1. {#1அடைக்கலப் பட்டணங்கள் } [PS]பின்பு யெகோவா யோசுவாவிடம் கூறியதாவது:
2. “நான் மோசேயின் மூலமாக உனக்குச் சொன்னபடியே அடைக்கலப் பட்டணங்களை நியமித்துக்கொள்ளும்படி இஸ்ரயேலருக்குச் சொல்.
3. ஒருவன் தற்செயலாகவோ, தவறுதலாகவோ ஒரு கொலையைச் செய்திருந்தால், செய்தவன் தன்னை இரத்தப்பழிவாங்க வருபவனிடமிருந்து தப்பி, அங்கே ஓடிப்போய் பாதுகாப்புப் பெறலாம்.
4. அவன் ஒரு அடைக்கலப் பட்டணத்திற்குத் தப்பி ஓடிப்போனால் அவன் பட்டண நுழைவாசலில் நின்று, தன் வழக்கை பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் சொல்லவேண்டும். அப்பொழுது அவர்கள் அவனைத் தங்கள் பட்டணத்துக்குள் அழைத்துச்சென்று, அவர்கள் மத்தியில் வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கொடுக்கவேண்டும்.
5. இரத்தப்பழி வாங்குபவன் துரத்திக்கொண்டு அங்கே வந்தால், வந்தவனிடம் குற்றம் சாட்டப்பட்டவனைப் பட்டணத்து மக்கள் ஒப்படைக்கக்கூடாது. ஏனெனில் அவன் தன் அயலானுக்குத் தவறுதலாகவும், முன்திட்டமிடாமலும், வெறுப்பின்றியும் இச்செயலைச் செய்திருக்கிறான்.
6. மக்கள் சமுதாயத்திற்கு முன்னே அவன் நியாயம் விசாரிக்கப்படும்வரை அக்காலத்தில் தலைமை ஆசாரியனாய்ப் பணிபுரிபவன் இறக்கும்வரை அவன் அப்பட்டணத்தில் தங்கவேண்டும். அதன்பின் அவன் விட்டுவந்த தன் பட்டணத்தில் உள்ள தன் சொந்த வீட்டிற்குத் திரும்பிச்செல்லலாம்.” [PE]
7. [PS]எனவே நப்தலி மலைநாட்டைச் சேர்ந்த கலிலேயாவிலுள்ள கேதேஸ் பட்டணத்தையும், எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள சீகேம் பட்டணத்தையும், யூதா மலைநாட்டிலுள்ள கீரியாத் அர்பா அதாவது எப்ரோன், பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள்.
8. யோர்தான் நதிக்குக் கிழக்கே ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமான சமபூமியில் இருந்த காடுகளிலுள்ள பேசேர் பட்டணத்தையும், காத் கோத்திரத்தாருக்குரிய கீலேயாத் பிரதேசத்தில் உள்ள ராமோத் பட்டணத்தையும், மனாசேயின் கோத்திரத்தாருக்குரிய பாசான் நாட்டில் கோலான் பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள்.
9. ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்களின் மத்தியில் வாழ்கின்ற அந்நியனோ தற்செயலாக ஒருவனைக் கொன்றிருந்தால், நியமிக்கப்பட்ட இந்த பட்டணங்களுக்கு ஓடிச்செல்லலாம். அவன் மக்கள் சமுதாயத்தின்முன் நியாய விசாரணைக்குக் கொண்டுவரப்படுமுன் இரத்தப்பழிவாங்க வருபவனால் கொல்லப்படக்கூடாது. [PE]