவயப்படுத்திக் கொள்ளவும், யூதாவின் வீட்டாரையும் பெஞ்சமின் கோத்திரத்தாரையும் ஒன்று திரட்டினான். தேர்ந்தெடுத்த இலட்சத்து எண்பதினாயிரம் போர்வீரர்கள் இருந்தனர்.
22. அப்போது கடவுளின் மனிதராகிய செமேயியாவுக்கு ஆண்டவர் சொன்னதாவது:
23. நீ யூதாவின் அரசன் ரொபோவாம் என்ற சாலமோனின் மகனையும், யூதா கோத்திரத்தார் அனைவரையும் பெஞ்சமீனரையும், மற்ற மக்களையும் நோக்கி, 'ஆண்டவர் சொல்கிறதாவது:
24. நீங்கள் படையெடுக்கவும் இஸ்ராயேல் மக்களான உங்கள் சகோதரரோடு போரிடவும் வேண்டாம். எல்லாரும் வீடு திரும்புங்கள். இதைச் சொன்னது நாமே' என்று சொல்" என்பதாம். அப்போது அவர்கள் ஆண்டவர் சொன்னதைக் கேட்டு ஆண்டவரின் கட்டளைப்படியே திரும்பிப் போய் விட்டனர்.
25. எரோபோவாமோ, எபிராயீம் மலையின் மேல் சிக்கேமைக் கட்டி அதில் வாழ்ந்து வந்தான். பிறகு அங்கிருந்து போய்ப் பானுவேலையும் அவ்வாறே கட்டினான்.
26. அப்பொழுது எரோபோவாம் தனக்குள் சொல்லிக்கொண்டதாவது: "இப்போது அரசு தாவீதின் குலத்திற்குத் திரும்பி வரும்.
27. இம் மக்கள் யெருசலேமில் உள்ள ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப் போனால் அவர்கள் யூதாவின் அரசன் ரொபோவாம் என்ற தங்கள் தலைவனோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொன்று போடுவர்".
28. தனக்குள் ஆலோசித்த பின் பொன்னால் இரு கன்றுக்குட்டிகளைச் செய்து, மக்களை நோக்கி, "இனி நீங்கள் யெருசலேமுக்குப் போகாதீர்கள். இஸ்ராயேலரே, இதோ எகிப்து நாட்டிலிருந்து உங்களை மீட்டு வந்த உங்கள் தெய்வங்கள்" என்று சொன்னான்.
29. பின்னர் ஒன்றைப் பேத்தலிலும் மற்றொன்றைத் தானிலும் வைத்தான்.
30. இது பாவத்திற்கு ஏதுவாயிற்று. மக்கள் இக் கன்றுக்குட்டியை வணங்க தான் வரை போவார்கள்.
31. அது தவிர எரோபோவாம் மேடுகளில் கோயில்களைக் கட்டி லேவியின் புதல்வராயிராத மக்களில் தாழ்ந்தவர்களைக் குருக்களாக்கினான்.
32. யூதாவில் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரோபோவாம் ஒரு விழாக் கொண்டாடச் செய்தான். அவ்வாறே பேத்தலிலும் செய்து, தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளையும் பீடத்தில் ஏற்றி, அவற்றிற்குப் பலியிட்டுத் தான் அமைத்திருந்த மேடுகளில் இருந்த குருக்களையும் பேத்தலில் ஏற்படுத்தினான்.
33. மேலும் தன் மனம் போல் குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் பேத்தலில் தான் கட்டியிருந்த பலிபீடத்தில் ஏறினான். இஸ்ராயேல் மக்களுக்கென்று விழா அமைத்துப் பலிபீடத்தின் மேல் ஏறித் தூபம் காட்டினான்.