1. {#1பரலோகராஜ்யத்தில் பெரியவன் } [PS]அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
2. இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
3. [SCJ]நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
4. [SCJ]ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.[SCJ.]
5. [SCJ]இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.[SCJ.]
6. [SCJ]என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.[SCJ.]
7. [SCJ]இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ![SCJ.]
8. [SCJ]உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும்.[SCJ.]
9. [SCJ]உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும்.[SCJ.] [PE]
10. {#1காணாமல்போன ஆடுபற்றிய உவமை } [PS] [SCJ]இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
11. [SCJ]மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.[SCJ.]
12. [SCJ]உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?[SCJ.]
13. [SCJ]அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
14. [SCJ]இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.[SCJ.] [PE]
15. {#1உனக்கு விரோதமாக குற்றம் செய்யும் சகோதரன் } [PS] [SCJ]உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.[SCJ.]
16. [SCJ]அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.[SCJ.]
17. [SCJ]அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.[SCJ.]
18. [SCJ]உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
19. [SCJ]அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
20. [SCJ]ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்[SCJ.] என்றார். [PE]
21. {#1இரக்கமற்ற ஊழியனைப்பற்றிய உவமை } [PS]அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
22. அதற்கு இயேசு: [SCJ]ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.[SCJ.]
23. [SCJ]எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.[SCJ.]
24. [SCJ]அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.[SCJ.]
25. [SCJ]கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.[SCJ.]
26. [SCJ]அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.[SCJ.]
27. [SCJ]அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.[SCJ.]
28. [SCJ]அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.[SCJ.]
29. [SCJ]அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.[SCJ.]
30. [SCJ]அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.[SCJ.]
31. [SCJ]நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.[SCJ.]
32. [SCJ]அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.[SCJ.]
33. [SCJ]நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,[SCJ.]
34. [SCJ]அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.[SCJ.]
35. [SCJ]நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்[SCJ.] என்றார். [PE]