1. {#1அன்பு } [PS]நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன்.
2. நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை.
3. எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. [PE]
4. [PS]அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது.
5. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது.
6. அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும்.
7. அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும். [PE]
8. [PS]அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும்.
9. ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது.
10. ஆனால் முழுநிறைவு வரும்போது, முழுநிறைவற்றது மறைந்துபோகும்.
11. நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
12. இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம்; அப்பொழுதோ, நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறேன்; அப்பொழுதோ, நான் முழுமையாக அறிந்துகொள்வேன். நான் அறிந்துகொள்கிறபடியே முழுமையாக அறிந்து கொள்ளப்படுவேன். [PE]
13. [PS]ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது. [PE]