1. மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
2. அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
3. அதின் வீதிகளில் இரட்டைக் கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
4. எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.
5. என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
6. நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற் போகிறது.
7. ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
8. கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.
9. தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக்கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.